ஐ.தே.கட்சி பயங்கரவாதத்திற்கு எதிராக நடைபெறும் யுத்தத்தினை நிறுத்துமாறு கேட்கவில்லை. யுத்தத்தின் பேரில் அரசியல் நடத்துவதையே எதிர்க்கின்றோம். இவ்வாறு தெவித்தார் மத்திய மாகாண ஐ.தே.க. முதலமைச்சர் வேட்பாளரான எஸ்.பி. திஸாநாயக்க. குண்டசாலைத் தொகுதியில் தம்பராவவில் நடைபெற்ற ஐ.தே.கட்சிப் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் எஸ்.பி. திஸாநாயக்க தமதுரையில்; மாகாண சபைத் தேர்தலில் மக்கள் வெற்றி பெற வேண்டும் மக்கள் சக்தி வெற்றி பெற வேண்டும். மத்திய மாகாணத்தில் தொழிலற்ற இளைஞர்களுக்குத் தொழில் வாய்ப்பு வழங்க வேண்டும். இதன் மூலம் இளைஞர்களின் வருமானத்தினை அதிகரிக்க வேண்டும். இளைஞர் சக்தியை நாட்டின் மாகாணத்தின் அபிவிருத்திக்குப் பயன்படுத்த வேண்டும். இந்த மாகாணத்தினை ஆட்சி செய்தவர்கள் எவ்வித அபிவிருத்தி வேலைகளையும் முன்னெடுக்கவில்லை. வெளிநாட்டு மூலதனம் பெறப்பட்டு உற்பத்திகள் அதிகரிக்க வேண்டும். உற்பத்திச் சக்தியை அதிகரித்தால் வேலைவாய்ப்பினை, வருமானத்தினை அதிகரிக்க முடியும்.
சகல மின் உற்பத்தி நிலையங்களும் மலையகத்திலிருந்த போதும் இதனால் ஈட்டப்படும் வருமானம் மலையகத்திற்குச் செலவிடப்படுவதில்லை. சிறுபான்மை மக்கள் குறிப்பாக தமிழர் பெருந்தோட்ட வருமானத்தினை மட்டும் நம்பி வாழமுடியாது. அவர்களிடம் வருமானத்தினை பெறக்கூடிய கைத்தொழில்களை அறிமுகப்படுத்த வேண்டும்.
அரசிடம் அதற்கான திட்டம் இல்லை. அரசோடு இணைந்துள்வர்களுக்கும் அதற்கான அறிவும் ஆற்றலும் இல்லை. எனவே தான் மலையகத்தில் இ.தொ.கா., ம.ம.மு. ஆகிவற்றை புறக்கணித்த தமிழர்கள் ஐ.தே.கட்சியை ஆதரிக்கின்றனர். ஐ.தே.க.வை நீண்ட காலமாக ஆதரிக்கும் முஸ்லிம்களைக் கூட ஐ.தே.க.வை விட்டு பிரிக்க முடியாது. சிறுபான்மை சமூகத்தின் வாக்கு வங்கி எம்மிடமேயுள்ளது. மலையகத் தமிழ்த் தலைமைகள் எனக் கூறிக் கொள்வோர் இம்முறை நிராகரிக்கப்படுவர். அரசாங்கம் கள்ளவாக்குகள் போட நினைக்கிறது. அதற்கு இடமளிக்க மாட்டோம் என்றார்.