September

September

அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் டெனிஸ் சாம்பியன் பட்டம்; ஆர்ஜென்டினா வீரர் வசம்

160909.jpgஅமெரிக்க  கிராண்ட்ஸ்லாம் பகிரங்க டெனிஸ் சாம்பியன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்து முன்னிலை வீரர் ரொஜர் ஃபெடரரை அதிர்ச்சித் தோல்வியுறச் செய்து சாம்பியன் பட்டத்தை ஆர்ஜென்டினா வீரரான ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ கைப்பற்றினார்.
 
நியூயார்க்கில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டெல் போட்ரோ 3-6, 7-6 (5), 4-6, 7-6 (4), 6-2 என்ற செட் கணக்கில் ஃபெடரரை வீழ்த்தினார். ஃபெடரர் இந்த முறை சாம்பியன் பட்டம் வென்றிருந்தால் தொடர்ந்து 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையைப் புரிந்திருப்பார்.

இதற்கு முன்னர் யு.எஸ். ஓபனில் தான் பங்கேற்ற 40 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்திருந்தார் ஃபெடரர். ஆனால் 41-வது ஆட்டத்தில் அவர் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். மேலும் இதற்கு முன்னர் ஃபெடரர் – டெல் போட்ரோ மோதிய 6 ஆட்டங்களில் ஃபெடரரே வெற்றி பெற்றிருந்தார்.

அனுபவமிக்க வீரராக இருந்தும் டெல் போட்ரோவின் அற்புதமான ஆட்டத்தின் முன் ஃபெடரர் தோல்வி கண்டார்.

முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்று ஆட்டத்துக்கு முன்னேறி வெற்றி கண்டு சாதனை படைத்துள்ளார் இந்த ஆர்ஜென்டினா வீரர் டெல் போட்ரோ.

மஹிந்த சமரசிங்க, நவநீதம்பிள்ளையை சந்தித்துள்ளார்

150909navifora.jpgமனிதவு ரிமைகள் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் ஆணையாளர் நவனீதன் பிள்ளையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
 
இதன்போது, இடம்பெயர்ந்தோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கையாளும் முறைகள் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
 
அதேவேளை, இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி மேற்கொண்டுள்ள முனைப்புகள் குறித்து அவர் இதன்போது, நவனீதம்பிள்ளைக்கு தெளிவுபடுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தநிலையில், சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகள் நடத்தியது குறித்து அதை தாம் வரவேற்பதாக நவனீதம்பிள்ளை வெளியிட்டதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நடிகை அனார்கலிக்குக் கொலை அச்சுறுத்தல்

150909anarkali.jpgசுதந்திர ஐக்கிய முன்னணி சார்பில் தென் மாகாண சபை தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நடிகை அனார்கலிக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக அவர் காலி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

தனக்கு சுதந்திர ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிடும் இன்னொரு வேட்பாளரே இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் அவர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார் 

242 கிலோ வெடிமருந்துகள், 6733 துப்பாக்கிரவைகள் மீட்பு

udaya_nanayakkara_brigediars.jpg242 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகள், 56 கிலோ எடையுள்ள 11 கிளேமோர் குண்டுகள், 6733 பல்வேறு வகையான துப்பாக்கி ரவைகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு கிழக்கு மற்றும் தாராவிக்குளம் பிரதேசத்திலிருந்தே இந்த வெடிமருந்துகள் மற்றும் பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

கிழக்கில் தேடுதல்களை மேற்கொண்டு வரும் இராணுவத்தின் 232 வது படையணியினர் தாராவிக்குளம் பிரதேசத்தில் பாரிய தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்தப் பிரதேசத்திலிருந்து ஒவ்வொன்றும் 27.5 கிலோ எடையுள்ள சி-4 ரக அதிசக்திவாய்ந்த வெடிமருந்துகள் 04 (இதன் மொத்தத் தொகை 110 கிலோ) ரி-56 ரக ரவைகள் – 2250, வெடிக்கவைக்கும் கருவிகள் – 4000 மற்றும் உபகரணங்களை மீட்டெடுத்துள்ளனர். இதேவேளை புதுக்குடியிருப்பு கிழக்கு பிரதேசத்தில் புலிகளால் கைவிடப் பட்ட நிலையில் காணப்பட்ட பெருந்தொ கையான ஆயுதங்களை இராணுவத்தின் எட்டாவது அதிரடிப் படையினர் மீட்டெ டுத்துள்ளனர்.

132 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகள், 10 கிலோ எடை யுள்ள வெடிமருந்து தூள்கள், 16 கிலோ எடையுள்ள கிளேமோர் குண்டுகள் – 02, 5 கிலோ எடையுள்ள கிளேமோர் குண்டுகள் – 02, 2 கிலோ எடையுள்ள கிளேமோர் குண்டுகள் -07 (இதன் மொத்தத் தொகை 56 கிலோ) வாகனங்களுக்கு பொருத்தக் கூடிய தற்கொலை குண்டுகள் – 19, தற் கொலை அங்கிகள் – 57, 9 மி.மீ. பிஸ்டல் ரவைகள் – 4409, வெடிக்கவைக்கும் கரு விகள் – 1219, 82 மி. மீ. மோட்டர் குண்டு கள் – 132 மற்றும் உபகரணங்களை மீட்டெ டுத்துள்ளனர்.

தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச தகுதி நிர்ணயிக்கப்பட வேண்டும் : பெப்ரல்

தேர்தல்களில் பேட்டியிடும் வேட்பாளர்களுக்கு குறைந்தபட்ச தகுதி நிர்ணயிக்கப்பட வேண்டுமென பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி, பொது, மாகாணசபை மற்றும் பிரதேச சபைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் போது கட்சிகள், கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,  “உடல் அழகு அல்லது பண செல்வாக்கைக் கொண்டு தேர்தல்களில் வெற்றியீட்ட எடுக்கப்படும் முனைப்புக்கள் ஆரோக்கியமானவை அல்ல.

பொருளாதார ரீதியில் வலுவிழந்த ஒரு வேட்பாளர் தேர்தல்களில் வெற்றி பெற முடியாத நிலைமை தற்போது உருவாகிக் கொண்டிருக்கின்றது. தேர்தல்களில் போட்டியிடுவதற்கு குறைந்த பட்ச தகுதி நிர்ணயிக்கப்படும் வரையில் அரசியலில் இந்த ஏற்றத் தாழ்வு தொடரவே செய்யும். குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு போன்ற பிரதான கட்சிகள் உடல் வசீகரம், பண பலம், பிரபல்யம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே தமது வேட்பாளர்களைத் தெரிவு செய்கின்றன.

சில நாடுகளில் தேர்தல் பிரசாரங்களுக்காகச் செலவிடப்பட வேண்டிய தொகை கூட வரையறுக்கப்பட்டே உள்ளது. பங்களாதேஷில் பொதுத் தேர்தல் ஒன்றில் போட்டியிடும் வேட்பாளர்கள் பத்து டாக்காக்களை மட்டுமே செலவிட முடியும் என வரையறுக்கப்பட்டுள்ளது”

இலங்கை கிரிக்கெட் வீரர் தாக்குதலில் தொடர்பா? பத்மநாதனை விசாரிக்கை பாகிஸ்தான் முடிவு

pathmanathan.jpgஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்குதலுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக தங்கள் நாட்டு அரசு சந்தேகிப்பதால் செல்வராசா பத்மநாதனை விசாரிக்க பாகிஸ்தான் பொலிஸாரை அனுப்ப பாகிஸ்தான் அரசு தீர்மானித்தள்ளது. அதன் விபரம் வருமாறு:-

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் செல்வராசா பத்மநாதனை மலேசியாவில் இருந்து இலங்கை இராணுவம் கைது செய்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக இவரிடம் விசாரணை நடத்த இந்தியாவின் மத்திய புலனாய்வுத்துறை அனுமதி கேட்டுள்ளது. இதற்காக இந்திய குழு இந்த மாத இறுதியில் கொழும்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இவரிடம் விசாரணை நடத்த பாகிஸ்தானும் முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதல் பின்னணியில் விடுதலைப்புலிகளின் தொடர்புகள் இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளது என்று அந்நாட்டின் பிரதமர் இலானி தெரிவித்து இருந்தார்.

அதைத்தொடர்ந்தே பத்மநாதனிடம் விசாரணை நடத்த பாகிஸ்தான் அரசு ஆர்வம் காட்டுகிறது. இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் நிதி உதவி அளித்திருக்கலாம் என்ற தகவல் கிடைத்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக அவரிடம் விசாரணை நடத்த பாகிஸ்தான் தனது புலனாய்வுக் குழு ஒன்றை விரைவில் கொழும்புக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மதகுரு கொலை – சந்தேக நபர் கைது

_arrested.jpgயக்கல குருவிட்டிய விகாரையில் வைத்து பௌத்த மதகுரு ஒருவர், 2009.03.02 அன்று மர்மமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

மேற்படிக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வண. கமருதே பியசிறி ஆமு என்ற பௌத்த மதகுருவே இவ்வாறு வெட்டி கொலைசெய்யப்பட்டவராவார்.

நோர்வேயில் ஆளும் கூட்டணி சிறிய வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது

நோர்வேயில் நடந்தது முடிந்த தேர்தலில் தொழிலாளர்கட்சி (AP – 35.5% votes – 64 Seats) சோசலிச இடதுசாரி (SV – 6.1% votes – 11 seats) மற்றும் மைய கட்சி (SP – 6.2% votes – 11 seats) ஆகிய கட்சிகளின் கூட்டு ( 86  ஆசனங்கள்) மூன்றே மூன்று ஆசனங்களால்  மட்டுமே பெரும்பான்மையை  பெற்றுள்ளது. இக்கூட்டரசாங்கம் கடந்த நான்கு ஆண்டுகள் அதிகாரத்தைக் கொண்டிருந்தது. இக்கூட்டமைப்பு Red – green Coalition  என அழைக்கப்படுகிறது.  இடதுசாரிகள் அல்லாத கட்சிகள் 83 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

தொழிலாளர்கட்சி அதிகளவு ஆசனங்களைப் பெற்றுள்ளது, அதேவேளை சோசலிச இடதுசாரி தனது ஆசனங்கள் சிலவற்றை இழந்து சென்ற தேர்தலை விட குறைந்த பிரதிநிதிகளை பெற்றுள்ளது.

வலதுசாரி (17.2% votes – 30 seats), மற்றும் முன்னேற்றக்கட்சி (22.9% votes – 41 seats) ஆகிய இரு கட்சிகளும் சென்ற தேர்தலை விட அதிக  ஆசனங்களைப் பெற்றிருந்தன. கிறிஸ்ரியன் டெமொகிரட்டிக் கட்சி 5.5 வித வாக்குகளைப் பெற்று 10 ஆசனங்களை வென்றுள்ளது.

லிபிரல் லெப்ற் கட்சி 3.8 வீத வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களை மட்டும் வென்றுள்ளது. செப் 14 நடைபெற்ற தேர்தலில் மிக மோசமான தோல்வியை இக்கட்சி சந்தித்து உள்ளது.

தனது வாழ்க்கை காலத்தில் முன்னெப்போதும்  இல்லாதவாறு பாராளுமன்றத்தில் கட்சிகள் தெளிவான பிரிவுத் தொகுதிகளாக பிரிந்து நிற்பதான தோற்றம் ஏற்பட்டுள்ளது எனவும், தற்போதுள்ள பாராளுமன்றம் பிரித்தானிய பாராளுமன்றத்தையொத்த அரசியல் கொள்கைகள் தொடர்பாக பாரிய இடைவெளி கொண்ட ஒரு செஞ்தொகுதி மற்றும் ஒரு நீல தொகுதியை ஒத்ததாக காணப்படுவதாக பேர்கன் பல்கலைக்கழக பேராசியர் Frank Aarebrot தெரிவித்துள்ளார்.

நோர்வே பாராளுமன்றத்தில் 39 வீதமான பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பல்லின சமூகத்தைச் சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பிளரும் அங்கு தெரிவு செய்யப்பட்டு உள்ளார்.

73.8 வீதமான மக்கள் வாக்களித்துள்ள இத்தேர்தலே 1927க்குப் பின் குறைந்த அளவு மக்கள் வாக்களித்த தேர்தலாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்வி உட்பட்ட பொதுத்துறைக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் நேர்வெயின் வட மேற்குக் கரையோரப் பகுதிகளில் பெற்றோலிய மற்றும் எரிவாயு ஆகியவற்றின் அகழ்வு பற்றிய விடயங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தது. முன்னெற்றக் கட்சி குடிவரவு விதிகளை இறுக்கமாக்கும்படி கேட்டிருந்தது.

தொழிலாளருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யமாட்டோம்

080909teawomen.jpg“நாம் எமது தொழிலாளர்களின் நிலையை நன்கு அறிந்தவர்கள். அதனால் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யமாட்டோம். எமது சமூகத்தைப் பற்றி நன்கு சிந்தித்துத்தான் கூட்டு ஒப்பந்தத்தை செய்யவிருக்கிறோம்.

அடிப்படைச் சம்பளமாக 285/= ரூபாவையும், மேலதிகக் கொழுந்து கிலோவிற்கு 9/= ரூபாவிலிருந்து 12/= ரூபாவாகவும் உயர்த்தியுள்ளோம். அதே நேரத்தில் வரவு நாட்களுக்கு 75% சதவீதம் என்ற நிலையை மாற்றி வேலை நாளுக்கு 405/= ரூபாய் என்ற நிலையில்தான் ஒப்பந்தம் செய்யவிருக்கி ன்றோம்”. இவ்வாறு இ.தொ.க பொதுச் செயலரும் இளைஞர் வலுவூட்டல் சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

டிக்கோயா தரவறைத் தோட்டத்தில் நட ந்த கூட்டத்தில் ஆறுமுகன் தொண்டமான் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;

ஏப்ரல் மாதம் தொடங்கி புதிய முறை யில் சம்பளம் கணக்கிடப்படும். பாக்கிச் சம்பளத்தை தீபாவளிக்கும், கிறிஸ்மஸ் திருநாளுக்கும், தைப் பொங்கலுக்குமாக பிரித்து கொடுக்கப்படும். அரை நாள் சம்ப ளம் என்று இனிமேல் கணக்கிடப்படமாட்டாது. நாம் மக்களுக்கு தெளிவுப்படுத்தவே இந்த கூட்டங்களை ஏற்பாடு செய்து, தொழிலாளர்களை சந்தித்து வருகிறோம்.

வேலை நாட்களில் குறிப்பிட்ட 75% சத வீதம் என்று சம்பளம் கணக்கிடப்படமாட் டாது. அதேநேரத்தில் வைத்தியத்திற்கு மருத்துவமனையில் மூன்று நாட்களிருந்தால், அதனையும் வேலை நாளாக கணிக்கப்படும். குறிப்பாக முன்னர் வழங்கிய தேயிலை கொழுந்துக்கு மூன்று ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆறு மாதம் சரியாக வேலை செய்தால் 7வது மாதம் சுகவீனம் என்றதால் அதனையும் வேலை நாட்களாக கணிக்கப்பட வேண்டும். இதேநேத்தில் எமது மக்களின் நன்மைக்காக,  இந்தியா இன்னும் 30 பஸ் வண்டிகளை அனுப்பி வருகின்றது. அத்தோடு எமது தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினை களுக்கு தீர்வுகாண வீடுகளை அமைத்துக் கொடுக்குமாறு இந்திய அரசை கோரியுள்ளோம். ஆகவே, எந்தவித வேலை நிறுத்தமுமின்றி 405/= சம்பள உயர்வை பெற்றுள்ளோம்.

இன்றைய நிலையில் தற்போது இ.தொ.கா ஒப்பந்தத்தை செய்யவிருக்கின்றது. உற்பத் தித் துறையிலும் நாம் அநுசரித்தாக வேண் டும். இந்த ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி 405/= ரூபாயாக அமுலுக்கு வரும் பாக்கிச் சம்பளத்தில் 50% வீதம் திரு நாட்களில் மூன்று தவணையாகப் பிரித்து கொடுக்கப்படும். எமது மக்கள் தீபாவளி, கிறிஸ்மஸ், தைப்பொங்கல் என்ற வகையில் அந்த பாக்கிச் சம்பளம் வழங்கப்படுமென்றார்.

யாழ் நீர் நிலைகளில் கடல் நீர் கலப்பதைத் தடுக்கத் திட்டம்!

basil.jpgயாழ் குடாநாட்டிலுள்ள நீர் நிலைகளில் கடல் நீர்  கலப்பதைத் தடுப்பதற்கான திட்டம் 170 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இத்திட்டம் வடக்கின் வசந்தம் திட்டத்தின் தலைவரும் ஜனாதிபியின் சிரேஷ்ட ஆலேசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ எம்.பி. இன் நேரடி வழிகாட்டலில் முன்னெடுக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் ஆரம்பத்தில் ஆரியாலை அணைக்கட்டு திருத்தப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான செலவு மதிப்பீடு 170 மில்லியன் ரூபாவாகும். அரச அபிவிருத்திக்கான பொறியில் கூட்டுத்தாபணம் இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
 
யாழ் தொன்டமானாறு அணைக்கட்டு நிர்மானப்பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. அமைச்சர் ராஜித சேனாரத்தன மற்றும் யாழ் அரசாங்க அதிபர் கே. கனேஸ் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர்  பார்வையிட்டனர். இதற்கு அடுத்ததாக ஆணையிறவு அணைக்கட்டு மீள் கட்டுமாணப்பணிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஒரு பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.