தேர்தல்களில் பேட்டியிடும் வேட்பாளர்களுக்கு குறைந்தபட்ச தகுதி நிர்ணயிக்கப்பட வேண்டுமென பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி, பொது, மாகாணசபை மற்றும் பிரதேச சபைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் போது கட்சிகள், கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், “உடல் அழகு அல்லது பண செல்வாக்கைக் கொண்டு தேர்தல்களில் வெற்றியீட்ட எடுக்கப்படும் முனைப்புக்கள் ஆரோக்கியமானவை அல்ல.
பொருளாதார ரீதியில் வலுவிழந்த ஒரு வேட்பாளர் தேர்தல்களில் வெற்றி பெற முடியாத நிலைமை தற்போது உருவாகிக் கொண்டிருக்கின்றது. தேர்தல்களில் போட்டியிடுவதற்கு குறைந்த பட்ச தகுதி நிர்ணயிக்கப்படும் வரையில் அரசியலில் இந்த ஏற்றத் தாழ்வு தொடரவே செய்யும். குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு போன்ற பிரதான கட்சிகள் உடல் வசீகரம், பண பலம், பிரபல்யம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே தமது வேட்பாளர்களைத் தெரிவு செய்கின்றன.
சில நாடுகளில் தேர்தல் பிரசாரங்களுக்காகச் செலவிடப்பட வேண்டிய தொகை கூட வரையறுக்கப்பட்டே உள்ளது. பங்களாதேஷில் பொதுத் தேர்தல் ஒன்றில் போட்டியிடும் வேட்பாளர்கள் பத்து டாக்காக்களை மட்டுமே செலவிட முடியும் என வரையறுக்கப்பட்டுள்ளது”