நேற்று சுடர் ஒளி பத்திரிகையின் ஆசிரியர் என்.வித்தியாதரன் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பப்பட்டமை தொடர்பில் ஊடகங்கள் பலவாறு செய்திகள் வெளியிட்டிருந்தன என ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது :
” நேற்றுக் காலை 10.00 மணியளவில் சீருடையில் வந்த பொலிஸாரே சுடர் ஒளி ஆசிரியர் வித்தியாதரனை கைது செய்தனர் . இது தொடர்பில் நாம் பொலிஸ் ஊடக பேச்சாளரிடம் வினவிய போது, அவர் கடத்தப்படவில்லை விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டதாக அவர் உறுதிப்படுத்தினார். சில ஊடகங்களில் அவர் கடத்தப்பட்டு தெமட்டகொட பகுதியில், அவரை விட்டுச்சென்றதாகச் செய்தி குறிப்பிட்டிருந்தது தவறானது. கடந்த 20 ஆம் திகதி விடுதலைப்புலிகள் தலை நகரில் நடத்திய விமானத்தாக்குதல் தொடர்பிலான தொலைபேசி இலக்கங்கள் குறித்தே அவரைப் பொலிசார் கைது செய்தனர்.
தேசிய பாதுகாப்புக்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலான செயல்களிலிருந்து அரசு என்ற வகையில் நாட்டைக் காப்பாற்றும் பொருட்டு பல நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள நேரிடுகிறது. அந்த வகையில் வித்தியாதரன் இருக்கும் இடத்தில் பல விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. விசாரணைகளின் பின்னர்தான் அவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்துவதா அல்லது இச்சம்பவத்தில் அவருக்குத் தொடர்பில்லை எனில் அதற்கேற்ற நடவடிக்கைகளை தொடர்வதா என்பதைத் தீர்மானிக்க முடியும்.