கிராம மட்டத்திலே சமூக கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் தான் அபிவிருத்தியை நிலைத்துவைத்திருக்க முடியும். எனவே, சமூக கட்டமைப்புகளை உருவாக்கி அதன் மூலம் அபிவிருத்தியினை மேற்கொள்ள வேண்டும் என தம்பட்டை விதை நெல் உற்பத்தி நெல் களஞ்சியசாலை கட்டிட திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கரா தெரிவித்தார். சுவாட் அமைப்பு ஒக்ஸ்பாம் பிரித்தானிய நிறுவனத்தின் அனுசரணையுடன் நிலைத்திருக்கும் விவசாயத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் திருக்கோவில் தம்பட்டை பிரதேசத்தில் 3 கோடியே 71 இலட்சம் ரூபா செலவில் விதை நெல் உற்பத்தி நிலையம் ,நெற்களஞ்சியசாலை நிர்மாணிக்கப்பட்டு மக்கள் சார்க் அமைப்பிடம் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; எமது மாவட்டத்தில் பெண்கள் அதிகமாக அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபடுகின்றதை தற்போது காணக்கூடியதாகவுள்ளது. நான் கடந்த 12 வருடங்களாக இவ் மாவட்டத்தில் கடமை புரிந்து வருகின்றேன். ஆரம்பகாலங்களில் பெண்களின் பங்களிப்பை காண முடியாமல் இருந்தது. எத்துறைகளில் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதை மிகக் கவனமாக ஆராய்ந்து பெண்களின் பங்களிப்பு அபிவிருத்தித் திட்டத்தில் முக்கியம் என்பதை அடையாளம் கண்டு கொண்டு சுவாட் போன்ற அமைப்புகள் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க முயற்சித்தமையையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.இங்கு சமூக கட்டமைப்பு ஒன்று சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதை மிகத் தெளிவாக காண முடிகின்றது. இன்று எனக்கு முக்கியமான நாள்.இந்நாள் கரையோரப் பிரதேசத்தில் அதிகமான மக்களை சந்திக்கின்ற நாளாக அமைந்திருக்கின்றதுடன் இங்கு நூற்றுக்கு 99 வீதம் பெண்கள் இவ் அபிவிருத்தித் திட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதனைக் கண்டிக்கின்ற போது நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.