February

February

கிழக்குப் பல்கலைக்கழக மாணவி தற்கொலை

eastern-university.jpgகிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைப்பீட மாணவி ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவத்தையடுத்து கலைப் பீடத்தின் விரிவுரைகள் மற்றும் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேற்படி மாணவியின் தற்கொலை, ஏனைய மாணவர்களிடையே பதட்ட நிலையை ஏற்படுத்தியிருப்பதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.விடுதியில் தங்கியிருந்த ஏனைய மாணவர்கள் சிலர் தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்கொலை செய்து கொண்ட மாணவியான தனபாலசிங்கம் நிரூஜா(வயது 23)வின் மரண விசாரணை இன்று மாலை மட்டக்களப்பு மஜிஸ்திரேட் முன்னிலையில் நடைபெற்றது. பிரேத பரிசோதனை நடத்திய செங்கலடி வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.சுகுமார், கழுத்தில் சுருக்கிட்டதால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாகத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.மேலும் மாணவியின் சடலம் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் பொறுப்பேற்கப்பட்டு வவுனியாவிலுள்ள உறவினர்களிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுடர் ஒளி ஆசிரியர் கைதான செய்தியை ஊடகங்கள் தவறாக வெளியிட்டு விட்டன : லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

vithyatharan.jpgநேற்று சுடர் ஒளி பத்திரிகையின் ஆசிரியர் என்.வித்தியாதரன் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பப்பட்டமை தொடர்பில் ஊடகங்கள் பலவாறு செய்திகள் வெளியிட்டிருந்தன என ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது :

” நேற்றுக் காலை 10.00 மணியளவில் சீருடையில் வந்த பொலிஸாரே சுடர் ஒளி ஆசிரியர் வித்தியாதரனை கைது செய்தனர் . இது தொடர்பில் நாம் பொலிஸ் ஊடக பேச்சாளரிடம் வினவிய போது, அவர் கடத்தப்படவில்லை விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டதாக அவர் உறுதிப்படுத்தினார். சில ஊடகங்களில் அவர் கடத்தப்பட்டு தெமட்டகொட பகுதியில், அவரை விட்டுச்சென்றதாகச் செய்தி குறிப்பிட்டிருந்தது தவறானது. கடந்த 20 ஆம் திகதி விடுதலைப்புலிகள் தலை நகரில் நடத்திய விமானத்தாக்குதல் தொடர்பிலான தொலைபேசி இலக்கங்கள் குறித்தே அவரைப் பொலிசார் கைது செய்தனர்.

தேசிய பாதுகாப்புக்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலான செயல்களிலிருந்து அரசு என்ற வகையில் நாட்டைக் காப்பாற்றும் பொருட்டு பல நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள நேரிடுகிறது. அந்த வகையில் வித்தியாதரன் இருக்கும் இடத்தில் பல விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. விசாரணைகளின் பின்னர்தான் அவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்துவதா அல்லது இச்சம்பவத்தில் அவருக்குத் தொடர்பில்லை எனில் அதற்கேற்ற நடவடிக்கைகளை தொடர்வதா என்பதைத் தீர்மானிக்க முடியும்.

விமானப்படையினரின் விமானம் தாக்குதலிற்கு இலக்காகவில்லை- விமானப் படை பேச்சாளர்

jet-1301.jpgஇலங்கை விமானப்ப்டையினரின் எவ் விமானங்களும் இன்று விடுதலை புலிகளின் தாக்குதலிற்கு இலக்காகவில்லை என விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கை விமானபடையினருக்கு சொந்தமான மிகையொலி யுத்தவிமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் இன்றுகாலை 11.25 மணியளவில் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து அவ்வாறு எவ்விதமான சம்பவங்களும் இடம்பெறவில்லை, அத்துடன் விமானப்படையினர் இன்று வான் தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை இது பொய்யான தகவல்” என அவர் தெரிவித்தார் 

வேலூர் தேமுதிக தொண்டர் தீக்குளிப்பு

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக் கோரி வேலூர் மாவட்டம் வானியம்பாடியில், தேமுதிக செயலாளர் தீக்குளித்தார். படுகாயத்துடன் வேலூர் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். வாணிம்பாடி அருகே உள்ளது வள்ளிப்பட்டி கிராமம். இந்த கிராமத்தின் தேமுதிக கிளை செயலாளாராக இருப்பவர் சீனிவாசன் .இவருக்கு அம்மு என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை சம்பவத்தால் மிகவும் மனம் உடைந்து போன சீனிவாசன் இது குறித்து அடிக்கடி தனது நண்பர்களுடன் உணர்ச்சி பிளம்பாக பேசுவாராம். இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் வீட்டில் இருந்த அவர் மண்ணெண்ணையை திடீரென உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் உடல் பாதி எறிந்தது. இருப்பினும் அவரை காப்பாற்றி வாணிம்பாடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு சீனிவாசன் மாற்றப்பட்டார். தகவல் அறிந்த போலீசார் வாணிம்பாடி சீனிவாசனிடம் தீக்குளிப்புக்கான காரணத்தை வாக்குமூலமாக பெற்றுள்ளனர்.

பொட்டம்மானும் களத்தில்! பாதுகாப்பு தரப்பினர்

pottu.jpgஎல்.ரீ.ரீ.ஈ.  அமைப்பின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் போர்க் களமுனைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புலிகளின் புலனாய்வு பிரிவின் பொறுப்பாளர் பொட்டம்மான் நேற்று முன்தினம் இரவு முதல் 58 வது படைப்பிரிவினருக்கு எதிரான போரை வழி நடத்த ஆரம்பித்துள்ளதாக புலிகளின் தொலைத் தொடர்புகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். பாதுகாப்புப் படையினரின் முன்நகர்வுகளைத் தடுத்து நிறுத்த புலித் தலைமைத்துவத்தினால் முடியாமல் போயுள்ள நிலையில் பொட்டம்மான் முதல் தடவையாக களத்தில் போரிட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக படையினர் நம்புகின்றனர்.

கடந்த 19 வருடங்களாக நடைபெற்று வரும் யுத்த நடவடிக்கைகளில் எந்த ஒரு களமுனைக்கும் சென்றிராத பொட்டம்மான் தற்போது களமிறக்கப்பட்டுள்ளமை புலிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளமைக்கு தெளிவான சான்றாகுமென  இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எமது அமைப்பில் சிறுவர் எவரும் இல்லை

tmvp2.jpgதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் தற்போதைக்கு சிறுவர் போராளிகள் எவரும் இல்லை என அதன் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா (பிரதீப் மாஸ்டர்) தெரிவித்தார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலுள்ள சிறுவர் போராளிகளை விடுவிப்பது தொடர்பாக யுனிசெப், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றுக்கிடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டு அதற்கான வேலைத் திட்டமொன்றும் தற்போது அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் இந்த வேலைத் திட்டத்திற்குப் பொறுப்பான கிருஸ்ணானந்தராஜா இது பற்றி தெரிவிக்கையில், “எமது அமைப்பிலிருந்த சிறுவர் போராளிகள் சகலரும் விடுவிக்கப்பட்டு விட்டனர். இதனை அவர்களுடைய பெற்றோருடன் தொடர்பு கொள்வதன் மூலம் உறுதிப்படுத்த முடியும்” என்றார்.

அதே வேளை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது அமைப்பிலுள்ள ஆயுதங்களைக் கையளிப்பதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அதன் ஊடகப் பேச்சாளரான ஆசாத் மௌலானா தெரிவித்தார்.

தமது அமைப்பிலுள்ள உறுப்பினர்களைத் தொழிற் பயிற்சி வழங்கி வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மற்றும் இராணுவ சேவைகளில் இணைய விரும்புவோர் அவர்களது தகுதிக்கேற்ப சேர்த்துக் கொள்ளப்படுவர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக ஊடக வள நிலையத்தில் கலைக்கூடம் திறந்து வைப்பு.

jaffna-univarsity.jpgயாழ். பல்கலைக்கழக ஊடக வள நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் நன்மை கருதி தொலைக்காட்சி மற்றும் வானொலிகளுக்கான ஒலிப்பதிவு கலைக்கூடம் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது. ஊடகவள நிலைய பணிப்பாளர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தலைமையில் திறப்பு விழா இடம்பெற்றது. 

பிரபாகரன் பேனர் அகற்றம் – 6 பேர் தீக்குளிக்க முயற்சி

tamilnadu.jpgபுதுக் கோட்டை அருகே விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பேனர்களை அகற்ற போலீசார் முயற்சி செய்ததால் 6 பேர் தீக்குளிக்க முயன்றனர்.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வடகாடு பகுதியில் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் சார்பில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் இயக்குநர் மணிவண்ணன், காளிமுத்து, வழக்கறிஞர் புரட்சி கவிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்பதாக இருந்தது. இந்த நிலையில் அந்த பகுதி முழுவதும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உருவம் பொறித்த படத்தை டிஜிட்டல் பேனர்களாக வைத்திருந்தனர். தகவல் அறிந்த எஸ்.பி மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த டிஜிட்டல் பேனர்களை அகற்ற முன்றனர்.

இதற்கு கூட்டத்த்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், விஜய், கோபி, சரவணன், திருப்பதி, ஆனந்த் உள்ளிட்ட 6 பேர் திடீரன உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் தீக்குளிப்பு போராட்டத்தை கைவிட்டனர்.

வேலை இழந்து நாடு திரும்பிய 20,000 இந்தியர்கள்

rajya-sabha.jpgவெளி நாடுகளில் வேலை செய்து வந்த சுமார் 20,000 இந்தியர்கள், உலக பொருளாதார வீழ்ச்சி காரணமாக வேலை இழந்து நாடு திரும்பியுள்ளனர்.பணிக்கான விசா காலத்தைப் புதுப்பிக்க மறுத்துவிட்ட நிறுவனங்கள், அனைவரையும திருப்பி அனுப்பிவிட்டனவாம். இத் தகவலை, வெளிநாடு வாழ் இந்தியர் நலத் துறை அமைச்சர் வயலார் ரவி ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின் போது தெரிவித்தார்.

அவர் கூறுகையில்,  இப்போது நாடு திரும்பியுள்ளோர் அனைவரின் விசாக்களை அவர்கள் பணியாற்றிய நிறுவனங்கள் புதுப்பிக்காமல் விட்டுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த விஷயத்தில் நாம் எதுவும் செய்வதற்கில்லை. பல நாடுகளில் நிலைமை மோசமாக உள்ளதால் நாடு திரும்புவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

இலங்கைக்கு மனிதாபிமான உதவி செய்யத்தயார்: பிரான்ஸ்

_dr-bernard-kouchner.jpgஇலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு தயார் என பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் பெர்னாட் கோச்சுனர் தெரிவித்துள்ளார். வன்னியில் இடம்பெற்று வரும் யுத்த நிலவரங்களால் பிரான்ஸ் அரசாங்கம் பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் யுத்த நிலவரம் குறித்து வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவிடம் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்திய போது பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தில் பொதுமக்கள் சிக்குண்டு இருப்பதாகவும், உடனடியாக பொதுமக்களை பாதுகாக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.