புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும் சிவிலியன்கள் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்துக்குள் இயன்றளவு விரைவில் வருகை தர வேண்டுமென அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக படையினர் இறுதிக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்நிலையில் புலிகள், சிவிலியன்களை அங்கிருந்து செல்லவிடாமல் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு பலவந்தமாக புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டிருக்கும் சிவிலியன்களையே இயன்றளவு விரைவில் அரசாங்கத்தின் பாதுகாப்பு வலயத்துக்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இலங்கையின் பாதுகாப்பு படையினர் வன்னியில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந் நடவடிக்கைகளின் போது பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாதென்பதில் அரசாங்கமும் படையினரும் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளனர். சிவிலியன்களது பாதுகாப்பை கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் பாதுகாப்பு வலயம் ஒன்று பிரகடனம் செய்யப்பட்டது. இருந்தபோதிலும் சிவிலியன்கள் இதுவரை அதனை உபயோகத்துக்கு எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை.
வன்னியிலுள்ள சிவிலியன்கள் தமது சொந்த பாதுகாப்பை கருத்திற்கொண்டு மேற்படி பாதுகாப்பு வலயத்துக்குள் இயன்றளவு விரைவில் வந்து சேருமாறு அரசாங்கம் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களினூடாக அறிவித்து வருகின்றது. பாதுகாப்பு வலயத்தினுள் வரும் சிவிலியன்களது பாதுகாப்புக்கு மாத்திரமே அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கும். புலிகளது கட்டுப்பாட்டிலுள்ள சிவிலியன்களை அரசாங்கம் பொறுப்பேற்காது. எனவே இயன்றளவு விரைவில் சிவிலி யன்கள் பாதுகாப்பு வலயத்துக்குள் வரவேண்டும்.