நாட்டை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும் – ஜனாதிபதி

elc-2010.jpgநாற்ப தாண்டு கால அரசியல் அனுபவமும் நாற்பது நாள் அரசியல் அனுபவமும் எத்தகைய இடைவெளியைக் கொண்டதோ அதேபோலவே தேர்தல் முடிவுகளும் அமையும் என்பதை மக்கள் ஏலவே தீர்மானித்துவிட்டார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

கண்டி- ஜனாதிபதி மாளிகையில் நேற்று (22) காலை மத்திய மாகாணத்தைச் சேர்ந்த சு.க. தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுடன் 2010 ஆம் ஆண்டின் வளமான எதிர்கால நடவடிக்கை குறித்தும், ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினது வெற்றியை உறுதிப்படுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசும்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி தொடர்ந்து அங்கு உரையாற்றும்போது,

1936ஆம் ஆண்டு முதல் அரசியல் செய்து வருகின்றோம். எமது அரசியலை மக்கள் ஒருபோதும் நிராகரிக்கவில்லை. இது குறித்து எதிர்காலத்தில் நாம் எந்த வித அச்சம் கொள்ள வேண்டிய அவசியமும் கிடையாது. பல்வேறு தியாகங்களை மேற்கொண்டு இந்த நாட்டையும் மக்களையும் நாம் பாதுகாத்துள்ளோம். எம் நாட்டு மக்களை பாதுகாக்க அரசியலுக்கு அப்பாலும் நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டிய பொறுப்பும் உணர்வும் நாட்டு பிரஜைகள் ஒவ்வொருவரிடமும் உள்ளது.

ஐ. தே. கட்சி மற்றும் ஏனைய எதிர்க் கட்சிகளிலிருந்து அரசுக்கும் எமது கட்சிக்கும் ஆதரவு வழங்கும் பொருட்டு எம்முடன் பலர் தொடர்ச்சியாக இணைந்துகொண்டு வருகின்றனர். இவ்வாறு எமது கட்சிகளுடன் இணையும் உள்ளூராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட மிக முக்கியமான அரசியல்வாதிகள் ஆகியோர்கள் என்னுடன் நாட்டு மக்களை பாதுகாக்கும் படியான ஆலோசனைகளையும், எதிர்பார்ப்புகளையும் முன்வைத்தே இணைந்த வண்ணம் உள்ளனர்.

பொய் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி எமது தாய் நாட்டை இரண்டாகப் பிரித்த நிலைமையிலேயே நாம் நாட்டை பொறுப்பேற்றது உலகமே பொருளாதார சிக்கல்களில் மூழ்கிய போதிலும் நாம் மேற்கொண்ட பல்வேறு பிரயத்தனத்தின் விளைவாக மக்களையும் நாட்டையும் பாதுகாத்துள்ளோம்.

யுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான எந்த பொருட்களும் ஆயுதங்களும் இல்லாத நிலையில் நம் ஆயுதங்களையும் மற்றும் ஏனைய அவசிய பொருட்களையும் கொள்வனவு செய்தோம். மேலும் யுத்த நிலைமையில் மக்களுக்குத் தேவையான அனைத்து அபிவிருத்தித் திட்டங்களை வகுத்து மஹிந்த சிந்தனை மூலம் அதனை நடைமுறைப்படுத்தினோம். எமது அபிவிருத்திப் பணியில் யாரும் குறைகூறுவதற்கு இல்லை.மேலும் என்னையும் எனது குடும்பத்தையும் சேறுபூசும் நடவடிக்கைகளில் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டு வருகின்றார். இவ்வாறு சேறு பூச நினைத்த ஒரு ஐ.தே.க. எம்.பி. வீடு தேடிவந்து மன்னிப்புக் கோரியுள்ளார்.

ஆகவே ஆதாரமற்ற வகையில் தொடர்ந்து என் மீதும் எனது குடும்பம் மீதும் சேறு பூசுவோருக்கு எதிராக நான் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன் எனவும் ஜனாதிபதி அங்கு உரையாற்றினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *