04

04

61வது சுதந்திர தினம் இன்று: நாடு முழுவதும் நிகழ்வுகள்- ஜனாதிபதி தலைமையில் காலிமுகத்திடலில் வைபவம்

61th-ipday.jpgஇலங்கை யின் 61வது சுதந்திர தினம் இன்றாகும். இதனையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. பிரதான நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று காலை கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறுகின்றது.

இதனை முன்னிட்டு கொழும்பு நகரெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை மாத காலம் திட்டமிடப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

சுதந்திர தினத்தை யொட்டிய நிகழ்வுகளுக்கும், தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்குமாக பத்தாயிரம் பொலிஸாரும் முப்படையினரும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு நகரில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் விசேட சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கென புலனாய்வுத் துறையினரும், சிவில் பாதுகாப்புப் பிரிவினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு காலி முகத் திடலில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் சுதந்திர தின பிரதான நிகழ்வுக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார, பிரதம நீதியரசர் சரத் என். சில்வா, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, மேல் மாகாண ஆளுநர் மற்றும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், விசேட அதிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். பாதுகாப்புப் படைசார்பில், பிரதம பாதுகாப்பு அதிகாரி, முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மாஅதிபர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

அரசியல் யாப்பின் கீழ் வடபகுதி தமிழ் மக்களுக்கு சகல உரிமைகளும் வழங்கப்படும் – ஜனாதிபதி உறுதியளிப்பு

mahi-raja.jpgவடபகுதி தமிழ் மக்கள் மிக விரைவில் விடுவிக்கப்பட்டு அரசியல் யாப்பின் கீழ் அவர்களுக்குரித்தான சகல உரிமைகளும், சமத்துவமும் வழங்கப்படும் என இன்றைய தினத்தில் உறுதியளிக்கின்றேன். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள சுதந்திர தினச்செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த சில மாதங்களாக ஒரு தீர்க்கமான மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுத்து எமது தாய்நாட்டை பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவித்து, எமது சுதந்திரத்தைப் பலப்படுத்துவதில் நாம் அடைந்துள்ள வெற்றிகளே இம் மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் காரணமாகும்.

2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாவிலாறு பிரதேசத்தை பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிப்பதில் எமது சுதந்திர ஜனநாயக சமூகத்தின் வீரமிகு படையினர் அடைந்த வெற்றிகளில் தொடங்கி முழு கிழக்கு மாகாணத்தையும் விடுவித்து முழு யாழ்ப்பாண தீபகற்பமுட்பட வட மாகாணத்தின் மிகப் பெரும்பாலான நிலங்களை மீண்டும் எமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் நாம் கொண்டு வந்துள்ளோம்.

ஒரு காலத்தில் பயங்கரவாதத்தின் கோட் டைகள் என்று நம்பப்பட்டுவந்த கிளிநொச்சி, ஆனையிறவு, முல்லைத்தீவு போன்ற பகுதிகள் எல்லாம் அடுத்தடுத்து வீழ்ந்திருக்கும் நிலையில் எமது தாய் நாட்டிலிருந்து பயங்கரவாதத்தின் எச்சசொச்சங்களையும் துடைத்தெறிந்து எமது எல்லா மக்களும் சுதந்திரத்தின் விடியலை காணும் நாள் வெகு தூரத்தில் இல்லை. 1948ம் ஆண்டில் நாம் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தையும் மிஞ்சும் வகையில் இந்த 61வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது மிகவும் பெறுமதியான அர்த்த புஷ்டியான சுதந்திரத்தை உறுதிசெய்யும் வகையில் எமது தாய்நாட்டின் விடுதலைக்காக எமது வீரமிக்க படையினர் மேற்கொண்ட தியாகம், காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் துணிவு என்பவற்றுக்கு நான் இச்சந்தர்ப்பத்தில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஒரு காலத்தில் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்கான எமது படை நடவடிக்கைகளை விமர்சித்த பலரும் பயங்கரவாதம் எவ்வாறு ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்கு இலங்கை யையும் எமது படை வீரர்களின் வெற்றிகளையும் ஒரு முன்னுதாரணமாகக் குறிப்பிடுவதையிட்டு நாம் இச்சந்தர்ப்பத்தில் திருப்தியடைய முடியும். நாம் ஒரு முழு நிறைவான சுதந்திரத்தை நோக்கி முன்னேறிவரும் இவ்வேளையில் எமது எண்ணங்கள் சிந்தனைகள் யாவும் கொடிய பயங்கரவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்டிருக் கும் வடபகுதி அப்பாவித் தமிழ் மக்கள் பற்றியதாகவே உள்ளது.

எமது தாய்நாட்டின் மக்களான அந்த மக்களும் மிக விரைவில் விடுவிக்கப்பட்டு அரசியல் யாப்பின் கீழ் அவர்களுக்கு உரித்தான சகல உரிமைகளும் சமத்துவமும் வழங்கப்படும் என நான் இச்சந்தர்ப்பத்தில் உங்களிடம் உறுதியளிக்கின்றேன்.

மேலும் 500 வருடங்களுக்கும் மேலாக எமது நாட்டில் இருந்துவந்த காலனித்துவ ஆதிக்கம், சுரண்டல் என்பவற்றிலிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பல தியாகங்களைச் செய்து நாட்டுப் பற்றுடன் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துச் சென்ற இலங்கை தேசத்தவர்களான சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர் மற்றும் ஏனைய எல்லா சமூகத்தினர்களையும் கெளரவத்துடன் நினைவுகூர்வதற்கு இது மிகவும் பொருத்தமான சந்தர்ப்பமாகும்.

இன்று பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுபவர்களும் எமது முன்னோர் சுதந்திரத்திற்காக மேற்கொண்ட அதே வகையானதொரு உயர்ந்த போராட்டத்தையே மேற்கொண்டு வருகின்றனர். எமது நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இச்சந்தர்ப்பத்தில் எமது தேசத்தின் உன்னத வரலாற்றின் அடிப்படையாக காலா காலம் இருந்துவரும் சகிப்புத்தன்மை, நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வு என்பவற்றை வெளிப்படுத்தி ஒன்றுபட்ட நாட்டில் ஒரே தேசமாக ஐக்கியப்பட முன்வருமாறு எமது எல்லா மக்களிடமும் அழைப்பு விடுக்கிறேன்.

எல்லா இலங்கையர்களுக்கும், சமாதானம், சமத்துவம் முழு அளவில் கிடைக்க வேண்டு மென்ற அவர்களது அபிலாஷைகள் நிறைவேற வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன். புதிய தோர் இலங்கைக்குள் அச்சம், பீதிகள் இல்லாத ஜனநாயகம் சுதந்திரம் மிக்க ஒரு சிறந்த யுகத்தை நோக்கி எமது தாய்நாட்டை கொண்டு செல்வதில் நாம் எல்லோரும் ஒன்றுபடுவோம்.

தாயகத்திற்குத் திரும்புங்கள்! – கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஒன்றியம் அழைப்பு!

சிங்கள ராணுவத்தால் அழிக்கப்பட்ட தமிழர் அடையாளங்களைக் கட்டியெழுப்பும் விடுதலைப் புலிகளின் முயற்சிக்கு ஆதரவாக, புலம் பெயர்ந்து வாழும் தமிழர் நாடு திரும்பி விடுதலைப் போரில் பங்கேற்க வேண்டும், என இலங்கையின் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஒன்றியம் இன்று அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கை விவரம்:

புலம் பெயர் வாழ் தேசங்களில் உள்ள எம் இரத்த உறவுகளே. எமது உறவுடன் இணைந்த தாழ்மையான வணக்கம்.

உங்களின் தாய் மண்ணில் உங்கள் உறவுகளாகிய நாங்கள் அனுபவிக்கும் துயரங்களையும் அழிவுகளையும் இழப்புக்களையும் எங்களுக்கு மேலாக உணர்ந்து கொண்ட நீங்கள் முன்னெடுக்கின்ற தாயகத்தின் தேசிய விடுதலைக்கான எழுச்சி செயற்பாடுகள் அனைத்தையும் அவதானித்து எங்களின் இதய குமுறல்களை எப்படி உங்களோடு பகிர்ந்து கொள்வதென்று புரியாத சூழ்நிலையில் வாய்மூடி மௌனிகளாக எங்கள் இதயம் வெடிக்கின்றது.

நீங்கள் வாழும் தேசத்தில் உங்கள் உள்ளக் குமுறல்களை துணிந்து வெளிப்படுத்தக்கூடிய சூழ்நிலையில் இருக்கின்றீர்கள். நாங்களோ இத் தாய் மண்ணில் வாழ்ந்துகொண்டு எங்கள் தழிழ் என்ற இனிய மூச்சை சுவாசிக்க முடியாதவர்களாக தவிக்கின்றோம்.

எமது தேசிய விடுதலை போராட்டத்தின் வரலாற்றையும் தேசிய தலைவரின் வழிகாட்டல்களையும் தமிழர்களாகிய நாம் அனைவரும் உணர்வோம்.

இவ்வாறான கால கட்டத்தில் எமது வடக்கு தாயகமாகிய யாழ்மண் இணைப்பின்றி துண்டாடப்பட்டதுடன், கிழக்கு தாயகம் மட்டுநகர் மண்ணும் தேசத் துரோகிகளின் வழிகாட்டல்களுடன் எமது தாயகத்தின் தனித்துவம் தடம் புரண்டு துண்டாடப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் விடுதலை பாதையின் வன்னிக் களமானது தனிமைப்படுத்தப்பட்டு இரத்த களமாக உருமாறியுள்ளதுடன், அங்கு எமது உறவுகளின் உயிர் அழிவுகளும் அளவிட முடியாத துயரத்தில் அனைவரையும் ஆழ்த்தியுள்ளது.

எமது தேசிய தலைவரும் அவருடன் இணைந்த எமது இரத்த உறவுகள் மீதும் சிறிலங்கா அரசு தங்களால் முடியாத செயற்பாட்டை மேற்கொள்வதற்காக இந்திய அரசுடனும் ஏனைய வல்லரசு நாடுகளுடன் இணைந்து வேறோர் அயல் நாட்டை கைப்பற்றுவதுபோல எமது இனத்தையும், தேசத்தையும் அழித்து விட்டு வெற்றி விழா கொண்டாடுகின்றார்கள்.

திரும்பி வாருங்கள்…

இவ்வாறான சூழ் நிலையில் எமது தேசிய விடுதலைக்கு தளமாகவும், போர் முனையாகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வன்னி போர்க்களத்தில் உள்ளவர்கள் எமது சகோதர இரத்த உறவுகள்தான். அவர்கள் மறு அவதாரங்கள் எடுப்பதற்கு கடவுளோ, மந்திரவாதிகளோ இல்லை.

அங்கு தேவைப்படுவதெல்லாம் ஆட்பலத்துடன், இணைந்த மனிதவலு தான். இவ்வலுப்பலத்தினை எமது தேசிய தலைவரின் இலக்கோடு இணைத்து கொள்வதற்கும், எம் உறவுகளை உயிர் ஊட்டுவதற்கும், புலம் பெயர்வாழ் தமிழ் மக்களாகிய நீங்கள் தேச விடுதலைக்கான அமைப்புக்கள், புத்திஜீவிகள், அரசியல்வாதிகள், கல்விமான்கள், இளைஞர், யுவதிகள் ஏனையோர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து சாதூரியமான திட்டங்களை மேற்கொள்வதுடன்,அழிந்து விட்ட எமது தாய் மண்ணின் சமூக, பொருளாதார, கல்வி, கலை, கலாச்சார, விழுமியங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், எமது தேசவிடுதலையை வென்றெடுப்பதற்கும் அனைவரும் விரைந்து வாரீர்! என்று அறைகூவல் விடுக்கின்றோம், என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஹிலாரி மீண்டும் பதவியேற்பு

hillary.jpgஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 2வது முறையாக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பதவியேற்பு விழாவின் போது, பதவி பிரமாண வாசகத்தை உச்சரிக்கும் போது குளறுபடி ஏற்பட்டதால் 2வது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட ஹிலாரி கிளிண்டனும், 2வது முறையாக பதவியேற்றுக் கொண்டுள்ளார். துணை அதிபர் ஜோ பைடன் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஹிலாரியின் கணவரான முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், மகள் செல்சியா உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

புலிகளுக்கு ஆதரவில்லை: முதல்வர்

0302-karunanidhi.jpgஇலங்கை தமிழர்களுக்காக மத்திய ஆட்சியிலிருந்து விலக மாட்டோம்; மாநில அரசையும் இழக்க மாட்டோம்; திமுகவை பொறுத்தவரை இலங்கை தமிழர் பிரச்சனை தான் முக்கியம்; பிரபாகரனையோ மற்ற தமிழர் தலைவர்களையோ ஆதரிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். இந்த பிரச்சனையில் ராமதாஸ், ஜெயலலிதா போன்றவர்களின் சதிச் செயல்களுக்கு ஆளாக மாட்டோம் என்றும் கருணாநிதி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
.
சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக செயற்குழுவில் முதலமைச்சர் கருணாநிதி பேசியதாவது: இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து திமுக கடந்த பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறது. அதற்காக வாதாடியும், போராடியும் வருகிறது. என்றும் இந்த நிலையில் தொடர்வோம்.

இப்போது தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்காக புதிய குரல் கிளம்பி இருக்கிறது. 1956 ஆம் ஆண்டு முதல் இலங்கை தமிழர் பிரச்சனைக்காக பல்வேறு தலைவர்கள் தமிழ்நாட்டை நாடி வந்திருக்கிறார்கள். அப்போது தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் பெரியார், அண்ணா, நான் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறார்கள்.

அதனடிப்படையில் அவர்களுக்காக குரல் கொடுத்துள்ளோம். அதனை தொடர்ந்து 198384 கால கட்டத்தில் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உள்ளிட்டோர் கொடூரமான படுகொலைக்கு ஆளாகி சிங்கள ராணுவத்தின் தமிழர் அழிப்பு நடவடிக்கை நடந்தது.
அப்போது மீண்டும் அமிர்தலிங்கம் தமிழகத்திற்கு வந்து ஆதரவு கோரினார். தமிழனுக்கு தமிழன் உதவி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தோம். அதன் பின்னர் விடுதலைப் போராட்ட இயக்கங்கள் தோன்றின.

அவர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து போராடியிருந்தால் அவர்கள் விரும்பியபடி தமிழீழம் என்றைக்கோ மலர்ந்திருக்கும். ஆனால் பிரபாகரனை ஒரு சர்வாதிகாரியாக ஏற்றுக் கொள் பவர்கள் மட்டுமே அங்கு செயல்பட முடியும் என்ற நிலை அங்கே உருவானது. இதனை தொடர்ந்து பலர் அழித்தொழிக்கப்பட்டனர்.

திமுகவை பொறுத்தவரை இலங்கை தமிழர்களுக்காகத்தான் எங்களுடைய குரல் ஒலிக்கும். பிரபாகரனையோ அல்லது எந்த தனிப்பட்ட தமிழர் தலைவர்களையும் நாங்கள் ஆதரிக்க வில்லை.

புலிகளின் நடவடிக்கைகளை ஏற்காமல் முகுந்தன், கருணா உள்ளிட்ட பலர் வெளியேறி இருக்கிறார்கள். இப்படி சகோதர யுத்தம் போன்ற கொடுமை களை நாங்கள் மறப்பதற்கு காரணம் அங்குள்ள தமிழர்கள் உரிமை பெற்று வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்து பத்திரிகையின் ஒரு சகோதர இதழான பிரண்ட்லைன் இதழில் பிரபாகரனின் அட்டைப் படம் போட்டு ஒரு பேட்டியை வெளியிட்டி ருந்தார்கள்.

அதனை கண்டு நான் திடுக்கிட்டுப்போனேன். என் விழிகள்  ஆச்சரியத்தால் விரிய அதனை பார்த்தேன்.  அதில் ஒரு கேள்வி பிரபாகரனிடம் கேட்கப்பட்டது. நீங்கள் வெற்றி பெற்றால் உங்கள் ஆட்சி எப்படி இருக்கும் என்பதே அந்த கேள்வி. அது சர்வாதிகார ஆட்சியாக இருக்கும் என்று பிரபாகரன் பதிலளித்திருந்தார். அப்போதே அவர்களுடைய போராட்டம் புளித்துப் போய் விட்டது.

சகோதர யுத்தம் நடத்திய பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக் கான ஆதரவு குறைந்தும், மறைந்தும் போனது. ஆனால் இன்று பச்சை குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட இலங்கை தமிழர்கள் கொல்லப்படு கிறார்கள். தாய்மார்கள் இழிவுப் படுத்தப்படுகிறார்கள். இதனை தாங்காமல் கதறி அழும் அவர்கள் தமிழகம் நம்மை காப்பாற்றாதா என்று அவலக் குரல் எழுப்புகிறார்கள்.

அதற்கு நாம் உதவ வேண்டாமா  என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த கூட்டத்தை இன்று நாம் கூட்டியிருக்கிறோம்.

ஆதரவு என்றால் ஆயுதமேந்தியோ, போர் தொடுத்தோ ஆதரவை அளிக்க முடியாது. தமிழக சக்தியை ஒன்று திரட்டுவதன் மூலமாகவே ஆதரவை அளிக்க முடியும். ஜனநாயக ரீதியில் தான் அந்த சக்தியை நாம் திரட்ட முடியும்.

அந்த வகையில்தான் இன்றைக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டி ருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகள் ஏதோ தாங்கள்தான் இலங்கை தமிழர்களின் பிரதிநிதி களைப் போல காட்டிக் கொள் கிறார்கள். நாம் இலங்கை தமிழர் களுக்கான போராட்டத்தை கைவிட்டு விட்டது போல பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். முதலமைச்சர் தலைமையில் எல்லோரும் போராட்டம் நடத்துவோம் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார். எதற்கு சொன்னார் என்று இன்றுதான் புரிகிறது.

எனக்கும், மத்திய அரசுக்கும் விரோதத்தை ஏற்படுத்தி இவர் செல்வாக்கை பெருக்கிக் கொள் வதற்காக இந்த செயலில் ராமதாஸ் ஈடுபட்டிருக்கிறார். அவர் ஆதரவு பத்திரிகைகள் மூலமாக இந்த செய்திகளை அவர் பரப்பி வருகிறார்.

இன்று கூட நாம் ஆட்சியை கலைத்து விட்டு வெளியேறி விடுவோம் என்று ஒரு பத்திரிகை ஆசையோடு செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு திமுக ஆட்சி போய் விடும்; அடுத்த ஆண்டு அதிமுக ஆட்சி ஏற்படும் என்று ஜெயலலிதா சொல்வதற்கு காரணம், இலங்கை தமிழர்களுக்காக போராட்டம் நடத்தி மத்தியில் திமுக ஆதரவை வாபஸ் பெற்று விடும்.

இங்குள்ள ஆட்சியை கலைத்து விட்டு வெளியேறி திண்ணை காலியாகி விடும். நாம் வந்து படுத்துக்கொள்ளலாம் என்று அவர் கனவு காண்கிறார்.

அண்ணன் எப்போது சாவான், திண்ணை எப்போது காலியாகும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் உங்களை நம்பி சொல்கிறேன். இந்த அண்ணன் சாக மாட்டான்; திண்ணையும் காலியாகாது என்று அவர்களுக்கு உணர்த்தும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும்.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களோடு பேசக் கூடியதும், அவர்கள் மீது பற்றும்,பாசமும் வைக்கக் கூடிய ஒரே கட்சி திமுகதான். வேறு யாருக்கும் அந்த உரிமை இல்லை.

இலங்கை தமிழர்களை காப்பாற்ற புறப்படுவது போல சிலர் நாடகமாடுகின்றனர். அவர்களை பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்ல நாம் எப்படி செயல்படுவது என்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தை ஏற்று நீங்கள் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக செயற்குழுவில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

சமூக கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் அபிவிருத்தியை நிலைத்து வைத்திருக்க முடியும்

images-0302.jpgகிராம மட்டத்திலே சமூக கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் தான் அபிவிருத்தியை நிலைத்துவைத்திருக்க முடியும். எனவே, சமூக கட்டமைப்புகளை உருவாக்கி அதன் மூலம் அபிவிருத்தியினை மேற்கொள்ள வேண்டும் என தம்பட்டை விதை நெல் உற்பத்தி நெல் களஞ்சியசாலை கட்டிட திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கரா தெரிவித்தார். சுவாட் அமைப்பு ஒக்ஸ்பாம் பிரித்தானிய நிறுவனத்தின் அனுசரணையுடன் நிலைத்திருக்கும் விவசாயத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் திருக்கோவில் தம்பட்டை பிரதேசத்தில் 3 கோடியே 71 இலட்சம் ரூபா செலவில் விதை நெல் உற்பத்தி நிலையம் ,நெற்களஞ்சியசாலை நிர்மாணிக்கப்பட்டு மக்கள் சார்க் அமைப்பிடம் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; எமது மாவட்டத்தில் பெண்கள் அதிகமாக அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபடுகின்றதை தற்போது காணக்கூடியதாகவுள்ளது. நான் கடந்த 12 வருடங்களாக இவ் மாவட்டத்தில் கடமை புரிந்து வருகின்றேன். ஆரம்பகாலங்களில் பெண்களின் பங்களிப்பை காண முடியாமல் இருந்தது. எத்துறைகளில் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதை மிகக் கவனமாக ஆராய்ந்து பெண்களின் பங்களிப்பு அபிவிருத்தித் திட்டத்தில் முக்கியம் என்பதை அடையாளம் கண்டு கொண்டு சுவாட் போன்ற அமைப்புகள் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க முயற்சித்தமையையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.இங்கு சமூக கட்டமைப்பு ஒன்று சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதை மிகத் தெளிவாக காண முடிகின்றது. இன்று எனக்கு முக்கியமான நாள்.இந்நாள் கரையோரப் பிரதேசத்தில் அதிகமான மக்களை சந்திக்கின்ற நாளாக அமைந்திருக்கின்றதுடன் இங்கு நூற்றுக்கு 99 வீதம் பெண்கள் இவ் அபிவிருத்தித் திட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதனைக் கண்டிக்கின்ற போது நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் தமிழர்களை பாதுகாக்க இந்தியா, ஐ.நா.முயற்சிக்க வேண்டும்

prakas.jpgமார்க் சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் பிரகாஷ் கரத், மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கையில் முல்லைத்தீவு பகுதியில் இரண்டரை லட்சம் தமிழர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

அந்த மக்களை வெளியேற்றி பாதுகாக்க இந்திய அரசும், ஐ.நா. சபையும் முயற்சிக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையும், சுதந்திரமும் கிடைக்க அரசியல் தீர்வு ஏற்படவேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்திலும், ஆணையர்களை நியமிப்பதிலும் சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் வலியுறுத்தி வருகிறது.

இதில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது.

வல்லுறவுக்குட்படுத்தியவரின் நாக்கை துண்டாடிய யுவதி

நீர்கொழும்பு தாகொன்ன பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீடொன்றில் கொள்ளையிடச் சென்ற ஒருவர், அங்கு தனிமையிலிருந்த யுவதியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய போது அந்த யுவதி அவரது நாக்கைக் கடித்து துண்டாடியுள்ளார். இதனையடுத்து மறுநாள் அவர் பொலிஸாரால் கைது செய்யபட்டு நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு தாகொன்ன பிரண்ஷிப் கார்டன் பகுதியிலுள்ள தனது சகோதரனின் வீட்டுக்கு வந்த போதே இந்த யுவதிக்கு இந்த நிலைமை ஏற்பட்டது. வீட்டிலிருந்துவர்கள் எல்லோரும் வெளியே சென்று விடவே இந்த யுவதி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இரவு 11 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையன் ஒருவர் இந்த யுவதியை கத்தி முனையில் மிரட்டி வீட்டில் கொள்ளையிட முயற்சித்துள்ளார். எனினும் அவருக்கு எதுவுமே அகப்படவில்லை. இதையடுத்து அவன் அந்த யுவதியை கத்திமுனையில் மிரட்டி பாலியல் வல்லுறவுக்குட் படுத்தியுள்ளான். இதன்போது அந்த யுவதி அவனது நாக்கை கடித்துத்துண்டாடி அதனை வெளியே துப்பிவிட்டார். நாக்கு இரண்டாகத் துண்டாடப்பட்ட ஆத்திரத்தில் அவன் அந்த யுவதியை கத்தியால் குத்த முற்பட்ட போது அந்த யுவதிக்கு கையில் காயங்களேற்பட்டுள்ளன.

இதற்கிடையில் அந்த யுவதி எழுப்பிய அவலக் குரல் கேட்டு அயலவர்கள் அங்கு வரவே துண்டாகிப்போன நாக்கையும் விட்டு விட்டு அவன் தப்பியோடி விட்டான். பின்னர் ஒருவாறு மினுவாங்கொடை ஆஸ்பத்திரிக்குச் சென்ற அவன் விபத்தில் நாக்கு துண்டாடப்பட்டதாகக் கூறி சிகிச்சை பெற்றுள்ளான். எனினும் அவர்கள் அவனை மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா ஆஸ்பத்திரிக்கு அனுப்பியுள்ளனர்.

அங்கிருந்து அவன் தப்பி வீடு சென்ற போது ஞாயிற்றுக்கிழமை வியாங்கொடையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் துண்டாடப்பட்ட அவரது நாக்கையும் எடுத்து வந்த பொலிஸார் அவரை மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். இதுதொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகிறது

யுத்தத்தின் பேரில் அரசியல் நடத்துவதை நிறுத்துமாறு ஐ.தே.கட்சி கோருகின்றது

logo_unp.jpgஐ.தே.கட்சி பயங்கரவாதத்திற்கு எதிராக நடைபெறும் யுத்தத்தினை நிறுத்துமாறு கேட்கவில்லை. யுத்தத்தின் பேரில் அரசியல் நடத்துவதையே எதிர்க்கின்றோம். இவ்வாறு தெவித்தார் மத்திய மாகாண ஐ.தே.க. முதலமைச்சர் வேட்பாளரான எஸ்.பி. திஸாநாயக்க. குண்டசாலைத் தொகுதியில் தம்பராவவில் நடைபெற்ற ஐ.தே.கட்சிப் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் எஸ்.பி. திஸாநாயக்க தமதுரையில்; மாகாண சபைத் தேர்தலில் மக்கள் வெற்றி பெற வேண்டும் மக்கள் சக்தி வெற்றி பெற வேண்டும். மத்திய மாகாணத்தில் தொழிலற்ற இளைஞர்களுக்குத் தொழில் வாய்ப்பு வழங்க வேண்டும். இதன் மூலம் இளைஞர்களின் வருமானத்தினை அதிகரிக்க வேண்டும். இளைஞர் சக்தியை நாட்டின் மாகாணத்தின் அபிவிருத்திக்குப் பயன்படுத்த வேண்டும். இந்த மாகாணத்தினை ஆட்சி செய்தவர்கள் எவ்வித அபிவிருத்தி வேலைகளையும் முன்னெடுக்கவில்லை. வெளிநாட்டு மூலதனம் பெறப்பட்டு உற்பத்திகள் அதிகரிக்க வேண்டும். உற்பத்திச் சக்தியை அதிகரித்தால் வேலைவாய்ப்பினை, வருமானத்தினை அதிகரிக்க முடியும்.

சகல மின் உற்பத்தி நிலையங்களும் மலையகத்திலிருந்த போதும் இதனால் ஈட்டப்படும் வருமானம் மலையகத்திற்குச் செலவிடப்படுவதில்லை. சிறுபான்மை மக்கள் குறிப்பாக தமிழர் பெருந்தோட்ட வருமானத்தினை மட்டும் நம்பி வாழமுடியாது. அவர்களிடம் வருமானத்தினை பெறக்கூடிய கைத்தொழில்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

அரசிடம் அதற்கான திட்டம் இல்லை. அரசோடு இணைந்துள்வர்களுக்கும் அதற்கான அறிவும் ஆற்றலும் இல்லை. எனவே தான் மலையகத்தில் இ.தொ.கா., ம.ம.மு. ஆகிவற்றை புறக்கணித்த தமிழர்கள் ஐ.தே.கட்சியை ஆதரிக்கின்றனர். ஐ.தே.க.வை நீண்ட காலமாக ஆதரிக்கும் முஸ்லிம்களைக் கூட ஐ.தே.க.வை விட்டு பிரிக்க முடியாது. சிறுபான்மை சமூகத்தின் வாக்கு வங்கி எம்மிடமேயுள்ளது. மலையகத் தமிழ்த் தலைமைகள் எனக் கூறிக் கொள்வோர் இம்முறை நிராகரிக்கப்படுவர். அரசாங்கம் கள்ளவாக்குகள் போட நினைக்கிறது. அதற்கு இடமளிக்க மாட்டோம் என்றார்.

யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் அபிவிருத்தியை நோக்கிச் செல்வதே அரசின் அடுத்த பிரதான இலக்காகும் – பசில்

basil.jpgநாட்டில் யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் அபிவிருத்தியை நோக்கிச் செல்வதே அரசின் அடுத்த பிரதான இலக்காகும். அடுத்துவரும் காலங்களில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அபிவிருத்தி யுகமொன்றை உருவாக்க அரசாங்கம் பாரிய முயற்சிகளை மேற்கொள்ளும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிங்கிரிய தேர்தல் தொகுதிக்குட்பட்ட கல்வெவ பிரதேசத்தில் நூறு இலட்சம் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டத்தினை அங்குரார்ப்பணம் செய்துவைக்கும் நிகழ்ச்சியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் குறிப்பிடுகையில்:-

கடந்த மூன்று வருடங்களில் அபிவிருத்திக்கு பெருமளவு நிதி செலவிடப்பட்டுள்ளது. நாட்டில் யுத்தத்திற்கு மத்தியில், மத்திய அரசினாலும், மாகாண அரசுகளினாலும் பாரியய அபிவிருத்தி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. கடந்த கால அரசுகள் மேற்கொண்ட தவறான வழி நடத்தல்களால் நாட்டில் யுத்த நிலைமை மோசமடைந்தது. எல். ரி. ரி. ஈ. பயங்கரவாதிகள் பலம் பெற்றனர். வடக்கில் எமது படையினரால் கண்டுபிடிக்கப்படுகின்ற சட்டவிரோத ஆயுதங்கள் இவற்றை நிரூபிக்கின்றன.

இந்நிலைமை காரணமாக கடந்த இரண்டு வருட வரவு செலவுத் திட்டத்தில் பெருமளவு நிதியுத்த செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது யுத்தம் முடிவடைந்து வருவதால் எதிர்வரும் காலங்களில் அபிவிருத்திக்கு பாரிய நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படும். கிழக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படுவதைப் போன்று வட மாகாணத்திற்கும் விஷேடமான அபிவிருத்தி திட்டம் ஒன்று வகுக்கப்படும். அத்துடன் நாடு முழுவதற்கும் துரித அபிவிருத்தி முயற்சிகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெருமளவு வளங்களை அபிவிருத்திக்கு பயன்படுத்து வதால் உற்பத்தி, தொழில் வாய்ப்பு துறைகளில் பாரிய முன்னேற்றத்தை அடைந்து கொள்ள முடியும் என அரசு எதிர்பார்க்கின்றது. கடந்த மூன்று வருட காலத்தில் யுத்த நிலைமைக்கு மத்தியிலும் அரசு மேற்கொண்ட அபிவிருத்தி முயற்சிகள் காரணமாக எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயர்வடைந்துள்ளதை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலைமையை அடுத்த சில வருடங்களில் மேலும் உயர்த்துவதற்கு அரசாங்கம் திட்டம் வகுத்துள்ளது என்று கூறினார்.