03

03

ஜேர்மனில் உள்ள இலங்கைத் தூதரகம் மீது தாக்குதல்

flag_german.jpgஜேர்மனிய தலைநகர்  பேர்லினில் உள்ள இலங்கைத் தூதரகம் மீது நேற்று இரவு இனந்தெரியாதவர்கள் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இதன் காரணமாக தூதரகத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 

மிரட்டலால் அல்ல, தப்பபிப்பிராயங்களை பேசித் தீர்க்கலாம்; ஜேர்மனி கருத்து

flag_german.jpgஜேர்மனியத் தூதுவரும் அரச சார்பற்ற சில நிறுவனங்களும் ஏனைய வெளிநாட்டவர்கள் சிலரும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்களாக தென்படுவதாகவும் அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றப்போவதாகவும் பாதுகாப்பமைச்சின் செயலாளரிடமிருந்து வெளியிடப்பட்ட அச்சுறுத்தலை நல்ல விடயமாக கருதவில்லை என்று பேர்லின் தெரிவித்துள்ளது.  “சாத்தியமான தப்பபிப்பிராயங்களை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். மிரட்டல்களால் அல்ல’ என்று பேர்லினிலுள்ள வெளிவிவகார அமைச்சுப்பேச்சாளர் தெரிவித்ததாக ஏ. எவ்.பி செய்திகள் தெரிவித்தன.

பயங்கரவாதிகளுக்கு இரண்டாவது உயிர்மூச்சைக்கொடுக்க முயற்சிக்கும் எந்தவொரு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனமோ, இராஜதந்திரியோ அல்லது நிருபரோ முயற்சித்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று “ஞாயிறு ஐலன்ட்’ இதழுக்கு பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

அண்மையில் செய்திப் பத்திரிகை ஆசிரியர் ஒருவரின் இறுதிக்கிரியையின் போது ஜேர்மனியின் தூதுவர் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு அவரை அழைத்து விளக்கம் கேட்டிருந்தது.

ஆஸ்பத்திரி மீதான தாக்குதலுக்கு சர்வதேச அமைப்புகள் கடும் விசனம்

புதுக் குடியிருப்பு வைத்தியசாலை மீதான ஆட்லறித் தாக்குதலில் பொதுமக்கள் பலியாகியிருப்பதையிட்டு சர்வதேச உதவிவழங்கும் அமைப்புகள் கடும் விசனமும் கவலையும் தெரிவித்துள்ளன.  ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த மருத்துவமனை இருதடவைகள் ஷெல் வீச்சுக்கு இலக்காகியிருப்பதை நமது அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளதாக யுனிசெப்பின் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டர் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு இரவு இரண்டாவது தடவையாக இடம்பெற்ற தாக்குதலில் 30 படுக்கைகளும் ஆஸ்பத்திரி விடுதியும் சேதமடைந்ததாகவும் தாக்குதல் இடம்பெற்ற சமயம் அந்த விடுதியில் அதிக எண்ணிக்கையான நோயாளர்கள் தங்கியிருந்ததாகவும் அவர்களில் சிறுவர்களும் அடங்கியிருந்ததாகவும் ஜேம்ஸ் எல்டர் மேலும் தெரிவித்திருக்கிறார். அதேசமயம், இறந்தவர்கள், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை அவர் உறுதிப்படுத்தவில்லை. 

ஆயினும் புதுக்குடியிருப்பு மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் பி.வரதன் தொலைபேசி மூலம் தெரிவிக்கையில்; முதலாவது ஆட்லறித் தாக்குதலில் இருவரும் இரண்டாவது தாக்குதலில் 6 பேரும் கொல்லப்பட்டதாகவும் 20 க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். வைத்தியசாலை மீது அரச படையினர் தாக்குதல் நடத்தியதாக தமிழ்நெற் இணையத்தளம் கூறியுள்ளது.

ஆனால், இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இதனை மறுத்துள்ளார். ஆஸ்பத்திரியை தாக்க வேண்டிய எந்தவொரு காரணமும் எமக்கு இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

பாதுகாப்புப் பகுதிக்கு வருமாறு மதத்தலைவர்களுக்கு அழைப்பு – வத்திக்கான் பிரதிநிதியிடம் ஜனாதிபதி வேண்டுகோள்

02022009.jpgமோதல் இடம்பெறும் பிரதேசங்களில் தங்கியுள்ள மதத் தலைவர்களை அரசாங்கப் பாதுகாப்புப் பிரதேசங்களுக்கு வந்து சேருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அழைப்பு விடுத்தார். மோதல் நடைபெறும் பிரதேசங்களிலிருந்து வந்துசேரும் மதத் தலைவர்களதும் பொதுமக்களினதும் நலன்புரி நடவடிக்கைகளைக் கவனிப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த செய்தியை மோதல் நடைபெறும் பிரதேசங்களில் தங்கியுள்ள மதத் தலைவர்களுக்குக் கொண்டு செல்லுமாறு வத்திக்கானின் இலங்கையிலுள்ள தூதுவர் மொன்சிக்னர் மரியோ செனரரியிடம் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார். வத்திக்கானின் இலங்கையிலுள்ள தூதுவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது ஜனாதிபதி, புலிகள் இயக்கத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி சிவிலியன்களை எதுவிதமான பாதிப்புக்களுமின்றி விடுவிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் குறித்தும் எடுத்துக் கூறினார்.

புலிகள் இயக்கத்தினர் அப்பாவி சிவிலியன்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருவதையும் ஜனாதிபதி வத்திக்கானின் இலங்கையிலுள்ள தூதுவருக்கு இச்சமயம் சுட்டிக்காட்டினார். அப்பாவி சிவிலியன்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு அவர்களை விடுவிக்கவென புலிகள் இயக்கத்தினருக்கு ஏற்கனவே 48 மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டது. அதே நேரம் ஆயுதங்களைக் கீழேவைத்துவிட்டு பாதுகாப்பு படையினரிடம் சரணடையுமாறும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.

இதன்படி புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலர் ஏற்கனவே சரணடைந்துள்ளனர். எஞ்சியுள்ளவர்களையும் சரணடையுமாறே மீண்டும் கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் வத்திக்கானின் இலங்கையிலுள்ள தூதுவர் ஜனாதிபதியை நேற்று சந்தித்தார். அச்சமயமே ஜனாதிபதி மோதல் நடைபெறும் பிரதேசங்களில் தங்கியுள்ள மதத் தலைவர்களைப் பாதுகாப்பு பிரதேசங்களுக்கு வந்து சேருமாறு அழைப்பு விடுத்தார். அத்தோடு இச்செய்தியை அவர்களுக்குக் கொண்டு செல்லுமாறும் வத்திக்கானின் இலங்கையிலுள்ள தூதுவரிடம் கேட்டுக்கொண்டார். இச்சந்திப்பின்போது ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் பிரசன்னமாயிருந்தார்.

இன்று மன்னாரில் மக்கள் ஆர்ப்பாட்டம்.

இன்று மன்னாரில் காலை 11 மணிக்கு சமாதானத்தை விரும்பும் தமிழர்கள் புலிகளுக்கெதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது. இவ் ஆர்பாட்டத்தில் வன்னியில் ஓர் சிறிய பகுதியினுள் முடங்கியுள்ள புலிகள் தொடர்ந்தும் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துவதை தவிர்த்து அவர்களது இயல்பு வாழ்கைக்கு வழிவிடவேண்டும். போராட்டம் எனும் பெயரால் தொடர்ந்தும் தமிழ் இளைஞர் யுவதிகளை யுத்த முனையில் பலிகொடுப்பதை கைவிட வேண்டும். தமது விருப்பத்திற்கு மாறாக இயக்கத்தில் தொடர்ந்தும் தடுத்து வைத்து போரில் ஈடுபடுத்தும் இளைஞர் யுவதிகளை விடுவித்து அவர்களை தமது குடும்பத்தினருடன் இணைந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகளுடன்  இவ் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இவ்வார்பாட்டத்திற்கு மன்னார் வவுனியா பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் எவ்வித அச்சமும் இன்றி புலிகளின் தொடர் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்க இணைந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டி நிற்கின்றனர்.-

உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இலங்கை பொருளாதாரத் துறையில் முன்னேற்றம் – பசில் எம். பி.

basil.jpgஉலக பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நமது நாடு பொருளாதாரத் துறையில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டு வருகிறதென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். சுமார் 35 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மத்திய வங்கியின் மாத்தளை மாவட்ட பிரதேச காரியாலயத்தை திறந்து வைக்கும் வைபவம் நேற்று முன்தினம் முதலாம் திகதி மாத்தளையில் இடம்பெற்ற போது விஷேட அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பஸில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.

இவ்வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர்:- முழு உலகிலும் பொருளாதார துறையின் விற்பன்னர்கள் எனக் கூறும் அமெரிக்கா இன்று பொருளாதாரத்துறையில் பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. சரித்திரத்தில் என்றும் இல்லாதவாறு அமெரிக்கா பெரும் பொருளாதார சவால்களை எதிர்நோக்கி வருகின்றது. மிகவும் குறுகிய காலத்தில் பலவிதமான சவால்களை எதிர்நோக்கி வருகின்ற அமெரிக்காவில் வேலையில்லாப் பிரச்சினை, பணவீக்கம் என்பனவற்றால் அமெரிக்கர்கள் இன்று பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இதற்கெல்லாம் மூல காரணம் நாட்டை வழி நடத்திட சிறந்த தலைமைத்துவம் இல்லாமை, சிறந்த பொருளாதாரக் கொள்கை, சரியான முகாமைத்துவம் இல்லாமை என்பதையே உலக பொருளாதார வித்துனர்கள் எடுத்துக் கூறுகின்றனர்.

2003ஆம் ஆண்டு நம் நாட்டில் ஒரு தனிநபர் வருமானம் ஆயிரம் அமெரிக்க டொலராகவே இருந்தது. இது இன்று 2070 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. 2003ம் ஆண்டு குறைந்த வரு மானம் பெறுவோரின் எண்ணிக்கை 22.3 வீதமாக இருந்த போதும் அது இப்போது 15 வீதமாகக் குறைந்துள்ளது. ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடகாலம் பூர்த்தியாகுவதற்குள் 2006ம் ஆண்டு ஏற்பட்ட மாவிலாறு பிரச்சினையுடன் விடுதலைப் புலிகளுடன் ஏற்பட்ட யுத்தத்துடன் முழு கிழக்கும் இராணுவ ரீதியாக மீட்கப்பட்டு, அதைத் தொடர்ந்து பல்லாண்டு காலமாக பயிர்ச் செய்கை பண்ணப்படாத பல ஆயிரக் கணக்கான வயல் நிலங்கள் தற்போது பயிர்ச் செய்யப்பட்டு கிழக்குப் பகுதி மக்கள் விவசாயத்துறையில் தற்போது தன்னிறைவு கண்டு வருகின்றனர். கிழக்கு பகுதிகளில் விவசாயத் துறையை முன்னேற்றிட அவர்களுக்குத் தேவையான விதை நெல், பசளை, டிரக்டர் வண்டிகள், கிருமிநாசினி என்பன மத்திய வங்கியின் பூரண அனுசரணையுடன் வழங்கப் பட்டுள்ளன. இன்று கிழக்கு மக்கள் பரிபூரண சுதந்திரத்துடன் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிழக்கை மீட்டெடுத்த இராணுவ வீரர்கள், இன்று வெற்றிகரமாக வடக்கையும் மீட்டெடுத்து பயங்கரவாதிகளை வெற்றிகொள்ள முடியும் என்பதை உலகின் பல வல்லரசுகளுக்கும் எடுத்துக் காட்டி சிறந்ததொரு இராணுவ சக்தியாக எமது இராணுவம் விளங்குகின்றது. ஜனாதிபதியின் விசேட பணிப்பின் பேரில் அண்மையில் ஐ. நா. சபையின் செயலாளர் நாயகத்தை சந்தித்தேன். அப்போது கிளிநொச்சியை எமது இராணுவத்தினர் மீட்டெடுத்ததைப் பற்றி அவருக்கு எடுத்துக் கூறினேன். உங்கள் நாட்டு இராணுவம் கிளிநொச்சி மீட்டது ஒரு பெரிய காரியமல்ல. இராணுவ ரீதியாக பயங்கரவாதிகளைத் தோல்வியடையச் செய்து ஒரு சிவிலியனும் பலியாகாமல் அவர்களின் சக்தியை உடைத் தெறிந்து அவர்களை பூஜ்யமாக்கி முழு உலகிலும் உங்கள் நாட்டு இராணுவம் தங்களின் பெயர்களைப் பதிவு செய்து சாதனை படைத்தார்களே இதுதான் உங்கள் நாடு கண்டுகொண்ட பெரும் வெற்றி என்று ஐ. நா. சபை செயலாளர் நாயகம் கூறியது நாம் பெற்ற வெற்றி.

இன்று வடக்கில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற பகுதிகளில் எமது அபிவிருத்திப் பணிக்கு எமது அரசுக்குக் கிட்டாத, பயிர் செய்யப்படாத பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் இராணுவத்தினரால் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. காலப் போக்கில் இந்த நிலங்களையும் பயிர் செய்து அங்கே அபிவிருத்திப் பணிகளை முடுக்கிவிட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

புலிகளின் 3 இலக்குகள் மீது 6 தடவை விமானத் தாக்குதல்

jet_11-12.jpgமுல்லைத் தீவில் தரை வழியாக முன்னேறிவரும் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இனங் காணப்பட்ட புலிகளின் வெவ்வேறு மூன்று இலக்குகளை குறிவைத்து நேற்று ஆறு தடவைகள் விமானத் தாக்குதல்களை நடத்தியதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். விமானப்படைக்குச் சொந்தமான மிக்-27, கிபீர் ஆகிய ஜெட் விமானங்களும், எம்.ஐ-24 விமானமுமே நேற்று முல்லைத்தீவில் கடும் தாக்குதல்களை நடத்தின.

புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து மேற்கு நோக்கி முன்னேறிவரும் நான்காம் படையணியினருக்கு ஒத்துழை ப்பு வழங்கும் வகையில் நேற்றுக்காலை 10 மணிக்கு முதலாவது தாக்குதல் நடத்தப்பட்டது. சந்தியிலிருந்து ஒரு கிலோமீற்றர் மேற்கே இனங்காணப்பட்ட புலிகளது இலக்கு நோக்கி மிக்-27 தாக்குதல் நடத்தியது.

அதனைத் தொடர்ந்து காலை 11.20 மணிக்கு புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து ஒன்றரை கிலோமீற்றர் கிழக்கிலுள்ள புலிகளின் இலக்குகள் மீது கிபீர் ஜெட் விமானம் தாக்குதல் நடத்தியது. இராணுவத்தின் 59ம் படைப்பிரிவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் விங் கமாண்டர் கூறினார். முல்லைத்தீவு கடனீரேரியிலிருந்து ஒரு கிலோமீற்றர் வடமேற்கே அமைந்துள்ள இனங் காணப்பட்ட இலக்கின் மீது அடுத்தடுத்து நான்கு தடவைகள் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இராணுவத்தின் 59ம் படைப்பிரிவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே இவை நடத்தப்பட்டுள்ளன. நண்பகல் 1.45 மணிக்கு மிக்-27 இன் மூலமாகவும் மாலை 3.30 மணிக்கு எம்.ஐ-24 விமானம் மூலமாகவும் மாலை 3.47 மணிக்கு கிபீர் ஜெட் மூலமாகவும் மாலை 5 மணிக்கு மிக்-27 ஜெட் விமானம் மூலமாகவும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இத்தாக்குதல்கள் அனைத்தும் வெற்றியளித்திருப்பதனை விமான ஓட்டிகள் உறுதி செய்திருப்பதாகவும் விங் கமாண்டர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு வலயத்துக்குள் விரைவாக வருமாறு அரசு மீண்டும் வலியுறுத்தல

புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும் சிவிலியன்கள் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்துக்குள் இயன்றளவு விரைவில் வருகை தர வேண்டுமென அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக படையினர் இறுதிக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்நிலையில் புலிகள், சிவிலியன்களை அங்கிருந்து செல்லவிடாமல் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முயற்சிக்கின்றனர்.

இவ்வாறு பலவந்தமாக புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டிருக்கும் சிவிலியன்களையே இயன்றளவு விரைவில் அரசாங்கத்தின் பாதுகாப்பு வலயத்துக்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இலங்கையின் பாதுகாப்பு படையினர் வன்னியில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந் நடவடிக்கைகளின் போது பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாதென்பதில் அரசாங்கமும் படையினரும் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளனர்.  சிவிலியன்களது பாதுகாப்பை கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் பாதுகாப்பு வலயம் ஒன்று பிரகடனம் செய்யப்பட்டது. இருந்தபோதிலும் சிவிலியன்கள் இதுவரை அதனை உபயோகத்துக்கு எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை.

வன்னியிலுள்ள சிவிலியன்கள் தமது சொந்த பாதுகாப்பை கருத்திற்கொண்டு மேற்படி பாதுகாப்பு வலயத்துக்குள் இயன்றளவு விரைவில் வந்து சேருமாறு அரசாங்கம் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களினூடாக அறிவித்து வருகின்றது. பாதுகாப்பு வலயத்தினுள் வரும் சிவிலியன்களது பாதுகாப்புக்கு மாத்திரமே அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கும். புலிகளது கட்டுப்பாட்டிலுள்ள சிவிலியன்களை அரசாங்கம் பொறுப்பேற்காது.  எனவே இயன்றளவு விரைவில் சிவிலி யன்கள் பாதுகாப்பு வலயத்துக்குள் வரவேண்டும்.

இரத்த தானத்திற்கு கோரிக்கை

vavuniya-_blod.jpgவன்னிப் பகுதியில் இடம்பெற்றுவரும் ஷெல் தாக்குதல்களால் படுகாயமடைந்து வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவர்களின் தொகை அதிகரித்து வருவதால் அங்கு இரத்தம் தேவைப்படுவதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து ஈ.பி.டி.பி. மற்றும் புளொட் அமைப்புகளின் ஏற்பாட்டில் இரத்ததானம் செய்யப்பட்டது.

வன்னி மாவட்ட ஈ.பி.டி.பி. அமைப்பாளர் சிவன் சிவகுமார் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசபைத் தலைவர் செ.திஸவீரசிங்கம் ஆகியோரின் ஏற்பாட்டில் பல இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை இரத்ததானம் செய்தனர். இதேபோல, புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் சூரியின் ஏற்பாட்டில் பல இளைஞர்கள் சனிக்கிழமை இரத்ததானம் செய்துள்ளனர்.

அத்துடன் புளொட் அமைப்பினர் வவுனியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் வன்னிப்பகுதி மக்களுக்கு உடு துணிகள் ,பெற்சீற் , உணவுப்பொருட்களையும் வழங்கினார்கள். இதேவேளை, மேலும் பலர் இரத்ததானம் செய்ய முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தீவிரவாதிகளை விருந்தாளிகளைப் போல் பாகிஸ்தான் நடத்துகிறது இந்தியா குற்றச்சாட்டு – எம்.கே. நாராயணன்

mk-narayanan.jpgவீட்டுக் காவலில் உள்ள விருந்தாளிகளை வீட்டு விருந்தாளிகளைப் போல் பாகிஸ்தான் நடத்துகிறது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் குற்றம் சாட்டினார்.  மும்பையில் கடந்த நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இவர்களுக்கு பின்னணியாக இருந்தவர்கள் பாகிஸ்தானில்  உள்ளனர். இதற்கான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டது.

இதற்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான பதில் வரவில்லை. அவர்கள் கேட்டால் இன்னும் அதிக தகவல்களை தரவும் இந்தியா தயாராக உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் கூறினார்.  இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த பேட்டி:  இந்தியா அளித்துள்ள ஆதாரங்கள் அடிப்படையில் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால் இதற்கு மாறாக பாகிஸ்தான் இந்தியாவிடமே இருமுறை கேள்விக் கணைகளை தொடுத்தது. ஒருமுறை கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டோம். லஷ்கர் இயக்கத்தின் தலைவர் லக்வி உள்ளிட்ட சில தீவிரவாத தலைவர்கள வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக பாகிஸ்தான் கூறுகிறது. ஆனால், இந்த தீவிரவாதிகள் வீட்டு விருந்தாளிகளைப் போலத்தான் நடத்தப்படுகிறார்கள்.

மசூர் அசாத் என்ற தீவிரவாதி தெற்கு ஆப்கானிஸ்தானில் இருக்கலாம். அவர் எங்கிருக்கிறார் என்பது பாகிஸ்தான் அரசுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் அவரை பிடிக்கவில்லை. குற்றம் செய்தவர்களை விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைப்பதில் பாகிஸ்தானுக்கு என்ன தயக்கம் என்பது தெரியவில்லை.

மும்பையில் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானில் இருந்து செயல்படவில்லை என்று லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதர் வாஜித் சம்சல் கூறியிருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. பாகிஸ்தான் அரசு இன்னும் செயல்படவில்லை என்று தான் என்னால் கூற முடியும். இவ்வாறு எம்.கே. நாராயணன் கூறினார்.