சமூகப் பணிகளைத் தவற விட்ட சைவ சமயமும் அதன் ஆலயங்களும் : மருத்துவ கலாநிதி என் சிவராஜா

Sivarajah_N_Dr( தற்போது வடக்கு கிழக்குத் தமிழர்கள் மிக மோசமான வாழ்நிலையை எதிர்கொள்கிறார்கள். அதுவும் இறுதியாக நடைபெற்ற யுத்தம் அவர்களது வாழ்நிலையை மேலும் மோசமாக்கி உள்ளது. அவர்களது வாழ்நிலையை மேம்படுத்துவதிலும் எதிர்கால நம்பிக்கையை அளிப்பதிலும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள சைவ ஆலயங்கள் மிக முக்கியமான பங்களிப்பினை அளிக்க முடியும்.

ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழர் வாழும் பகுதிகளிலெல்லாம் ஆலயங்கள் கட்டப்பட்ட போதும் அவை மிகுந்த வருமானத்தை ஈட்டிய போதும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஆலயங்கள் மட்டுமே சமூக அக்கறையுடன் செயற்படுகின்றன. ஏனையவை சுமூக கடமைகளை புறக்கணிக்கின்றன அல்லது தங்கள் இயலுமைக்கு ஏற்ப சமூகக் கடமைகளை மேற்கொள்வதில்லை.

அவ்வகையில் என் சிவராஜாவின் கீழுள்ள ஆய்வு பத்தாண்டுகள் பழமையானது ஆனாலும் சமூகநிலை இன்னமும் மோசமடைந்து உள்ளதே அல்லாமல் அதில் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை.

யதார்த்தத்தை மீண்டும் ஓங்கிச் சொல்வதற்காக இதனைப் பிரசுரிக்கின்றோம்.

டொரன்டோ நகரில் 1999 ஆடித்திங்கள் 30 முதல் ஆவணித் திங்கள் 1 வரை நடைபெற்ற 7வது உலக சைவ மாநாட்டில் வாசிக்கப்பட்டது. )

._._._._._.

இந்த மாநாட்டின் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதற்கு நீங்கள் எடுத்துக்கொண்ட இந்தப் பெருமுயற்சி வரவேற்கத் தக்கது. போற்றத் தக்கது.

கடந்த இரண்டு நாட்களாக இந்த முயற்சிக்கான வழிமுறைகளைப் பற்றி, பல கோணங்களிலிருந்து சிந்தித்துள்ளோம். விவாதித்துள்ளோம். பெரும்பாலும் புலம்பெயர்ந்து வாழும் மக்களின் பிரச்சினைகளை மையமாக வைத்தே தீர்வுகளை தேடியுள்ளோம்.

நம் சொந்த மண்ணிலே, முக்கியமாக ஈழத்திலே தமிழிற்கும் சைவத்திற்கும் எந்தவித ஆபத்தும் இல்லை என்ற ஒரு எண்ணத்தை பலரிடையே இது உருவாக்கியுள்ளது. இது ஒரு தவறான எண்ணமாகும்.

1995ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 30ம் திகதி, ஏறக்குறைய 700,000 தமிழர்கள், ஒரு இரவில் இடம்பெயர்ந்தார்கள். 7 மாதங்களின் பின், இடம்பெயர்ந்தோரில் அரைவாசிப்பேர் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பினார்கள். அங்கு அவர்களை வரவேற்றது இடிந்த சூறையாடப்பட்ட வீடுகளும், பள்ளிக்கூடங்களும், கோவில்களுமே.

வசதியுள்ளவர்கள் தங்கள் வீடுகளை திருத்தி அதில் வாழத்தொடங்கினார்கள். வசதியற்றவர்கள் செய்வதறியாது ஏங்கிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்கு சிலர் உதவினார்கள். இடிந்து போயிருந்த உள்ளங்களுக்கு ஊன்றுகோலாக இருந்தார்கள். குடிசைகளை திருத்துவதற்கு உதவினார்கள், சமைப்பதற்கு பாத்திரங்கள் கொடுத்தார்கள், பாலர்களுக்கு பாடசாலைகளை அமைத்து ஆசிரியர்களை நியமித்தார்கள். பாடசாலை உபகரணங்களை கொடுத்தார்கள்.

இதற்கு மாறாக அந்த மக்கள், தங்கள் சைவ சமயத்தை விட்டு, அவர்களின் சமயத்தைத் தழுவினார்கள். இது நடந்து முடிந்த கதையல்ல, இன்னும் நடந்து கொண்டிருக்கும் கதை. நாளையும் தொடரும் கதை.

இது மதம் மாறியவர்களினதோ, அல்லது மாற்றியவர்களினதோ தவறு அல்ல. எங்கள் தவறு. சைவ மக்களின் தவறு. எமது சமூகத்தில் வாழும், நலிந்த சைவ மக்களுக்கு நாம் உதவவில்லை. இன்று நீங்கள் யாழ்ப்பாணம் வந்தால், ஏறக்குறைய 1500 கோவில்களில், மூன்றில் ஒரு பங்கு கோவில்களில் திருப்பணி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும். மை பூசுவது முதல் புதிய தேர் அமைப்பது வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும். பெரிய பெரிய வாகனங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டு இருக்கும் – ஆனால் திருவிழாக் காலங்களில் வாகனங்களை தூக்குவதற்கு போதிய ஆட்கள் இருக்க மாட்டார்கள். இந்தத் திருப்பணி வேலைகள் பெருஞ் செலவில், பெரும்பாலும் புலம்பெயர்ந்தோரின் பணச்செலவில் செய்யப்படுகின்றன.

கோவில் திருப்பணிக்காக சேர்க்கும் பணத்தில், ஏன் ஒரு பகுதியை, கோவிலை அண்டியுள்ள ஏழை மக்களுக்காக செலவிடக்கூடாது? அன்பளிப்பு கொடுப்பவர்கள் ஏன் இந்த நிபந்தனையை விதிக்கக் கூடாது?.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி 6 முதல் 14 வயது வரையிலான பிள்ளைகளில் சராசரி 8% பாடசாலை போவதில்லை. யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள வசதி படைத்தோரின் பிள்ளைகளில் 100% பாடசாலை சென்றபோதும் பின்தங்கிய கிராமங்களிலும், பின்தங்கிய சமூகங்களிலும் உள்ள பிள்ளைகளில் 30-60% பிள்ளைகள் பாடசாலை செல்வதில்லை. இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் வறுமையாகும். பாடசாலை பருவப் பிள்ளைகளில் 10 சதவீதமானவர்களுக்கு தந்தை இல்லை. ஒன்றில் அவர் இறந்திருப்பார், காணாமற் போயிருப்பார், அல்லது படையினரால் பிடிபட்டிருப்பார்.

3-5 வயதிற்கு இடைப்பட்ட முன்பள்ளிச் சிறுவர்களில் அரைவாசிக்கு மேல் பாலர் பாடசாலைக்கு போவதில்லை. இந்த வயதினரில் 50% போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணத்தில் உள்ள சனத்தொகையில் 12% ற்கு மேற்பட்டவர்கள் 60 வயதை தாண்டியவர்கள். பெரும்பாலானவர்கள் தனித்து வாழ்கிறார்கள். இவர்களில் முக்கால்வாசிப் பேர் மருந்துகள் பாவிக்கிறார்கள்.

கர்ப்பமாக உள்ள தாய்மாரில் 6% குருதிச்சோகையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் யாழ். வைத்தியசாலையில் பிறக்கும் குழந்தைகளில் 23 சதவீதமானவர்கள் நிறை குறைந்த பிள்ளைகளாக பிறக்கிறார்கள்.

இப்படிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு முக்கியமாக சைவ மக்களுக்கு நாம் என்ன செய்கிறோம். மற்றைய சமயங்களை சார்ந்தவர்களுக்கு அவர்களின் சமய நிறுவனங்கள் உதவுகின்றன.

எனக்குத் தெரிந்தவரையில் யாழ்ப்பாணத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவு கோவில்கள்தான் இப்படியான சமூக சேவைகளை செய்கின்றன. தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானம் இந்தப்பணியில் முன்னணியில் நிற்கிறது.

கடந்த 17 ஆண்டுகளாக ஒரு மகளீர் இல்லம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் இன்று 60 ற்கும் மேற்பட்ட, பெற்றோரை இழந்த பெண் பிள்ளைகள் வளர்கிறார்கள். அனைவரும் பாடசாலை செல்கிறார்கள். நால்வர் பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்கள்.

அனாதரவான முதியோரையும் சேர்த்து பராமரிக்க சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையார் நடவடிக்கை எடுத்திருக்கிறார். அதைவிட சைவநூல்கள் வெளியிட ஒரு அச்சகம், நூல் நிலையங்கள் முதலியவற்றை இந்தக் கோவில் நடத்துகிறது.

ஆனைக்கோட்டை கரைப்பிரான பிள்ளையார் கோவிலின் சிவகுமார சர்மா என்ற ஒரு சிவாச்சாரியார் இருக்கிறார். அந்தக் கோவிலைச் சுற்றி ஏழைக்குடும்பங்கள் பல உள்ளன. அவர்களில் சிலர் மதம் மாறிக்கொண்டிருக்கின்றனர். அந்தச் சிவாச்சாரியார் கோவிலுக்கு அருகாமையில் ஒரு பாலர் பாடசாலையை ஆரம்பித்துள்ளார். இரண்டு ஆசிரியர்களை அமர்த்தியுள்ளார். பாலர் பாடசாலை பிள்ளைகளை ஒழுங்காக கோவிலுக்கு வந்து பிரார்த்தனைகளில் கலந்து கொள்ளச் செய்கிறார். குழந்தைகளுக்கு விளங்கக்கூடிய வகையில் சைவ நெறிகளை புகட்டுகிறார். கிராமத்து முதியவர்களை பயன்படுத்தி பிள்ளைகளுக்கு அறநெறி வகுப்புக்கள் நடத்துகிறார். அத்துடன் பாடசாலைக்கு வரும் பிள்ளைகளுக்கு சத்துணவு வழங்குகிறார், சீருடை வழங்குகிறார். இவ்வளவையும், தனது சொந்த முயற்சியால் ஊரில் பணம் சேர்த்து, செய்கிறார்.

இப்படி ஏன் மற்ற கோவில்கள் செய்ய முடியாது?

கோவில் திருப்பணிகளை நிறுத்திவிட்டு சமூகத்தொண்டு செய்ய வேண்டும். என்று நான் சொல்லவில்லை. கோவிலுக்கு சேரும் பணத்தில் குறைந்தது 10 சத வீதத்தையாவது. சமூகப்பணிக்கு செலவிட வேண்டும் என்றே கேட்கிறேன்.

அன்பர்களே,

இக்கருத்துகள் புரட்சியானவையல்ல. புதியதும் அல்ல. இவை எமது பழம்பெரும் சமயப் பண்பாடு. இல்லையேல்

‘நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடும் கோயில் பரமர்க் கங்காமே’.

என்று திருமூலர் கூறியிருக்க முடியாது. ‘அநாத இரட்சகர்’ ‘ஆபத் பாந்தவர்’ என்று எம் இறைவனை போற்றுவதிலும் அர்த்தமில்லை.

கனடா இந்து மாமன்றம், லண்டன் மெய்கண்டான் ஆதீனம் trust, உலக சைவப் பேரவை போன்ற நிறுவனங்கள் ஒரு நிதியத்தை உருவாக்கி, அந்த நிதியத்தின் மூலம் கோவில்களால் நடத்தப்படும் சமூகப் பணிகளுக்கு (முக்கியமாக கல்வி, போசாக்கு, சுகாதாரம் போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து) பண உதவி செய்யும் முயற்சியை ஆரம்பித்து வைத்தல், அது தமிழுக்கும், சைவத்திற்கும் செய்யும் பாரிய பணி எனவும். இந்த மகாநாட்டிற்கு கிடைத்த பெரிய வெற்றி எனவும் கருதுகிறேன்.

இந்த ஏழாவது உலக சைவ மகாநாட்டில் பங்கு பற்றும் வாய்ப்பை எனக்கும் எனது துணைவியாருக்கும் தந்துதவியதற்காக மாநாட்டு அமைப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வணக்கம்.

Dr. N Sivarajah
Consultant / Coordinator, Jaffna Field Unit
WORLD HEALTH ORGANIZATION

Violence hurts more If you do nothing about it.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

 • Thirumalai Vasan
  Thirumalai Vasan

  கனடா இந்து மாமன்றம், லண்டன் மெய்கண்டான் ஆதீனம் trust, உலக சைவப் பேரவை போன்ற நிறுவனங்கள் ஒரு நிதியத்தை உருவாக்கி, அந்த நிதியத்தின் மூலம் கோவில்களால் நடத்தப்படும் சமூகப் பணிகளுக்கு (முக்கியமாக கல்வி, போசாக்கு, சுகாதாரம் போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து) பண உதவி செய்யும் முயற்சியை ஆரம்பித்து வைத்தல்இ அது தமிழுக்கும்இ சைவத்திற்கும் செய்யும் பாரிய பணி எனவும். இந்த மகாநாட்டிற்கு கிடைத்த பெரிய வெற்றி எனவும் கருதுகிறேன். (கலாநிதி சிவராஜாவின் உரை)/

  இந்த நிகழ்வில் நானும் கலந்து கொண்டிருந்தேன். அன்றையதினமே இப்படியான சமூக செவைக்கு உதவும் வகையில் லண்டனிலிருந்து சென்ற நிறுவனங்கள் நடவடிக்கை எடுப்பதாகக்கூறி காசும் சேர்த்திருந்தார்கள். சுமார் 50000 கனேடியன் டொலர் அன்றெ சேர்ந்திருந்தது. அதன் பின்னர் அதற்கு என்ன நடந்தது என்பது இன்றவரை தெரியவில்லை. இந்த சைவ அமைப்புகள் இன்றும் லண்டனில்தான் இருக்கின்றன. அதில் அங்கம் வகிக்கும் எவராவது இக்கட்டுரையை வாசித்து> இந்தப் பின்னூட்டத்தையும் வாசித்தால் தயவுசெய்து பதில் தருவீர்களா?

  Reply
 • thurai
  thurai

  தமிழ் மொழியும், சைவ சமயமும் தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. இதனை சில சமூகத்தினர் தமது சொந்த உடமைகளாகிக் கொண்டனர். காரணம் பணம். இந்த நிலைமை மாறவிட்டால் தமிழ் மொழியையும் சைவ சமயத்தையும் யாராலும் காப்பாற்ற முடியாது.

  துரை

  Reply