மட்டக் களப்பு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் புதன்கிழமை மரணமடைந்துள்ளார். மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானைச் சேர்ந்த பாக்கியராசா (45 வயது) என்பவர் கடந்த 27 ஆம் திகதி சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இவருடைய இரத்தம் களுத்துறையிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இரத்த பரிசோதனை அறிக்கை மூலம் இவர் ஏ எச்1 என்1 என்ற வைரஸினால் பன்றிக்காய்ச்சல் பீடிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து இவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காது மரணமடைந்துள்ளார். இறந்தவரின் உடல் பாதுகாப்பான முறையில் தனிமைப்
படுத்தப்பட்டது.இந்த உடல் பன்றிக்காய்ச்சலினால் இறந்தவரின் உடல்அடக்கம் செய்யப்படும் விதிமுறைக்கு அமைய உறவினர்களிடம் கையளிக்காது நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இதேவேளை,மட்டக்களப்பில் பன்றிக்காய்ச்சலால் ஒரு நோயாளி இறந்த நிலையில் மேலும் இந்த நோயாளர்கள் இருக்கலாமென அஞ்சப்படுகிறது.இந்நோயிலிருந்து மக்களை பாதுகாக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். இதற்காக கருத்தரங்குகள், துண்டுப்பிரசுரங்களை வெளியிடல், பதாகைகளை அமைத்து மக்களை தெளிவுபடுத்த வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.