சரத் பொன்சேகா வார இறுதிப் பத்திரிகையொன்றுக்கு வெளியிட்ட கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிற் சங்க தலைவர்களும்- அரசியல்வாதிகளும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் நேற்று கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
அன்று யுத்தத்துக்கு எதிராக பல்வேறு பொய்யான பிரசாரங்களை வெளியிட்ட குறிப்பிட்ட ஊடகம், பொன்சேகாவின் கூற்றுக்கு அதனைவிட அதிக அளவிலான பிரசாரத்தை தமது வெப்தளத்திலும் வேறு ஊடகங்களிலும் பெற்றுக் கொடுத்துள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் கவனமும் திரும்பியுள்ளதால் இலங்கையில் புலிகளுக்கு எதிராக இடம்பெற்ற யுத்தத்தின் இறுதி நாட்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பொன்சேகா வெளியிட்ட கூற்றை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா. செயற்பட்டுள்ளது.
இவ்வாறான கூற்றை வெளியிட்ட பொன்சேகா தொடர்பாக தீர்மானமொன்றை எடுக்குமாறு அரசை நிர்ப்பந்திக்கவும், ஐ.நா. அமைப்பின் அழுத்தங்களுக்கு எதிராகவும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதாக தொழிற்சங்கத் தலைவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சரத் பொன்சேகாவுக்கு எதிரான பல்வேறு கோஷங்களை எழுப்பியதை காண முடிந்தது.