வீட்டுக் காவலில் உள்ள விருந்தாளிகளை வீட்டு விருந்தாளிகளைப் போல் பாகிஸ்தான் நடத்துகிறது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் குற்றம் சாட்டினார். மும்பையில் கடந்த நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இவர்களுக்கு பின்னணியாக இருந்தவர்கள் பாகிஸ்தானில் உள்ளனர். இதற்கான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டது.
இதற்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான பதில் வரவில்லை. அவர்கள் கேட்டால் இன்னும் அதிக தகவல்களை தரவும் இந்தியா தயாராக உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் கூறினார். இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த பேட்டி: இந்தியா அளித்துள்ள ஆதாரங்கள் அடிப்படையில் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்த்தோம்.
ஆனால் இதற்கு மாறாக பாகிஸ்தான் இந்தியாவிடமே இருமுறை கேள்விக் கணைகளை தொடுத்தது. ஒருமுறை கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டோம். லஷ்கர் இயக்கத்தின் தலைவர் லக்வி உள்ளிட்ட சில தீவிரவாத தலைவர்கள வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக பாகிஸ்தான் கூறுகிறது. ஆனால், இந்த தீவிரவாதிகள் வீட்டு விருந்தாளிகளைப் போலத்தான் நடத்தப்படுகிறார்கள்.
மசூர் அசாத் என்ற தீவிரவாதி தெற்கு ஆப்கானிஸ்தானில் இருக்கலாம். அவர் எங்கிருக்கிறார் என்பது பாகிஸ்தான் அரசுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் அவரை பிடிக்கவில்லை. குற்றம் செய்தவர்களை விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைப்பதில் பாகிஸ்தானுக்கு என்ன தயக்கம் என்பது தெரியவில்லை.
மும்பையில் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானில் இருந்து செயல்படவில்லை என்று லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதர் வாஜித் சம்சல் கூறியிருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. பாகிஸ்தான் அரசு இன்னும் செயல்படவில்லை என்று தான் என்னால் கூற முடியும். இவ்வாறு எம்.கே. நாராயணன் கூறினார்.