பான் பசுபிக் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஒற்றையர் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பான் பசுபிக் பகிரங்க டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் ஜீ ஜெங்கை சந்தித்தார். விறுவிறுப்பான போட்டியின் முதல் செட்டை சானியா 7 – 5 என சற்று போராடி கைப்பற்றினார்.
பின்னர் எழுச்சி கண்ட சீன வீராங்கனை இரண்டாவது செட்டை 6 – 2 என தன்வசப்படுத்தி, பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றில் தொடர்ந்து அபாரமாக ஆடிய ஜெங் 6 – 3 என கைப்பற்றினார். இறுதியில் சானியா 7 – 5, 2 – 6, 3 – 6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
மற்ற ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா, நடியா பெட்ரோவா, அவுஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசுர், செக் குடியரசின் இவடா பெனிசோவா, சுலோவேகியாவின் டேனியலா ஹண்டுசோவா, பிரான்சின் மரியன் பர்டோலி உள்ளிட்ட வீராங்கனைகள் வெற்றிபெற்று, இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றனர்.
ஒற்றையர் இரண்டாவது சுற்றில் உலகின் ‘நம்பர் – 1’ வீராங்கனையான ரஷ்யாவின் டினரா சபினா, சீன தைபேயின் கெய்-சென் சங்கிடம் 6 – 7, 6 – 4, 5 – 7 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.