25

25

‘பொன்சேகாவின் பொறுப்பற்ற கூற்றுக்கு அரசே பதிலளிக்கும் நிலை’ – யாப்பா

anura-priya.jpgசரத் பொன்சேகா படை வீரர்கள் தொடர்பாக பொறுப்பற்ற கூற்றை கூறினாலும் அதற்கு பதில் கொடுக்க வேண்டிய நிலை அரசுக்கே ஏற்பட்டுள்ளது. எனவே, பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் உரிய பதில் கொடுக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும், தகவல், ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அது தவறாக கூறப்பட்டவை என்று பொன்சேகா கூறினாலும் ஐ. நா. சபை இது தொடர்பில் அரசிடமே விளக்கம் கோரியுள்ளது. எனவே, தகுந்த ஆதாரங்களுடன் உரிய பதில் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. அமைச்சர் யாப்பா இங்கு கருத்துத் தெரிவிக்கையில்;

ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியுள்ள சரத் பொன்சேகாவின் கூற்றில் நம்பகத்தன்மை இல்லை. ஏனெனில், ஒரே கூற்று தொடர்பாக மூன்று சந்தர்ப்பங்களில் முன்னுக்குப் பின் முரணான வெவ்வேறு கருத்துக்களை கூறியுள்ளார். நாட்டை காட்டிக்கொடுக்கும் வகையில் ஒன்றுக்கு ஒன்று முரணான சரத் பொன்சேகாவின் கூற்றுக்கு அரசாங்கம் பாராளுமன்ற அமர்வில் விளக்கம் கோரவேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்குச் சென்ற சமயம் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். இதன் மூலம், இதன் பின்னணி என்னவென்பது தெளிவாக தெரிகின்றது.

குறுகிய அரசியல் இலாபத்துக்காக இதுபோன்ற கீழ் தரமான செயற்பாடுகளை செய்யவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை. அவ்வாறான செயலை அரசாங்கம் ஒருபோதும் செய்யப்போவ தில்லை என்றும் அமைச்சர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

பொன்சேகா சன்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியை சி. என். என். பி.பி.சி, தமிழ் நெட், இன்டசிட்டி எக்ஸ்பிரஸ் போன்ற சர்வதேச ஊடகங்கள் முக்கிய செய்தியாக வெளியிட்டுள்ளன. இதனால், சர்வதேச நாடுகளில் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பொன்சேகாவே பதில் கூறவேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். தான் அவ்வாறு கூறவில்லை என்று பொன்சேகா இதுவரைக் கூறவில்லை. தான் கூறிய கருத்துக்கள் தவறாக கூறப்பட்டுள்ளது என்றே கூறியுள்ளார்.

அதே சமயம், இராணுவத் தளபதி பதவியிலிருந்து தான் விலகியமைக்கான காரணத்தை அவர் மூன்று ஊடகங் களில் ஒன்றுக் கொன்று முரணான விதங்களிலேயே கூறியுள்ளார் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். சரத் பொன்சேகாவின் ஒழுக்கம் தொடர்பாக அமைச்சர் இந்த மாநாட்டின்போது கேள்வி எழுப்பினார்.

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக இருந்த பொன்சேகாவை அமெரிக்கா அழைத்தபோது இப்பொழுது நான் என்ன செய்வது என்று ஜே. வி.பி. பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிடம் பொன்சேகா கேட்டார் என்று ரின்வின் கூட்டம் ஒன்றில் கூறியதை பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது. ரில்வியின் அந்த கூற்றுக்கு பொன்சேகா எந்தவித மறுப்பையும் விடுக்கவில்லை. பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி என்ற பதவிலிருக்கும் ஒருவர் மூன்றாம் நபரிடம் இது தொடர்பில் கேட்க முடியும் என்றும். இதுவா பொன்சேகாவின் ஒழுக்கம் என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

புரிந்துணர்வையும் சகிப்புத் தன்மையையும் கட்டியெழுப்புவோம்

mahinda0.jpgநமது நாட்டில் அமைதியையும் சுபீட்சத்தையும் நிலைநாட்டும் வகையில் சமூகங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வையும் சகிப்புத் தன்மையையும் கட்டியெழுப்புவோ மென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, சமாதானத்தின் இளவரசரான இயேசு நாதரின் பிறந்த நாளை முழு உலகமும் பேருவகையுடன் கொண்டாடும் இவ்வேளையில், பயங்கரவாத அச்சுறுத்தலை விட்டும் நீங்கிய ஒரு நாட்டில் இவ்வருட நத்தார் பண்டிகையை கொண்டாடக் கிடைத்தமை இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்களின் மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணமாய் அமைகின்றது.

நத்தார் பண்டிகையின் உண்மையான அர்த்தம் அன்பு, கருணை, கொடை என்பதாகும், இது கிறிஸ்தவ சமயத்தின் அடிப்படை அம்சமான அன்பு பற்றிய போதனையை தன்னுடன் கொண்டுவந்த இயேசுநாதரின் பிறப்பு பற்றிய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்கு குடும்பங்களையும் சமூகங்களையும் ஒன்று சேர்க்கின்றது.

மூன்று தசாப்த காலமாக பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த எமது மக்களின் சிதைந்துபோன வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பி, எமது நாட்டில் அமைதியையும் சுபீட்சத்தையும் நிலைநாட்டும் வகையில் சமூகங்களுக்கு மத்தியில் புரிந்து ணர்வு, சகிப்புத்தன்மை என்ற புதிய பாலங்களைக் கட்டியெழுப்பும் இந்த அன்பையும் கருணையையும் இலங்கை மக்கள் பெரிதும் வேண்டி நிற்கின்றனர்.

பெத்லஹேமில் சிறியதொரு மாட்டுத் தொழுவத்தில் இடம்பெற்ற இயேசு நாதரின் பிறப்பு, அன்பு என்பது எல்லாத் தடைகளையும் தாண்டி வாழ்க்கையில் தாழ் நிலையிலுள்ள மக்கள் முதல் இப்பூவுலகில் எம்முடன் ஒன்றாக வாழும் உயிரினங்கள், எம் எல்லோருக்கும் வளம் சேர்க்கும் இயற்கை ஆகிய எல்லாவற்றையும் தழுவிச் செல்ல வேண்டும் என்பதையே அடையாளப்படுத்தி நிற்கின்றது.

நத்தார் பண்டிகையின் நாதஒலி நல் உள்ளம் படைத்த எல்லோருக்கும் புதியதோர் சமாதான யுகத்திற்கான விடியலை அறிவிப்புச் செய்து நத்தார் பண்டிகையின் மகிழ்ச்சியை பரப்புகின்றது.

பொன்சேகாவை கண்டித்து நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்

colombo.jpgசரத் பொன்சேகா வார இறுதிப் பத்திரிகையொன்றுக்கு வெளியிட்ட கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிற் சங்க தலைவர்களும்- அரசியல்வாதிகளும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் நேற்று கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

அன்று யுத்தத்துக்கு எதிராக பல்வேறு பொய்யான பிரசாரங்களை வெளியிட்ட குறிப்பிட்ட ஊடகம், பொன்சேகாவின் கூற்றுக்கு அதனைவிட அதிக அளவிலான பிரசாரத்தை தமது வெப்தளத்திலும் வேறு ஊடகங்களிலும் பெற்றுக் கொடுத்துள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் கவனமும் திரும்பியுள்ளதால் இலங்கையில் புலிகளுக்கு எதிராக இடம்பெற்ற யுத்தத்தின் இறுதி நாட்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பொன்சேகா வெளியிட்ட கூற்றை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா. செயற்பட்டுள்ளது.

இவ்வாறான கூற்றை வெளியிட்ட பொன்சேகா தொடர்பாக தீர்மானமொன்றை எடுக்குமாறு அரசை நிர்ப்பந்திக்கவும், ஐ.நா. அமைப்பின் அழுத்தங்களுக்கு எதிராகவும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதாக தொழிற்சங்கத் தலைவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சரத் பொன்சேகாவுக்கு எதிரான பல்வேறு கோஷங்களை எழுப்பியதை காண முடிந்தது.

வடக்கு கிழக்கின் ஏழு மாவட்டங்களில் 34 ஆயிரம் கண்ணிவெடிகள் வெடிபொருட்கள், மீட்பு

வடக்கு, கிழக்கு பிரதேசத்திலுள்ள ஏழு மாவட்டங்களில் இராணுவத்தினர் மாத்திரம் இதுவரை 45 கோடி 4 இலட்சத்து 2 ஆயிரத்து 744 சதுர மீற்றர் (450,402,744) நிலப்பரப்பிலிருந்து கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருட் களை அகற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து படையினர் இதுவரை 34 ஆயிரத்து 336 கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருட்களை மீட்டெடுத்து ள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டத்தின் தற்போதைய நிலையை நேரில் பார்ப்பற்கு தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் கொழும்பிலிருந்து ஊடகவியலாளர்கள் குழுவொன்று நேற்றுமுன்தினம் அங்கு அழைத்துச் செல்லப்பட்டது.

பிரதேசத்தின் பாதுகாப்பு நிலைமைகள், நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் செய்து கொடுத்துள்ள வசதிகள் மற்றும் துரித மீள்குடியேற்றத்திற்காக படையினர் மற்றும் ஏனைய அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை ஊடகவியலாளர் குழுவினர் காண முடிந்தது.

பரிய தம்பனை, பெரிய பண்டிவிரிச்சான் ஆகிய பிரதேசங்களில் எப்.எஸ்.டி.யினால் மேற்கொள்ளும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை காண முடிந்தது. இதன் போது அங்கு கூடியிருந்த ஊடகவியலாளரு க்கு கருத்து தெரிவித்த பிரிகேடியர் மேலும் தகவல் தருகையில்,

மக்களை மீளக்குடியமர்த்தும் நோக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை அரசாங்கத்தின் வேண்கோளுக்கிணங்க படையினரும், பல்வேறு வெளிநாட்டு நிபுணத்துவ அமைப்புகளும் மேற்கொண்டு வருகின்றன.

2002ம் ஆண்டு முதல் இதுவரை 34 ஆயிரத்து 336 கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருட்களை இராணுவத்தின் மீட்டெடுத்துள்ளனர். 17,323 கண்ணிவெடிகள், 19 யுத்த தாங்கி ஒழிப்பு கண்ணிகள் 16,994 வெடிபொருட்கள் இவற்றில் அடங்கும் என்றார்.

சுவிஸர்லாந்தை தளமாகக் கொண்ட (பெடரே ஷன் சுவிஸ் டீமைனில்) எப்.எஸ்.டி. என்ற அமைப்பு பெரிய தம்பணை, பெரிய பண்டிவிரிச்சான் பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

இப் பிரதேசத்தில் 2 கோடி 2 இலட்சத்து 74 ஆயிரத்து 571 சதுர மீற்றர் (20,274,571) நிலப்பரப்பிலிருந்து பெருந்தொகையாக கண்ணிவெடிகளையும் பல்வேறு வெடிபொருட்களையும் மீட்டெடுத்துள்ளதாக எப்.எஸ்.டி.அமைப்பின் பிரதிநிதியான இந்திய நாட்டைச் சேர்ந்த மேஜர் ராஜு தெரிவித்தார்.

அடர்ந்த காடுகளும், பாலடைந்த பிரதேசங்களாகும். இருப்பதால் பல்வேறு நவீன இயந்திரங்கள், உத்திகள் இதற்கு பயன்படுத்தப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். கண்ணிவெடி அகற்றும் இராணுவ படைப்பிரிவின் பொறுப்பாளர் கேர்ணல் பிரசந்த விமலசிறி உட்பட உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

நீதியும் சமாதானமும் நிறைந்த சமூகத்தை உருவாக்குவோம்: சரத் பொன்சேகா நத்தார் செய்தி

pr-can.jpgநீதியும், சமாதானமும் நிறைந்ததொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவோம் என ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா தமது நத்தார் செய்தியில் தெரிவித்திருக்கின்றார். அச்செய்தியில் அவர் தெரிவித்துள்ளவை வருமாறு:

உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு சுபீட்சமான வாழ்க்கையைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும், பாவ சாபத்தில் இருந்து மீட்கும்படியாகவும் சிலுவையில் தன்னைத் தானே ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க வந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும்படியாக இந்தக் கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியை வெளியிட எனக்குக் கிடைத்த பாக்கியத்திற்காக நன்றி கூறுகிறேன்.

2009 ஆம் ஆண்டு எனக்கு விசேடமான வருடம். எனக்கு ஒரு சந்தோஷத்தைக் கொண்டுவந்த வருடம். அதாவது, இவ்வருட நத்தார் சந்தோஷத்தோடு சமாதானம் நிறைந்த ஒரு சமூகம் ஒன்று உருவாவதற்கு நான் வழிநடத்திச் சென்ற உறுப்பினர்கள் மிக அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.

காங்கேசன்துறையிலிருந்து தேவேந்திரமுனை வரை அனைத்து மக்களுக்கும் உரித்தான கத்தோலிக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு செல்லத் தடைசெய்யப்பட்ட பரிசுத்த ஸ்தலமாகிய மருதமடு மாதா தேவாலயத்திற்கு மறுபடியும் கத்தோலிக்கர்கள் சுற்றுலாச் சென்று பயமின்றிச் சுதந்திரமாக வணங்கி வரக்கூடியதாயிருக்கின்றபடியால் இன்று எனக்கு மிக்க மகிழ்ச்சியாகவிருக்கிறது.

கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்களின் மத வழிபாடுகளுக்காக அந்த உன்னதமான பூமியை மீட்டெடுப்பதற்கு போராட்டத்தில் உயிர்நீத்த சகல மக்களையும் அதேபோல் இராணுவத்தினரையும், பொலிஸாரையும் சிவில் படையினரையும், எல்லாப் படையணிகளையும் இங்கு நான் நினைவு கூருகிறேன்.

பல மதத்தவர்களும் வாழ்கின்ற இந்த நாட்டில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை வரவேற்கும் இந்த நத்தார் மிக முக்கியமானதாகும். சிங்களம் மற்றும் தமிழ் பேசும் கத்தோலிக்க மதத்தவர்களைப் போன்றே பௌத்த, இந்து, முஸ்லிம் மதத்தவர்களுக்கும் இன்று ஓர் புதிய இலங்கை ஒன்றை அதாவது, ஒற்றுமையான சமாதானத்தின் முன் அநீதியான காரியங்களை அகற்றி, சாதாரணமான கீரிடத்தை தரித்துக்கொள்ளவும் மத வாழ்க்கை உயர்வாக எண்ணும்படியுமான இலங்கையை நிர்மாணிக்கும் பொறுப்பு உண்டு. இந்த படிப்பினையை ஒட்டி கத்தோலிக்கர்களைப் போன்று அனைத்து மதத்தவர்களும் நடப்பதற்கு பிரதிக்ஞை செய்துகொள்ளவேண்டும்.

பௌத்தர்கள், இந்து மத குருமார்கள் போதித்தவையும் இயேசு கிறிஸ்து போதித்தவையைப் போன்றவைதான்.  நீதியான நாட்டைக் கட்டியெழுப்புவதே இங்கு மிக முக்கியமானது. பரிசுத்த வேதாகமத்தில் நீதிமொழியில் இவ்வாறு கூறப்படுகிறது:
உத்தம மனுஷன் தேவனுடைய கிருபையைப் பெறுவான். தீய எண்ணங்கள் உள்ளவனை நியாயம் தீர்ப்பார். மனுஷன் துன்மார்க்கத்திலே நிலைத்திருப்பதில்லை.
நீதிமானின் வேர் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை.

அந்த உன்னதமான இயேசு கிறிஸ்துவின் நத்தார் பிறப்பைக் கொண்டாடும் நாம் நீதிமிக்க மனுஷராக, நீதிமிக்கதான ஒரு சமூகத்தையும் உண்டாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். அந்தப் பரிசுத்தர் காட்டிய உன்னதமான வழி இதுவே.

சகல கத்தோலிக்க மதத்தவர்களுக்கும் சமாதானமும் சந்தோஷமும் நிறைந்த நத்தாரைப் பிரார்த்திக்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்றப் பகுதிகளில் 53 புதிய தபாலகங்கள் – தபால் சேவையை மேம்படுத்த 2,135 மில். ஒதுக்கீடு

வடக்கில் மக்கள் மீளக்குடியமர்ந்த பகுதிகளில் தபால் சேவையை மீண்டும் ஆரம்பிக்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைகளுக்கமைய இந்தப் பகுதிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணிகள் முன்வைக்கப்பட்டு வருவதாகத் தபால், தொலைத் தொடர்புகள் பிரதியமைச்சர் எம். எஸ். செல்லச்சாமி தெரிவித்தார். இதன்படி, ஜனவரி மாதத்திலிருந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட வட பகுதியில் 53 தபாலகங்கள் புதிதாக நிர்மாணிக் கப்படவுள்ளதாகப் பிரதியமைச்சர் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததும், வடக்கில் புதிய தபால் ஊழியர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், தற்காலிக பணிப்பாளர்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். வன்னியில் யுத்தத்தின் காரணமாக சேதமான தபாலகங்களைப் புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு ஏனைய தபாலகங்களில் உள்ள தொலைத்தொடர்பு வசதிகளும் ஏற்படுத்தப்படும். இதேநேரம், தபால் ஊழியர்கள் மூலமாகத் தொலைபேசிப் பாவனை, இணையம் ஆகியவற்றுக்கான முற்கொடுப்பனவு அட்டைகளைப் பொதுமக்களுக்கு விநியோகிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பிரதியமைச்சர் தெரிவித்தார். வடக்கே அடுத்த மூன்றாண்டு திட்டத்தில் தபால் சேவையை மேம்படுத்த 2, 135 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா புதிய நடவடிக்கை – விசாக்கள் தொடர்பில்..

indian-visa.jpgஇந்தியா வுக்கு சென்று திரும்பும் வெளிநாட்டவர்கள்,  இரு மாதங்களுக்குள் அங்கு மீண்டும் செல்வதை தடுக்கும் வகையில்,  நீண்ட கால சுற்றுலா விசாக்களுக்கு இந்தியா கடுமையான விதிகளை கொண்டுவருகிறது. விசாக்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காகவே இந்த புதிய விதிகள் கொண்டுவரப்படுவதாக ஒரு அதிகாரி கூறியுள்ளார். முன்னைய விதிகளின்படி 5 முதல் 10 வருட கால விசாவை வைத்திருப்பவர்கள் 180 நாட்களுக்குள் நாட்டில் இருந்து வெளியேற வேண்டும்.

வணிக மற்றும் தொழில் விசாக்களைப் பெறுவதற்கான கஷ்டமான நடைமுறைகளை தவிர்ப்பதற்கான குறுக்கு வழியாக இதனை பல வெளிநாட்டவர்கள், குறிப்பாக அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் பிரஜைகள் பயன்படுத்துகின்றனர். இந்த மாற்றங்கள் சீரற்ற வகையில் பிரயோகிக்கப்படுவதாக கூறுகின்ற டெல்லிக்கான அமெரிக்கத் தூதரகம்,  தமது நாட்டவர்கள் பலரை இது பாதிக்கும் என்றும் கூறியுள்ளது 

40,000 மெ.தொ. அரிசியை உடன் இறக்குமதி செய்ய அரசு முடிவு

பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிகரித்து வரும் கேள்வியை ஈடுசெய்யும் வகையில் அரசாங்கம் மேலதிகமாக 40 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக நிதியமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர தெரிவித்தார்.

தனியார் வர்த்தகர்கள் பண்டிகைக் காலத்திற்கென விசேடமாக 44 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ள நிலையிலேயே அரச வாணிப கூட்டுத்தாபனம் மேலதிகமாக 40 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்யத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதில் 15 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி எதிர்வரும் 28 ஆம் திகதியும் மிகுதி 25 ஆயிரம் மெற்றிக் தொன், அரிசி அடுத்த வாரமளவிலும் இலங்கையை வந்தடையவிருப்பதாக செயலாளர் பி.பி. ஜயசுந்தர மேலும் கூறினார்.