இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டித் தொடரில் 3 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.
ராஜ்கோட்டில் நடந்த முதல் போட்டியில் 3 ஓட்டங்களிலும், கட்டாக்கில் நடந்த 3வது போட்டியில் 7 விக்கெட்டிலும் இந்தியா வெற்றி பெற்றது. நாக்பூரில் நடந்த 2வது போட்டியில் இலங்கை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 4வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் கொல்கத்தா சென்றனர். கைவிரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக யுவராஜ் சிங் இன்றைய, கடைசி போட்டியிலும் ஆடவில்லை. இந்த தொடரில் அவர் கட்டாக்கில் நடந்த 3வது போட்டியில் மட்டுமே ஆடினார்.காயத்தால் ஆடியதால் அவரால் சோபிக்க இயலவில்லை. மேலும் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் அவரை ஷெவாக் பந்துவீச அழைத்தார். 1 ஓவருக்கு மேல் அவரால் வீச இயலவில்லை. யுவராஜ்சிங்குக்கு பதிலாக விராட் கோலி இடம்பெறுவார். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வென்றால் தொடரை வெல்லும். கடந்த போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடியதால் தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு உள்ளது.
தற்காலிக கப்டன் ஷெவாக், டெண்டுல்கர் ஆகியோர் தொடர்நது துடுப்பாட்டத்தில் நல்ல நிலையில் உள்ளனர். மத்திய வரிசையும் வலுவாக இருந்தால் நன்றாக இருக்கும். தொடக்க ஜோடியின் அதிரடியான ஆட்டத்தை பொறுத்தே ரன் குவிப்பு இருக்கும். கடந்த போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு பந்து வீச்சு முக்கிய பங்கு வகித்தது. ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன், ஆசிஷ் நெஹ்ரா ஆகியோர் சிறப்பாக வீசினார்கள். இதேபோல் திறமையான பந்துவீச்சை இன்றும் வெளிப்படுத்தினால் நான்றாக இருக்கும். 2 போட்டி தடை காரணமாக டோனி ஆடமாட்டார்.
நெருக்கடியில் இருக்கும் இலங்கை அணி கொல்கத்தா போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. டெஸ்ட் தொடரை இழந்த இலங்கை அணி ஒருநாள் தொடரையும் இழக்காமல் இருக்கும் வகையில் கடுமையாக போராடும். அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் டில்சான் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பணமாக இருக்கிறார். அவர் களத்தில் இருக்கும் வரை அபாயம்தான். இதனால் அவரை தொடக்கத்திலேயே ‘அவுட்’ செய்ய இந்திய வீரர்கள் புதிய யுக்தியை கையாள வேண்டும்.
மற்றொரு தொடக்க வீரர் உபுல்தரங்க, கப்டன் சங்கக்கார ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். மத்திய வரிசை பலவீனமாக இருப்பதால் ஜயசூரிய இன்று களம் இறக்கப்படுவார் என்று தெரிகிறது. ஈடன்கார்டன் மைதானம் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக இருக்கும். பனிப்பொழிவு முக்கிய பங்கு வகிக்கும். இதனால் 2வது களத்தடுப்பு செய்வதில் சிரமம் ஏற்படலாம் என்று தெரிகிறது.
பகல் இரவாக நடைபெறும் இந்த ஆட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
இரு அணிகளும் இன்று மோதுவது 117வது போட்டியாகும். இதுவரை நடந்த 116 ஒருநாள் போட்டியில் இந்தியா 62 ஆட்டங்களிலும், இலங்கை 44 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டங்கள் முடிவு இல்லை.