கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைப்பீட மாணவி ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவத்தையடுத்து கலைப் பீடத்தின் விரிவுரைகள் மற்றும் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேற்படி மாணவியின் தற்கொலை, ஏனைய மாணவர்களிடையே பதட்ட நிலையை ஏற்படுத்தியிருப்பதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.விடுதியில் தங்கியிருந்த ஏனைய மாணவர்கள் சிலர் தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்கொலை செய்து கொண்ட மாணவியான தனபாலசிங்கம் நிரூஜா(வயது 23)வின் மரண விசாரணை இன்று மாலை மட்டக்களப்பு மஜிஸ்திரேட் முன்னிலையில் நடைபெற்றது. பிரேத பரிசோதனை நடத்திய செங்கலடி வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.சுகுமார், கழுத்தில் சுருக்கிட்டதால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாகத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.மேலும் மாணவியின் சடலம் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் பொறுப்பேற்கப்பட்டு வவுனியாவிலுள்ள உறவினர்களிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.