24

24

சமூகப் பணிகளைத் தவற விட்ட சைவ சமயமும் அதன் ஆலயங்களும் : மருத்துவ கலாநிதி என் சிவராஜா

Sivarajah_N_Dr( தற்போது வடக்கு கிழக்குத் தமிழர்கள் மிக மோசமான வாழ்நிலையை எதிர்கொள்கிறார்கள். அதுவும் இறுதியாக நடைபெற்ற யுத்தம் அவர்களது வாழ்நிலையை மேலும் மோசமாக்கி உள்ளது. அவர்களது வாழ்நிலையை மேம்படுத்துவதிலும் எதிர்கால நம்பிக்கையை அளிப்பதிலும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள சைவ ஆலயங்கள் மிக முக்கியமான பங்களிப்பினை அளிக்க முடியும்.

ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழர் வாழும் பகுதிகளிலெல்லாம் ஆலயங்கள் கட்டப்பட்ட போதும் அவை மிகுந்த வருமானத்தை ஈட்டிய போதும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஆலயங்கள் மட்டுமே சமூக அக்கறையுடன் செயற்படுகின்றன. ஏனையவை சுமூக கடமைகளை புறக்கணிக்கின்றன அல்லது தங்கள் இயலுமைக்கு ஏற்ப சமூகக் கடமைகளை மேற்கொள்வதில்லை.

அவ்வகையில் என் சிவராஜாவின் கீழுள்ள ஆய்வு பத்தாண்டுகள் பழமையானது ஆனாலும் சமூகநிலை இன்னமும் மோசமடைந்து உள்ளதே அல்லாமல் அதில் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை.

யதார்த்தத்தை மீண்டும் ஓங்கிச் சொல்வதற்காக இதனைப் பிரசுரிக்கின்றோம்.

டொரன்டோ நகரில் 1999 ஆடித்திங்கள் 30 முதல் ஆவணித் திங்கள் 1 வரை நடைபெற்ற 7வது உலக சைவ மாநாட்டில் வாசிக்கப்பட்டது. )

._._._._._.

இந்த மாநாட்டின் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதற்கு நீங்கள் எடுத்துக்கொண்ட இந்தப் பெருமுயற்சி வரவேற்கத் தக்கது. போற்றத் தக்கது.

கடந்த இரண்டு நாட்களாக இந்த முயற்சிக்கான வழிமுறைகளைப் பற்றி, பல கோணங்களிலிருந்து சிந்தித்துள்ளோம். விவாதித்துள்ளோம். பெரும்பாலும் புலம்பெயர்ந்து வாழும் மக்களின் பிரச்சினைகளை மையமாக வைத்தே தீர்வுகளை தேடியுள்ளோம்.

நம் சொந்த மண்ணிலே, முக்கியமாக ஈழத்திலே தமிழிற்கும் சைவத்திற்கும் எந்தவித ஆபத்தும் இல்லை என்ற ஒரு எண்ணத்தை பலரிடையே இது உருவாக்கியுள்ளது. இது ஒரு தவறான எண்ணமாகும்.

1995ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 30ம் திகதி, ஏறக்குறைய 700,000 தமிழர்கள், ஒரு இரவில் இடம்பெயர்ந்தார்கள். 7 மாதங்களின் பின், இடம்பெயர்ந்தோரில் அரைவாசிப்பேர் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பினார்கள். அங்கு அவர்களை வரவேற்றது இடிந்த சூறையாடப்பட்ட வீடுகளும், பள்ளிக்கூடங்களும், கோவில்களுமே.

வசதியுள்ளவர்கள் தங்கள் வீடுகளை திருத்தி அதில் வாழத்தொடங்கினார்கள். வசதியற்றவர்கள் செய்வதறியாது ஏங்கிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்கு சிலர் உதவினார்கள். இடிந்து போயிருந்த உள்ளங்களுக்கு ஊன்றுகோலாக இருந்தார்கள். குடிசைகளை திருத்துவதற்கு உதவினார்கள், சமைப்பதற்கு பாத்திரங்கள் கொடுத்தார்கள், பாலர்களுக்கு பாடசாலைகளை அமைத்து ஆசிரியர்களை நியமித்தார்கள். பாடசாலை உபகரணங்களை கொடுத்தார்கள்.

இதற்கு மாறாக அந்த மக்கள், தங்கள் சைவ சமயத்தை விட்டு, அவர்களின் சமயத்தைத் தழுவினார்கள். இது நடந்து முடிந்த கதையல்ல, இன்னும் நடந்து கொண்டிருக்கும் கதை. நாளையும் தொடரும் கதை.

இது மதம் மாறியவர்களினதோ, அல்லது மாற்றியவர்களினதோ தவறு அல்ல. எங்கள் தவறு. சைவ மக்களின் தவறு. எமது சமூகத்தில் வாழும், நலிந்த சைவ மக்களுக்கு நாம் உதவவில்லை. இன்று நீங்கள் யாழ்ப்பாணம் வந்தால், ஏறக்குறைய 1500 கோவில்களில், மூன்றில் ஒரு பங்கு கோவில்களில் திருப்பணி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும். மை பூசுவது முதல் புதிய தேர் அமைப்பது வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும். பெரிய பெரிய வாகனங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டு இருக்கும் – ஆனால் திருவிழாக் காலங்களில் வாகனங்களை தூக்குவதற்கு போதிய ஆட்கள் இருக்க மாட்டார்கள். இந்தத் திருப்பணி வேலைகள் பெருஞ் செலவில், பெரும்பாலும் புலம்பெயர்ந்தோரின் பணச்செலவில் செய்யப்படுகின்றன.

கோவில் திருப்பணிக்காக சேர்க்கும் பணத்தில், ஏன் ஒரு பகுதியை, கோவிலை அண்டியுள்ள ஏழை மக்களுக்காக செலவிடக்கூடாது? அன்பளிப்பு கொடுப்பவர்கள் ஏன் இந்த நிபந்தனையை விதிக்கக் கூடாது?.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி 6 முதல் 14 வயது வரையிலான பிள்ளைகளில் சராசரி 8% பாடசாலை போவதில்லை. யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள வசதி படைத்தோரின் பிள்ளைகளில் 100% பாடசாலை சென்றபோதும் பின்தங்கிய கிராமங்களிலும், பின்தங்கிய சமூகங்களிலும் உள்ள பிள்ளைகளில் 30-60% பிள்ளைகள் பாடசாலை செல்வதில்லை. இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் வறுமையாகும். பாடசாலை பருவப் பிள்ளைகளில் 10 சதவீதமானவர்களுக்கு தந்தை இல்லை. ஒன்றில் அவர் இறந்திருப்பார், காணாமற் போயிருப்பார், அல்லது படையினரால் பிடிபட்டிருப்பார்.

3-5 வயதிற்கு இடைப்பட்ட முன்பள்ளிச் சிறுவர்களில் அரைவாசிக்கு மேல் பாலர் பாடசாலைக்கு போவதில்லை. இந்த வயதினரில் 50% போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணத்தில் உள்ள சனத்தொகையில் 12% ற்கு மேற்பட்டவர்கள் 60 வயதை தாண்டியவர்கள். பெரும்பாலானவர்கள் தனித்து வாழ்கிறார்கள். இவர்களில் முக்கால்வாசிப் பேர் மருந்துகள் பாவிக்கிறார்கள்.

கர்ப்பமாக உள்ள தாய்மாரில் 6% குருதிச்சோகையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் யாழ். வைத்தியசாலையில் பிறக்கும் குழந்தைகளில் 23 சதவீதமானவர்கள் நிறை குறைந்த பிள்ளைகளாக பிறக்கிறார்கள்.

இப்படிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு முக்கியமாக சைவ மக்களுக்கு நாம் என்ன செய்கிறோம். மற்றைய சமயங்களை சார்ந்தவர்களுக்கு அவர்களின் சமய நிறுவனங்கள் உதவுகின்றன.

எனக்குத் தெரிந்தவரையில் யாழ்ப்பாணத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவு கோவில்கள்தான் இப்படியான சமூக சேவைகளை செய்கின்றன. தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானம் இந்தப்பணியில் முன்னணியில் நிற்கிறது.

கடந்த 17 ஆண்டுகளாக ஒரு மகளீர் இல்லம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் இன்று 60 ற்கும் மேற்பட்ட, பெற்றோரை இழந்த பெண் பிள்ளைகள் வளர்கிறார்கள். அனைவரும் பாடசாலை செல்கிறார்கள். நால்வர் பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்கள்.

அனாதரவான முதியோரையும் சேர்த்து பராமரிக்க சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையார் நடவடிக்கை எடுத்திருக்கிறார். அதைவிட சைவநூல்கள் வெளியிட ஒரு அச்சகம், நூல் நிலையங்கள் முதலியவற்றை இந்தக் கோவில் நடத்துகிறது.

ஆனைக்கோட்டை கரைப்பிரான பிள்ளையார் கோவிலின் சிவகுமார சர்மா என்ற ஒரு சிவாச்சாரியார் இருக்கிறார். அந்தக் கோவிலைச் சுற்றி ஏழைக்குடும்பங்கள் பல உள்ளன. அவர்களில் சிலர் மதம் மாறிக்கொண்டிருக்கின்றனர். அந்தச் சிவாச்சாரியார் கோவிலுக்கு அருகாமையில் ஒரு பாலர் பாடசாலையை ஆரம்பித்துள்ளார். இரண்டு ஆசிரியர்களை அமர்த்தியுள்ளார். பாலர் பாடசாலை பிள்ளைகளை ஒழுங்காக கோவிலுக்கு வந்து பிரார்த்தனைகளில் கலந்து கொள்ளச் செய்கிறார். குழந்தைகளுக்கு விளங்கக்கூடிய வகையில் சைவ நெறிகளை புகட்டுகிறார். கிராமத்து முதியவர்களை பயன்படுத்தி பிள்ளைகளுக்கு அறநெறி வகுப்புக்கள் நடத்துகிறார். அத்துடன் பாடசாலைக்கு வரும் பிள்ளைகளுக்கு சத்துணவு வழங்குகிறார், சீருடை வழங்குகிறார். இவ்வளவையும், தனது சொந்த முயற்சியால் ஊரில் பணம் சேர்த்து, செய்கிறார்.

இப்படி ஏன் மற்ற கோவில்கள் செய்ய முடியாது?

கோவில் திருப்பணிகளை நிறுத்திவிட்டு சமூகத்தொண்டு செய்ய வேண்டும். என்று நான் சொல்லவில்லை. கோவிலுக்கு சேரும் பணத்தில் குறைந்தது 10 சத வீதத்தையாவது. சமூகப்பணிக்கு செலவிட வேண்டும் என்றே கேட்கிறேன்.

அன்பர்களே,

இக்கருத்துகள் புரட்சியானவையல்ல. புதியதும் அல்ல. இவை எமது பழம்பெரும் சமயப் பண்பாடு. இல்லையேல்

‘நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடும் கோயில் பரமர்க் கங்காமே’.

என்று திருமூலர் கூறியிருக்க முடியாது. ‘அநாத இரட்சகர்’ ‘ஆபத் பாந்தவர்’ என்று எம் இறைவனை போற்றுவதிலும் அர்த்தமில்லை.

கனடா இந்து மாமன்றம், லண்டன் மெய்கண்டான் ஆதீனம் trust, உலக சைவப் பேரவை போன்ற நிறுவனங்கள் ஒரு நிதியத்தை உருவாக்கி, அந்த நிதியத்தின் மூலம் கோவில்களால் நடத்தப்படும் சமூகப் பணிகளுக்கு (முக்கியமாக கல்வி, போசாக்கு, சுகாதாரம் போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து) பண உதவி செய்யும் முயற்சியை ஆரம்பித்து வைத்தல், அது தமிழுக்கும், சைவத்திற்கும் செய்யும் பாரிய பணி எனவும். இந்த மகாநாட்டிற்கு கிடைத்த பெரிய வெற்றி எனவும் கருதுகிறேன்.

இந்த ஏழாவது உலக சைவ மகாநாட்டில் பங்கு பற்றும் வாய்ப்பை எனக்கும் எனது துணைவியாருக்கும் தந்துதவியதற்காக மாநாட்டு அமைப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வணக்கம்.

Dr. N Sivarajah
Consultant / Coordinator, Jaffna Field Unit
WORLD HEALTH ORGANIZATION

Violence hurts more If you do nothing about it.

கொழும்பு – வவுனியா ரயில் கல்கமுவவில் தடம் புரண்டது: 20 பயணிகள் காயம்

mail-rain.jpgகொழும் பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற  ரயில் இன்று காலை கல்கமுவ அருகில் தடம் புரண்டதில் 20 பயணிகள் காயமடைந்துள்ளனர். இதன் காரணமாக இன்று காலை யாழ் தேவி ரயில் சேவை தற்காலிகமாக மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவைத் தீர்மானங்கள்!

anura-priya.jpgவர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்க அனுமதி – ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவருத்தித் திட்டத்தின்கீழ் அங்கு வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் முகமாக கலந்துரையாடல் நடத்தவும் திட்டங்களை அமுல்படுத்தவும் இரு குழுக்களை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரணையை துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ முன்வைத்திருந்தார்.

இரண்டாம் கட்ட நடவடிக்கைக்கு அங்கீகாரம் – சமூக அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இரண்டாம் கட்ட நடவடிக்கையை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரணையை தேசத்தை கட்டியெழுப்புதல் மற்றம் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்யும் அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்பிரேரணையை முன்வைத்திருந்தார்.

இதன்படி திட்டமிட்ட நடவடிக்கைகள் பதுளை, மொனராகல, ஹம்பந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை,  நுவரெலிய மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படும்.

தங்கல்லையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு காரியாலயம் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு நடவடிக்கைகளுக்கான உத்தேச காரியாலயத்துக்கான கட்டடம் ஒன்றை தங்கல்லையில் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரணையை வெளிநாட்டு தொழில் அபிவிருத்தி அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல முன்வைத்திருந்தார். நான்கு மாடிகளைக் கொண்ட இக்கட்டடத்துக்காக 99.2 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டமூலத்துக்கு  அங்கீகாரம் – இலங்கை மருந்தக சங்கத்தைக் கூட்டிணைக்கும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரணையை சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்திருந்தார். இச்சட்டமூலம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானதல்ல என அமைச்சரவை ஏற்றுள்ளது.

தனது கூற்று தவறானதென சரத் பொன்சேகா ஐ. நா. வுக்கு அறிவிக்கவேண்டும் -அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறுகிறார்

சரத் பொன்சேகாவின் கூற்றினால் எழுந்துள்ள நெருக்கடி தொடர்பில் அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டமைச்சு நாட்டுக்குப் பாதிப்பில்லாத வகையில் பதிலொன்றைத் தயாரித்து ஐ. நா. வுக்கு அனுப்புமென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தனது கூற்று தவறானது என சரத் பொன்சேகாவே கடிதமொன்றை ஐ. நா. விற்கு அனுப்பினாலொழிய இந்நெருக்கடி ஏற்படுத்தும் பாதிப்பை தவிர்க்க முடியாது என தெரிவித்த அமைச்சர் எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதிக்குப் பின் இது தொடர்பிலான அனைத்து நெருக்கடிகளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே வந்து சேரும் என்றும் தெரிவித்தார்.

தகவல்,  ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:-

ஐ. நா. விடமிருந்து இவ் விவகாரம் தொடர்பான மூன்று முக்கிய விடயங்கள் சம்பந்தமாக கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. இக் கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளித்தாக வேண்டியுள்ளது. இவ் விவகாரமானது அரசியல் ரீதியாகவும் பெரும் பிரச்சினையை தோற்றுவித்துள்ளது. சரத் பொன்சேகாவின் இவ் விவகாரம் தொடர்பாக ஜே.வி.பி. எம்.பி. விஜித ஹேரத் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் ஐ.நா. வைத் திருப்திப்படுத்த முடியாது.

சரத் பொன்சேகா அரசியல் இலாபத்திற்காகவே இவ்வாறான குற்றச்சாட்டை வெளியிட்டதாகவும் வடக்கு தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்தே இவ்வாறு செய்ய நேர்ந்ததாகவும்ää தாம் குறிப்பிட்டுள்ளது போன்று ஒரு சம்பவம் நடக்கவில்லையென்றும் கடிதமொன்றை ஐ.நா. வுக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பினால் இப் பிரச்சினை இலகுவாகும். இல்லாவிடில் இப் பிரச்சினை பூதாகாரமாகி பல நெருக்கடிககளை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தும்.
 

இலங்கை – இந்திய அணிகள் மோதும் 4வது போட்டி இன்று

catak.jpgஇந்தியா- இலங்கை அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டித் தொடரில் 3 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

ராஜ்கோட்டில் நடந்த முதல் போட்டியில் 3 ஓட்டங்களிலும், கட்டாக்கில் நடந்த 3வது போட்டியில் 7 விக்கெட்டிலும் இந்தியா வெற்றி பெற்றது. நாக்பூரில் நடந்த 2வது போட்டியில் இலங்கை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 4வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் கொல்கத்தா சென்றனர். கைவிரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக யுவராஜ் சிங் இன்றைய, கடைசி போட்டியிலும் ஆடவில்லை. இந்த தொடரில் அவர் கட்டாக்கில் நடந்த 3வது போட்டியில் மட்டுமே ஆடினார்.காயத்தால் ஆடியதால் அவரால் சோபிக்க இயலவில்லை. மேலும் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் அவரை ஷெவாக் பந்துவீச அழைத்தார். 1 ஓவருக்கு மேல் அவரால் வீச இயலவில்லை. யுவராஜ்சிங்குக்கு பதிலாக விராட் கோலி இடம்பெறுவார். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வென்றால் தொடரை வெல்லும். கடந்த போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடியதால் தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு உள்ளது.

தற்காலிக கப்டன் ஷெவாக், டெண்டுல்கர் ஆகியோர் தொடர்நது துடுப்பாட்டத்தில் நல்ல நிலையில் உள்ளனர். மத்திய வரிசையும் வலுவாக இருந்தால் நன்றாக இருக்கும். தொடக்க ஜோடியின் அதிரடியான ஆட்டத்தை பொறுத்தே ரன் குவிப்பு இருக்கும். கடந்த போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு பந்து வீச்சு முக்கிய பங்கு வகித்தது. ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன், ஆசிஷ் நெஹ்ரா ஆகியோர் சிறப்பாக வீசினார்கள். இதேபோல் திறமையான பந்துவீச்சை இன்றும் வெளிப்படுத்தினால் நான்றாக இருக்கும். 2 போட்டி தடை காரணமாக டோனி ஆடமாட்டார்.

நெருக்கடியில் இருக்கும் இலங்கை அணி கொல்கத்தா போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. டெஸ்ட் தொடரை இழந்த இலங்கை அணி ஒருநாள் தொடரையும் இழக்காமல் இருக்கும் வகையில் கடுமையாக போராடும். அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் டில்சான் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பணமாக இருக்கிறார். அவர் களத்தில் இருக்கும் வரை அபாயம்தான். இதனால் அவரை தொடக்கத்திலேயே ‘அவுட்’ செய்ய இந்திய வீரர்கள் புதிய யுக்தியை கையாள வேண்டும்.

மற்றொரு தொடக்க வீரர் உபுல்தரங்க, கப்டன் சங்கக்கார ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். மத்திய வரிசை பலவீனமாக இருப்பதால் ஜயசூரிய இன்று களம் இறக்கப்படுவார் என்று தெரிகிறது. ஈடன்கார்டன் மைதானம் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக இருக்கும். பனிப்பொழிவு முக்கிய பங்கு வகிக்கும். இதனால் 2வது களத்தடுப்பு செய்வதில் சிரமம் ஏற்படலாம் என்று தெரிகிறது.

பகல் இரவாக நடைபெறும் இந்த ஆட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

இரு அணிகளும் இன்று மோதுவது 117வது போட்டியாகும். இதுவரை நடந்த 116 ஒருநாள் போட்டியில் இந்தியா 62 ஆட்டங்களிலும், இலங்கை 44 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டங்கள் முடிவு இல்லை.

பெடரர், செரீனாவுக்கு விருது

சர்வதேச டென்னிசில் இந்த ஆண்டின் உலக சாம்பியன்களாக ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது.

கிராண்ட்ஸ்லாம், மற்ற சர்வதேச போட்டிகள், டேவிஸ், பெட் கோப்பை டென்னிஸ் ஆகிய போட்டிகளில் வீரர், விராங்கனைகளின் செயல்பாட்டை கணக்கில் கொண்டு இந்த விருதுக்கு ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அமெரிக்க பகிரங்க அரை இறுதியின் போது லைன் பெண் நடுவரை மிரட்டி பெரும் தொகையை அபராதமாக இழந்த போதிலும் செரீனா 2-வது முறையாக இந்த விருதினை பெற்றிருக்கிறார். பெடரர் இந்த உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்படுவது இது 5-வது முறையாகும்.

‘களத்திலும் சரி, வெளியிலும் சரி இந்த ஆண்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமைந்தது. முதல் முறையாக பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கைப்பற்றியது.

அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற சாம்ப்ராசின் சாதனையை முறியடித்தது. மீண்டும் முதல் இடத்தை பிடித்தது எல்லாமே இந்த ஆண்டில் தான்’ என்று பெடரர் குறிப்பிட்டார்.

பிரபாவின் பெற்றோர், சூசையின் மனைவி ஆகியோரையும் இராணுவமே காப்பாற்றியது – ஜனாதிபதி

mahinda0.jpgஇலங்கை இராணுவம் மிலேச்சத்தனமான இராணுவமல்ல. மிலேச்சத்தனம் இராணுவமாக இருந்தால் பிரபாகரனின் தாயார், சூசையின் மனைவி, ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் காப்பாற்றப்பட்டிருக்க மாட்டார்கள். இலங்கை இராணுவம் வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களை கொலை செய்த இராணுவமாக உலகிற்கு காட்ட முனைவது துரோகத்தனமானதாகும். இதனை மக்கள் மன்னிக்கமாட்டார்கள். மிலேச்சத்தனமான இராணுவம் என்பதை உலக நாடுகளும் ஏற்றுக் கொள்ளாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் பல்கலைக்கழக கல்வி மான்கள், டாக்டர்கள், சட்டத்தரணிகள், பெருந் தோட்ட முகாமையாளர்கள், புத்திஜீவிகள் மத்தியில் செவ்வாய்க்கிழமை இரவு (22.12.2009) புத்திஜீவிகள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் ஜனாதிபதி தமதுரையில், நான் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களை விட்டு விட்டு ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் சபை ஆகியவற்றின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் கடமையில் ஈடுபட வேண்டியுள்ளது. இந்த நிலைக்கு முன்னாள் தளபதியே காரணமாகும்.

ஏன் இப்படி ஒரு துரோகத்தினை புரிந்தார் என்று தெரியவில்லை. இது ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகளை பெறுவதற்கவா? அல்லது வெளிநாட்டு சக்திகளின் சதி காரணமாகவா? என தெரியவில்லை. எந்த வெளிநாட்டு சக்திகளுக்கும் நாம் அடிபணியப் போவதில்லை.யுத்தத்தினை நிறுத்துமாறு பல நாடுகள் கோரிக்கை விடுத்தன. பல தலைவர்கள், ஜனாதிபதிகள், பிரதமர்கள் என்னுடன் தொலைபேசியில் உரையாடினார்கள்.

சில நாட்டு தலைவர்கள் சிலரை தூதுவிட்டார்கள். நான் உண்மையை தெளிவுபடுத்தினேன். சுதந்திரத்திற்கு முன் அவர்களது காலணித்துவ நாடுகளில் ஒன்றாக நாம் விளங்கினோம். ஆனால் இப்போது இலங்கை உங்கள் காலணித்துவ நாடு இல்லை என தெளிவாக கூறினேன். ஆனால் சாதாரண தமிழ் மக்களுக்கு தீங்கு விளைவிக்க வேண்டாம் என பல தடவைகள் எமது இராணுவத்திற்கு உத்தரவிட்டேன். எமது இராணுவமும் எனது உத்தரவை ஏற்று சாதாரண மக்களைக் காப்பாற்றினார்கள். இதனை உலகம் அறியும்.

யுத்தத்திற்கு எதிராக யுத்தம் செய்யக்கூடிய பலத்தினையும், யுத்தத்தினை கொண்டு நடத்தக்கூடிய மனவலிமையையும் மன உறுதியினையும் நான் ஏற்படுத்தினேன். முழு உலகமும் பயந்திருந்த பயங்கரவாதத் தினை முற்றாக ஒழித்தோம். எனக்கு இந்நாட்டினை கையளிக்கும் போதும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் பொருளாதாரத்தினை பற்றி மக்கள் கேட்கவில்லை.

பயங்கரவாதத்தினை அழிக்குமாறே மக்கள் கேட்டனர். அதனையே நான் செய்தேன். இனி சுதந்திரமான இலங்கையின் பொருளா தாரத்தை முன்னேற்றுவோம். யுத்த காலத்திலும் நீர்மின்திட்டங்கள், துறைமுக திட்டங்கள், விமான நிலையம் நிர்மாணத்துடன், கமநெகும, மகநெகும போன்ற வீதி, கிராம அபிவிருத்தி வேலைகளையும் செய்துள்ளோம். நாட் டுக்கு ஏற்பட்ட பொருளாதார பிரச்சினை, கடன் பிரச்சினை ஆகியவற்றை தீர்த்துள்ளோம். சகல கடன்களையும் செலுத்தியுள்ளோம். ஈரானுடன் பேசி ஏழுமாத வட்டியில்லா கடன் மூலம் பெற்றோல் தேவையை நிறைவேற்றினோம். லிபியா, இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் எமக்கு உதவின. எல்லாவற்றிற்கு மேலாக இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளை சமநிலைப்படுத்தி வைத்திருந்தோம். யாருடைய கட்டலைக்கு அடிபணி யாது பொருளாதாரத்திலும், யுத்தத்திலும் வெற்றிகண்டோம்.

வடகிழக்கு மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவில்லை. அவர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி தேர்தலை இரண்டு வருடங்கள் முன்கூட்டியே நான்கு வருட முடிவில் நடத்துகிறேன். வட கிழக்கு தமிழ் மக்களும் தமது ஜனாதிபதியை தெரிவு செய்ய உரிமையுடையவர்கள். அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளேன்.

மிஹின் ஏயார் பற்றி பேசுகின்றனர். அன்று அமெரிக்கா ஆயுத உதவி செய்தபின் அந்த ஆயுதங்களுக்கு தேவையான ரவைகள், குண்டுகள் அமெரிக்கா தந்து தவிய போது அதனை எடுத்து வர மிஹின் எயாரையே அனுப்பினேன். ஜோர்ஜ் புஷ் நிர்வாகமும் இதற்கு உதவியது.  எமது விமானப்படை சரியான இலக்குகளை தாக்கியது. கப்பற்படை ஆயுத கப்பல்களை அழித்தது. இவையே இராணுவ வெற்றிக்கு காரணமாகும்.

இன்று இராணுவ படையையும், வெற்றிகொண்ட 58 வது படையினரையும் முன்னாள் தளபதி காட்டிக்கொடுக்க முயற்சிப்பது எந்தவகையில் நியாயமாகும். இராணுவ வெற்றிக்கு, அதன் செயற் பாடுகளுக்கு இராணுவ தளபதி முதல் கடைசி இராணுவ வீரர்வரை பங்களித் துள்ளனர். அவர்களை காட்டிக்கொடுப்பது துரோகமில்லையா?

கண்டியில் நடைபெற்ற எதிரணி கூட்டத்தில் எனது குடும்பத்தைப்பற்றி திட்டித் தீர்த்துள்ளனர். எனது பிள்ளைகளை திட்டியுள்ளதோடு சாபமிட்டுள்ளனர். எனது குடும்பத்துக்கு சாபமிடுவது நியாயமா? ஏழு தடவைகள் எனது குடும்பத்திற்கு இடிவிழ வேண்டும் என ஒரு கட்சித் தலைவர் சாபமிட்டுள்ளார். எனது மகன் போர்படை வீரராக வந்தமை பிழையானதா? ஏனைய குடும்பத்திலுள்ளவர்கள் யுத்தம் புரியும் போது எமது இராணுவத்திற்கு இளைஞர்கள் தேவைப்பட்ட போது எனது மகனையும் படையில் சேர்த்தது மூலம் நான் முன்மாதிரியாக நடந்து காட்டியுள்ளேன். இதற்கு சாபமிடுவது சரியா?

எனது சகோதரர்கள் பற்றி மிகவும் கேவலமாக பேசியுள்ளனர். ராஜபக்ஷ சகோதரர் கம்பனி என கூறியுள்ளனர். நான் சொத்துச் சேர்த்ததாக கூறியுள்ளனர். கண்டி நகர சிட்டி செண்டர் காணியில் கட்டப்படும் ஹோட்டல்கள் கொழும்பு குருநாகல் காணி ஆகியவற்றை நானும் எனது சகோதரர்களும் வாங்கி யுள்ளதாக கூறியுள்ளனர். இதனை நிரூபிக்க முடியுமா. எனது சகோதரர் பசில் ராஜபக்ஷ ஒரு பாராளுமன்ற உறுப்பினர். பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்களை பிரகடனப்படுத்த வேண்டும். அவரது சொத்து பிரகடனத்தினை பார்க்க முடியும். நானும் சொத்து சேர்க்கவில்லை. எனது சகோதரர் கோட்டாபேக்கும் சொத்துகள் இல்லை.

இவை அரசியலின் கீழ்த்தரமான பிரசாரங்களாகும். எமது குடும்பம் சகோதரர் கம்பனிதான். ஏனெனில் 1936 இல் எனது மூத்த தாத்தா உறுப்பினர் அவர் இறந்தபின் அவரது மகனான என்னுடைய தாத்தா உறுப்பினர். அவருக்கு பின் என் தகப்பனார் உறுப்பினர். 1945 ஆம் ஆண்டு சட்டநிறுவன சபையில் எனது அப்பா போட்டியின்றி தெரிவானவர். அதன்பின் நான், எனது சகோதரர்கள் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறோம். இதற்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கை விசுவாசமே காரணமாகும். நீங்கள் புத்தி ஜீவிகள். உங்களுக்கு யுத்தம், வெற்றி, பொருளாதார, சவால்கள், எதிர்கால சவால் கள் பற்றியெல்லாம் தெரியும். நான் இறுதிவரை தாய்நாட்டுக்கு விசுவாச முடையவனாகவே இருப்பேன். சகல மக்களையும் காப்பாற்றுவேன். யாருக்கும் துரோகமிலைக்கமாட்டேன். இராணுவத்தை காட்டிக்கொடுக்க மாட்டேன்.” என்னை சிறைப்படுத்துவதாக கூறியுள்ளனர். எனக்கு ஏற்கனவே சிறை அனுபவம் உண்டு. ஜே.ஆர். ஜெயவர்தன என்னை 3 மாதம் சிறையிலிட்டார். இதுதவிர சுனாமியின் போது “ஹெல்ப் அம்பாந்தோட்டை நிதியை மோசடி செய்ததாக கூறினார்கள். ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் அம்பாந்தோட்டையிலேயே அதிகம் வாக்குகளை பெற்றார் என்றார்.

உலகின் மோசமான 10 மனிதாபிமான நெருக்கடிகளுக்குள் இலங்கையும் உள்ளடக்கம்

உலகில் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகள் 10 இற்குள் இலங்கை நெருக்கடியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு என்ற சர்வதேச மனிதாபிமானக் குழு தனது வருடாந்த அறிக்கையை திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் மோசமான மனிதாபிமான நெருக்கடிகளைப் பட்டியலிட்டுள்ளது.

கிழக்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகள், ஆப்கான் வன்முறை மற்றும் பொதுமக்களுக்கான உதவிகள் துண்டிக்கப்பட்டிருப்பது, சோமாலியாவில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவப் பராமரிப்பு இல்லாதிருப்பது வடக்கு யேமனில் வன்முறைகள் தெற்கு சூடான் டார்பர் பகுதியில் வன்முறை, நோய், சுகாதாரப் பராமரிப்பு இல்லாமை, சிறுவர் போஷாக்கின்மைக்கான சிகிச்சைக்காக போதிய நிதியுதவி இல்லாமை, இலங்கையில் யுத்தத்தால் அகப்பட்டுள்ள பொதுமக்கள், எயிட்ஸ்/எச்.ஐ.வி சிகிச்சைக்கான நிதியுதவியில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை, பாகிஸ்தானில் வன்முறை மற்றும் பொதுமக்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது, அலட்சியப் படுத்தப்பட்டிருக்கும் கலாஅசார் உறங்கும் வியாதிகள், குடற்புண் போன்றவை தொடர்பாக போதிய ஆராய்ச்சியோ, சிகிச்சையோ இல்லாமை இருப்பது என்பன உலகின் மோசமான மனிதாபிமான நெருக்கடிகளென எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு பட்டியலிட்டுள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்திச்சேவை:

இடம்பெயர்ந்தோர் தேர்தலில் தடையின்றி வாக்களிக்க சகல ஒழுங்குகளும் முன்னெடுப்பு

sri_election.jpgமோதல் காரணமாக இடம் பெயர்ந்த சுமார் ஒன்றரை இலட்சம் மக்களுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகுமென சில தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை தேர்தல் திணைக்களம் நிராகரித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கு தாம் மீள்குடியேற்றப்பட்ட இடங்களிலும் வவுனியா நலன்புரி முகாம்களில் உள்ள மக்களுக்கு வவுனியாவிலும் வாக்களிப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணை யாளர் ஏ. கருணாநிதி தெரிவித்தார்.

இடம் பெயர்ந்து வவுனியா நலன்புரி முகாம்களில் உள்ள மக்களில் அதிகமானவர் களின் பெயர்கள் 2008 வாக்காளர் இடாப்பில் பதியப்பட்டுள்ளதெனவும் அவர் களுக்கு எதிர்வரும் தேர்தலில் வாக்களிப் பதற்கான சகல ஒழுங்குகளையும் தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளதாகவும் வவுனியா தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. இடம் பெயர்ந்த மக்களில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் கிராம சேவகர்களினூடா கப் பதியப்பட்டுள்ளதோடு இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி ஆணையாளர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி மற்றும் யாழ். மாவட்ட வாக் காளர்கள் தேர்தலில் விண்ணப்பிப்பதற்காக (இன்று) 24 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 12 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளதோடு மேலும் பலர் இறுதி நேரத்தில் விண்ணப்பிக்கத் தயாராக உள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது. இவர்களுக்கு வவுனியாவில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

நலன்புரி முகாம்களில் உள்ள முல்லைத் தீவு மற்றும் வவுனியா மாவட்ட மக்களு க்கு நேரடியாக வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கருணாநிதி கூறினார்.
தேசிய அடையாள அட்டை மற்றும் தற்காலிக அடையாள அட்டை என்பன வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புலிகளுக்கு பணம் சேகரித்த மூவருக்கு எதிராக மெல்பேர்ன் மன்றில் வழக்கு

புலிகளுக்கு பணம் சேகரித்ததாக ஆரூ ரன் விநாயகமூர்த்தி சிவராஜா யாதவன் மற்றும் ஆறுமுகம் ரஜீவன் ஆகியோர் கடந்த 2007 இல் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை இன்று மெல்பேர்ன் உச்சநீதிமன்றில் விசாரிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மீது புதிய குற்றச்சாட்டுகள் பட்டியலிடப்பட்டதும் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வார்கள் என மேற்படி மூவருக்குமாக வாதாடுகின்ற வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். நேற்றைய விவாதத்தின்போது இவர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக மூன்றாவது குற்றத்துக்காக எதுவித சான்றுகளும் கிடைக்காத பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சாட்டப்பட்டுள்ள இரு குற்றங்களை அதாவது பணமும் மின்சார உபகரணங்களும் சேகரித்ததாக கூறப்படுவதை விநாயகமூர்த்தி ஏற்றுக்கொள்ளக்கூடும் என வக்கீல் கூறியுள்ளார்.