‘சண்டே லீடர்’ பத்திரிகையில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா. விளக்கம் கோரியிருப்பதை நாட்டுப் பிரச்சினையாக அனைவரும் ஒன்றுபட்டு எதிர்கொள்ள வேண்டுமென பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க வேண்டுகோள் விடுத்தார். ‘இதனையொரு அரசியல் பிரச்சினையாகப் பார்க்காமல் தேசியப் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்’ எனவும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் அலுவலகத்தில் நேற்று மாலை விசேட செய்தியாளர் மாநாடு நடந்தது. பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்தச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் கணேகல ஆகியோர் கலந்துகொண்டனர்.
‘சண்டே லீடர்’ பத்திரிகைக்கு பொன்சேகா வழங்கிய பேட்டி தொடர்பாக ஐ.நா. விளக்கம் கோரியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு விளக்கிய அவர் மேலும் கூறியதாவது; ஐ.நா. சபை டிசம்பர் 18ம் திகதி இலங்கை அரசாங்கத்திற்கு கடிதமொன்றை எழுதியுள்ளது. மே 17ம் திகதி யுத்தம் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வெள்ளைக்கொடியுடன் வந்த புலி உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இதில் மூன்று புலி முக்கியஸ்தர்களின் பெயர்களினதும் அவர்களது குடும்பங்கள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. அவ்வாறான சம்பவங்கள் நடந்திருந்தால் பூரண விளக்கம் தருமாறு ஐ.நா. கோரியுள்ளது என பிரதமர் தெரிவித்தார்.
‘இவ்வாறான சம்பவமொன்று நடக்காத நிலையில் விளக்கமளிக்குமாறு ஐ.நா. கேட்டிருக்கிறது. இதனை எந்த வகையிலும் ஏற்க முடியாது’ என பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக தனிநபர் எவரையும் நான் குறை கூறவில்லையெனத் தெரிவித்த பிரதமர், முன்னாள் அதிகாரியான பொன்சேகா, சண்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியை அடிப்படையாகக் கொண்டே இந்த விளக்கம் கோரப்பட்டுள்ளது என்றார்.
“யார் இதனைக் கூறியிருந்தாலும் ஒரு தனிநபர் பிரச்சினையாக இதனைக் கருத முடியாது. நாடு என்ற ரீதியிலேயே நாம் இதனை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நடக்காத ஒரு பிரச்சினைக்கு நாம் எந்த வகையில் விளக்கம் கொடுக்க முடியுமெனவும் பிரதமர் கேள்வி எழுப்பினார். “சர்வதேச அழுத்தங்கள்” வந்த வண்ணமே இருக்கின்றன. அவை ஒவ்வொரு வடிவத்தில் வருகின்றன. இந்தப் பிரச்சினைக்கு முகம்கொடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்று பட்டுச் செயற்பட வேண்டும். நாடு என்ற ரீதியில் இதனை நாம் எதிர்கொள்ள வேண்டும் என பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க வேண்டுகோள் விடுத்தார்.