உலக மகளிர் டென்னிஸ் தரப்பட்டியலின் முதலிடத்தில் இருக்கும் செரீனா வில்லியம்ஸுக்கு, அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பங்குபெற மூன்று ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளின் அரையிறுதி ஆட்டத்தின் போது பெல்ஜியம் நாட்டின் கிம் கிளைஸ்டருக்கு ஆதரவான ஒரு முடிவை போட்டியின் ஒரு நடுவர் தெரிவித்ததற்காக, அவரை ஆடுகளத்திலேயே ஏசிய குற்றத்துக்காக இந்த தண்டனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் 2011 ஆம் ஆண்டுக்கு முன்னர் இதே போன்று ஒரு பெரிய தவறை மீண்டும் செய்வாராக இருந்தால் இந்தத் தடை உடனடியாக அமுலுக்கு வரும்.