யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் அபிவிருத்தியை நோக்கிச் செல்வதே அரசின் அடுத்த பிரதான இலக்காகும் – பசில்

basil.jpgநாட்டில் யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் அபிவிருத்தியை நோக்கிச் செல்வதே அரசின் அடுத்த பிரதான இலக்காகும். அடுத்துவரும் காலங்களில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அபிவிருத்தி யுகமொன்றை உருவாக்க அரசாங்கம் பாரிய முயற்சிகளை மேற்கொள்ளும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிங்கிரிய தேர்தல் தொகுதிக்குட்பட்ட கல்வெவ பிரதேசத்தில் நூறு இலட்சம் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டத்தினை அங்குரார்ப்பணம் செய்துவைக்கும் நிகழ்ச்சியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் குறிப்பிடுகையில்:-

கடந்த மூன்று வருடங்களில் அபிவிருத்திக்கு பெருமளவு நிதி செலவிடப்பட்டுள்ளது. நாட்டில் யுத்தத்திற்கு மத்தியில், மத்திய அரசினாலும், மாகாண அரசுகளினாலும் பாரியய அபிவிருத்தி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. கடந்த கால அரசுகள் மேற்கொண்ட தவறான வழி நடத்தல்களால் நாட்டில் யுத்த நிலைமை மோசமடைந்தது. எல். ரி. ரி. ஈ. பயங்கரவாதிகள் பலம் பெற்றனர். வடக்கில் எமது படையினரால் கண்டுபிடிக்கப்படுகின்ற சட்டவிரோத ஆயுதங்கள் இவற்றை நிரூபிக்கின்றன.

இந்நிலைமை காரணமாக கடந்த இரண்டு வருட வரவு செலவுத் திட்டத்தில் பெருமளவு நிதியுத்த செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது யுத்தம் முடிவடைந்து வருவதால் எதிர்வரும் காலங்களில் அபிவிருத்திக்கு பாரிய நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படும். கிழக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படுவதைப் போன்று வட மாகாணத்திற்கும் விஷேடமான அபிவிருத்தி திட்டம் ஒன்று வகுக்கப்படும். அத்துடன் நாடு முழுவதற்கும் துரித அபிவிருத்தி முயற்சிகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெருமளவு வளங்களை அபிவிருத்திக்கு பயன்படுத்து வதால் உற்பத்தி, தொழில் வாய்ப்பு துறைகளில் பாரிய முன்னேற்றத்தை அடைந்து கொள்ள முடியும் என அரசு எதிர்பார்க்கின்றது. கடந்த மூன்று வருட காலத்தில் யுத்த நிலைமைக்கு மத்தியிலும் அரசு மேற்கொண்ட அபிவிருத்தி முயற்சிகள் காரணமாக எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயர்வடைந்துள்ளதை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலைமையை அடுத்த சில வருடங்களில் மேலும் உயர்த்துவதற்கு அரசாங்கம் திட்டம் வகுத்துள்ளது என்று கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *