மன்னார் அகத்திமுறிப்பு குளத்தை அண்டியுள்ள சுமார் 2000 ஏக்கர் நெற் காணிகளில் பெரும்போக செய்கையை மேற்கொள்ள கமநல சேவைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய நாளை முதலாம் திகதி அருவியாற்றிலிருந்து அகத்தி முறிப்பு குளத்திற்கும், கட்டுக்கரை குளத்திற்கும் நீர் திறந்துவிடப்படவுள்ளது.
வவுனியா, பரயனாளங்குளம் அருவியாற்றின் தேக்கம் அணைக் கட்டிலிருந்து இடதுபக்கமாகச் செல்லும் வாய்க்கால் ஊடாக அருவியாற்றுக்கும், அடுத்த கால்வாய் ஊடாக கட்டுக்கரை குளத்திற்கும் நீர் திறந்து விடப்படவுள்ளது. நாளை காலை 10.00 மணியளவில் அணைக்கட்டிலிருந்து நீர் திறந்து விடப்படுவதுடன் கடந்த 20 வருடங்களின் பின்னர் தரிசு நிலங்களாகக் கிடந்த விளைநிலங்களில் செய்கை பண்ணவும் விவசாயிகளுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
யுத்தம் காரணமாக தரிசு நிலங்களாக காடு மண்டிக் கிடக்கும் விளை நிலங்களை துப்புரவு செய்வதற்காக ஏக்கருக்கு 8870 ரூபா வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதுடன் நிலத்தை உழுவுவதற்காக ஏக்கருக்கு 4000 ரூபா வீதமும், விதை நெல், உரம் என்பனவும் வழங்கப்படவுமுள்ளன.
அகத்திமுறிப்பு குளத்தை அண்டிய 2000 ஏக்கர் நிலத்தில் சுமார் 1100 விவசாயிகளுக்கு செய்கை பண்ணுவதற்கு முதற்கட்டமாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அடுத்த கட்டமாக நெற்களஞ்சியம் என்றழைக்கப்படும் மாந்தை மேற்குப் பகுதி விவசாயத்திற்கான அனுமதி வழங்கப்படவுள்ளது எனவும் மன்னார் நீர்ப்பாசன பொறியியலாளர் சிவபாத சுந்தரம் தெரிவித்தார்.