February

February

யுத்ததில் சிக்குண்டுள்ள பொதுமக்கள் தொடர்பில் இலங்கை இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் மீது ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றச்சாட்டு

human-rights-watch.jpgஇலங்கையில் விடுதலைப் புலிகள் மீது அரச இராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திவரும் வடபுலத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு வலயங்களில் சாமானியப் பொதுமக்களை இலங்கை இராணுவம் இரக்கமின்றி கொன்றுவருகிறது என ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமைகள் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இரண்டு வாரங்களாக நடத்தப்பட்ட அந்தரங்க கள விசாரணைகளின்போது மக்கள் வழங்கிய வாக்குமூலங்களை ஆதாரமாகக்கொண்டு குறிப்பிட்ட ஹியூமன் ரைட்ஸ் வாட்ச், “பொதுமக்களைக் குறிவைத்து பாதுகாப்பு வலயங்களையும் மருத்துவமனைகளையும் இலங்கை இராணுவம் ஷெல் குண்டுகளை இறைத்துத் தாக்கிவருகிறது” என்று சாடியிருக்கிறது.

இக்குற்றச்சாட்டுகளை இலங்கை இராணுவம் மறுத்திருக்கிறது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற விடாமல் விடுதலைப் புலிகள் தடுத்துவருவதாகவும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு குற்றம்சாட்டியது.

ஆனால் பொதுமக்களைப் பாதுகாப்பதற்காகவே அப்படிச் செய்வதாக விடுதலைப் புலிகள் தெரிவிக்கிறார்கள்.

ஐ.நா பிரதிச் செயலாளர் நாயகம் வவுனியா கதிர்காமர் நிவாரண கிராமத்துக்கு விஜயம்

John_Holmes_UNஐ.நா. பிரதி செயலாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்ஸ் நேற்று வவுனியா கதிர்காமர் நிவாரணக் கிராமத்திற்கு விஜயம் செய்து நிலைமைகளைப் பார்வையிட்டார். அவருடன், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோரும் சென்றிருந்தனர்.

ஐ.நா. பிரதிச் செயலாளர் நாயகம் மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் கதிர்காமர் நிவாரண கிராமத்திலிருக்கும் மக்களுடன் நேரடியாக உரையாடினர். வவுனியா மாவட்ட செயலக மண்டபத்தில் காலை 11 மணிக்கு நடைபெற்ற சிரேஷ்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட உயர்மட்ட கலந்துரையாடலிலும் பங்குகொண்ட இவர்கள், பலவிடயங்கள் குறித்து ஆராய்ந்தனர். குறிப்பாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா வந்துள்ள மக்களுடைய சேமநலன்களை மேம்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது. மக்களுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்குமாறு ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

அத்துடன் இடம்பெயர்ந்த மக்களுக்கு அதிகாரிகள் ஆற்றும் சேவையினையும் அவர் பாராட்டினார். கதிர்காம கிராமத்தில் தங்கியுள்ள மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து இக்குழுவினர் மக்களிடம் கேட்டறிந்துகொண்டனர். அதேவேளை இளைஞர்களினதும், யுவதிகளினதும், சுயதொழில் முயற்சிகளுக்காக தொழில்பயிற்சி நிலையமொன்றும் இங்கு திறந்து வைக்கப்பட்டது. தையல், கணனி, மேசன், தச்சு உட்பட இன்னும் பல பயிற்சிகள் இங்கு வழங்கப்படவுள்ளன.

கதிர்காம கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பாடசாலை மற்றும் வங்கிகள், கூட்டுறவு சபை மருத்துவ நிலையம், மனநல ஆலோசனை நிலையம் என்பவைகளையும் இக்குழுவினர் பார்வையிட்டனர். உயர் கல்வி நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்களுக்கான விஞ்ஞான ஆய்வுகூட வசதியினை உடன் பெற்றுக் கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு, அமைச்சர் றிஷாட் பதியுதீன் பணிப்புரை வழங்கினார்.

மக்களுக்கும், பாதுகாப்புத் தரப்புக்கும், அதிகாரிகளுக்குமிடையில் மிகவும் நெருக்கமான சூழ்நிலை இக்கிராமத்தில் காணப்படுவதால் மக்கள் தமது தேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் பஷில் ராஜபக்ஷ அங்கு குறிப்பிட்டார். அதனையடுத்து இக்குழுவினர் மக்களுக்கு கைலாகு கொடுத்தனர்.

புதிய அரசியல் அமைப்பு அனைத்துச் சமூகத்தினரையும் திருத்திப்படுத்துவதாக அமையவேண்டும் – லக்ஸ்மன் கிரியெல்ல

lakshman_kiriella.jpgஅரசாங்கம் தயாரிக்கும் புதிய அரசியல் அமைப்புச் சட்டம் அனைத்து சமூகத்தினையும் திருத்திப்படுத்துவதாக அமையும் பட்சத்தில் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் (19.02.2009) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைத் தீர்விற்காக புதிய அரசியல் அமைப்பொன்றினை கொண்டுவரப்போவதாக அமைச்சர் மைதிரிபாலசிறிசேன தெரிவித்து வருகின்றார். அவ்வாறு ஒன்று கொண்டுவரப்படும்போது அதனை எதிர்க்கட்சி உட்பட்ட ஏனைய அரசியல் கட்சிகளினதும் பரிசீலணைக்கு விடப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பிரபாவுக்கு உண்மையான அக்கறை இருந்தால் தமிழ் மக்களை விடுவிக்க வேண்டும்

sri-lanka-parliment.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமானால் அம்மக்கள் வன்னியிலிருந்து சுதந்திரமாக வெளியேற இடமளிக்க வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் பகிரங்க கோரிக்கை விடுத்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதனை பிரபாகரனுக்கு எடுத்துக்கூறவேண்டுமெனவும் குறிப்பிட்ட அமைச்சர் இதன் மூலம் தமிழ் மக்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்த வரலாற்றுத் தவறுக்குப் பிராயச்சித்தம் தேடிக்கொள்ளட்டும் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்னாள் அமைச்சர் அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் அனுதாபப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:

தனிமனிதப் படுகொலைகள் மூலம் எந்த இலக்கையும் அடைய முடியாது என்பதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் படுகொலை ஒரு சிறந்த உதாரணம். ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் ஐக்கிய இலங்கைக்கான கனவு இன்று நனவாகியுள்ளது. ஜெயராஜின் படுகொலை மூலம் அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் ஆட்டங்காணச் செய்யலாமென கனவு கண்ட புலிகள் இன்று தாமே ஆட்டங்கண்டுள்ளனர்.

இன்று தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் சகல அவலங்களுக்கும் புலிகள் மட்டுமன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் ஒரு காரணம். ஆனால் இன்று பிரபாகரனின் பங்கர் வாசலுக்குக் கூட போக முடியாத நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஏற்பட்டுள்ளது. எமது மக்களை உயிரோடு பாதுகாக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தமிழ் சிங்களம் ஆகிய இரு மொழிகளையும் தமது இரு விழிகளாகக் கொண்டவர். இந்த நாட்டின் சமாதானத்திற்காகச் செயற்பட்டவர் அவர்.

இன்று புலிகள் சகல மக்களுக்குமான எதிரிகளாகியுள்ளதை முழு உலகமும் உணர்ந்துள்ளது. அரசியல் தலைவர்கள் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தி வந்த இலக்கையும் அடைய முடியாது. புலிகளை சகல மக்களும் எதிரிகளாகப் பார்ப்பது அவர்களின் தனி மனிதப்படுகொலைகளே எனவும் அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்தார்.

மின் விநியோகத்தில் தடங்கல் ஏற்படாது மின்சாரசபையின் தலைவர் தெரிவிப்பு

electricitypowerlinesss.jpgமின்சார உற்பத்தி நடைபெறும் நீரேந்து பகுதிகளில் நீர்மட்டம் குறைவடைந்ததை அடுத்து, மின் விநியோகத்தில் தடங்கல் ஏற்படலாமென அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ள போதும், மின் விநியோகத்தில் தடைகள் எதுவும் ஏற்படாது என மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.  சீரான மின் விநியோகத்துக்கான முன்னேற்பாடாக, மின் பிறப்பாக்கி இயந்திரங்கள் கைவசமுள்ளதால் மின்சாரத்தை விநியோகிப்பதில் தடங்கல்கள் ஏற்படமாட்டாது என அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக, உயரதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலை அடுத்தே, மின்சார சபை தலைவர் மின் விநியோகத்தில் தடங்கல்கள் ஏற்படமாட்டாது என்ற தகவலை வெளியிட்டார். இதனிடையே, மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர் மழை பெய்யாவிடின், நாட்டின் மின் விநியோகத்தில் தடங்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்குமென அண்மையில் மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

தற்சமயம், நீரேந்து பகுதிகளில், உள்ள மொத்த நீரின் அளவில் 35 வீதமான, 444 கன அடிநீர் மாத்திரமே காணப்படுவதாக மின்சாரசபையின் சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மின்சார சபை பொது நிர்வாக பொறியியலாளர் சபையின் தலைவருக்கும் அறிவித்திருந்தார்.

ஏற்கெனவே, கடந்த வருடம் ஜனவரியில் 200 கன அடி நீளம் கொண்டிருந்த நீரேந்து பகுதிகள் இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதியில் 600 கனஅடி நீரைக் கொண்டிருந்ததாகவும், தொடர்ச்சியாக வரட்சி காரணமாக இந்த நீர்மட்டத்தில் திடீர்வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசசார்பற்ற நிறுவனங்களை கண்காணிக்க குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானம்

non-political-organization.jpgநாட்டிலுள்ள அரசசார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அக்குழுவின் தலைவராக சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் ரஜீவ விஜேசிங்க செயற்படுவாரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஏனைய சர்வதேச நிறுவனங்களினால் வடக்கு, கிழக்கு மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்ட நிதியுதவிகள் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளுக்கு செலவிடப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதை அடுத்து இந்தக் குழுவை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் நாடுகளும், அரசசார்பற்ற நிறுவனங்களும், வடக்கு, கிழக்கில் அபிவிருத்திப் பணிகளுக்காக பெருமளவிலான நிதியை பெற்றுக்கொடுத்துள்ளன. கிளிநொச்சி பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோதே இந்த நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிதியுதவிகள் அபிவிருத்திப்பணிகளுக்கு செலவிடப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த விடயங்களை கருத்தில் கொண்டே,இக் கண்காணிப்புக் குழுவை அமைக்க தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழு அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் அதனை அபிவிருத்திப் பணிகளை கண்காணிப்பதுடன், அவற்றின் வினைத்திறன் குறித்து ஆராயும் எனவும் எதிர்காலத்தில் முறைகேடுகள் இடம்பெறாதிருக்க குழுவின் பரிந்துரைகள் உதவும் எனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனைத் தவிர கடந்த காலங்களில் அரசசார்பற்ற நிறுவனங்கள் இலங்கை எவ்வாறு செயற்பட்டன என்பதை கண்டறியும் அதிகாரமும் இந்தக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஐ.தே.கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி கூட்டமைத்து போட்டியிடுவது குறித்து ஆராய்வு

sri-lanka-election-01.jpgமேல் மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைத்து போட்டியிடுவது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசனுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

எதிர்க்கட்சி தலைவரின் வாசஸ்தலமான கேம்பிரிஜ் டெரஸில் புதன்கிழமை இடம்பெற்ற இச்சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.இதன்போது ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளர்கள் குறித்த கோரிக்கையை மனோ கணேசன் முன்வைத்துள்ளார். அதனை சாதகமான ரீதியில் பரிசீலிப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

ஆசியாவில் வேலைவாய்ப்பின்மை 9 கோடி 70 இலட்சமாக அதிகரிக்கும்

economics.jpgஉலகப் பொருளாதார வீழ்ச்சி காரணமாக வேலை இழந்த ஆசிரியர்களின் தொகை இவ்வருடத்தில் 9 கோடியே 70 இலட்சமாக அதிகரிக்கும் சாத்தியமுள்ளதென சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் நேற்று புதன்கிழமை எச்சரித்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கடந்த ஆண்டில் வேலை இழந்த ஆசிரியர்களின் தொகையை விட இவ்வருடம் வேலையிழப்போர் தொகை 7.2 மில்லியன் அதிகமாகும். இதன்படி பிராந்திய ரீதியில் கடந்த ஆண்டில் 4.8 சதவீதமாகவிருந்த வேலையற்றோர் தொகை இவ்வாண்டில் 5.1 சதவீதமாக உயர்வடையவுள்ளது.

அண்மைய வருடங்களில் உலகப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கொன்றை ஆசியா வகிக்கின்ற போதிலும் மொத்த சனத்தொகையில் மூன்றிலொரு பகுதியினர் நாளொன்றிற்கு ஒரு அமெரிக்க டொலருக்கும் குறைவான வருமானத்தையே பெறுகின்றனர்.

ஆசியாவில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இளவயதினரின் அதாவது வேலைதேடும் பருவத்தினரின் சனத்தொகைக்கேற்ப இங்கு 51 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகளை இவ்வருடத்திலும் அடுத்த வருடத்திலும் உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.

இதில் இப்பிராந்தியத்தில் பாரிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளை இந்தியாவில் 20.3 மில்லியன் வேலைவாய்ப்புகளும் சீனாவில் 10.9 மில்லியன் வேலைவாய்ப்புகளும் இந்தோனேசியாவில் 3.6 மில்லியன் வேலைவாய்ப்புகளையும் உருவாக்க வேண்டியுள்ளது.

எனினும், வேகமாக அதிகரித்து வரும் வேலை தேடுவோரின் சனத்தொகைக்குப் போதுமான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்பு மிகக் குறைந்தளவிலேயே காணப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆசியாவின் வெளிநாட்டு வருமானத்தில் செல்வாக்குச் செலுத்தும் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியும் ஆசியர்களுக்கான வேலைவாய்ப்புகளை குறைக்குமென உலக வங்கியின் அறிக்கையை மேற்கோள் காட்டி சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

கிழக்கு ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கு அமெரிக்காவிலிருந்து 44 வீத வெளிநாட்டு வருமானமும் தெற்காசியாவுக்கு 28 வீத வெளிநாட்டு வருமானமும் கிடைப்பதாகவும் இவ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது

முதலீட்டாளாகளே கிழக்கை நோக்கி வாருங்கள்!- முரளீதரன் எம். பி.

karuna-mp.jpgமுதலீட்டா ளர்கள் அச்சமின்றி கிழக்குக்கு விஜயம் செய்து தொழிற்துறைகளில் முதலீடுகளை  மேற்கொள்ளலாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணாஅம்மான்) அழைப்பு விடுத்தார். கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் குமார வெல்கமவின் தலைமையில் அவரது அமைச்சில் நடைபெற்ற  கிழக்கு மாகாணத்தில் முதலீட்டு வாய்ப்புக்கள் என்ற தொணிப்பொருளிலான செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக பல பகுதிகளிலம் முதலீடுகளை மேற்கொண்டு வரும் முதலீட்டாளர்களே கிழக்கை நோக்கி வாருங்கள். அங்கு உங்கள் முதலீடுகளைச் செய்து கிழக்கு மாகாணத்தின் முன்னேற்றத்துக்காக ஒத்துழைப்பு வழங்குங்கள். நீங்கள் எவ்வித அச்சமும்கொள்ளத் தேவையில்லை அங்கு பூரண அமைதி நிலவுகின்றது என்பதற்கு நாம் உத்தரவாதம் அளிக்கின்றோம்.

வடக்கு கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படாமைக்கு சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் இருந்த பிரதிநிதிகளே காரணமே அன்றி அரசாங்கம் அல்ல. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கிழக்கையும் கிழக்கு மக்களையும் நன்கு கவனிப்பார்; என்பதில் எனக்கு பூரண நம்பிக்கை இருக்கிறது.

பல தசாப்தங்களின் பின்னர் ஜனாதிபதியின் ஆலோசணைக்கு இணங்க வடக்கிலும் கிழக்கிலும் பாரிய அபிவிருத்தித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் இப்பிரதேசங்களில் உங்களுக்கும் முதலீடுகளைச் செய்வதற்கு வாய்ப்பக்கிட்டியுள்ளது. கிழக்குக்கு ஒரு முறை வந்து பாருங்கள். அங்கு நீங்கள் விரும்பிய உங்களுக்குத் தகுதியான துறைகளில் உங்கள் முதலீடுகளைச் செய்யுங்கள். உங்களுக்குத் தேவையான வசதிகள் அரசாங்கத்தால் செய்து கொடுக்கப்படும். பயிர்ச்செய்கைக்கு ஏற்ற மண்வளத்தை கிழக்கு மாகாணம் கொண்டுள்ளது.

சுற்றுலா ஹோட்டல்கள், தொழிற்சாலைகள்,  மீன்பிடித்துறை சார் தொழிற் துறைகள், விவசாயத்துறை  என எந்தத் துறையிலும் உங்கள் முதலீடுகளைச் செய்யலாம் அவற்றுக்கு வேண்டிய காணிகள் மற்றும் உதவிகளை வழங்க நாம் காத்திருக்கிறோம் என விநாயகமூர்த்தி முரளீதரன் மேலும் தெரிவித்தார்.

புத்தளம் தொகுதி நாயக்கர்சேனை தமிழ் வித்தியாலயத்தில் இன்று மீள் வாக்குபதிவு

sri-lanka-election.jpgபுத்தளம் தொகுதி கற்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட நாயக்கர்சேனை கிராமத்திலுள்ள தமிழ் வித்தியாலயத்தில் இன்று தேர்தல் மீள்வாக்குப்பதிவு இடம்பெறுகிறது. குறிப்பிட்ட பாடசாலையில் இன்று காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணி வரை வாக்குப்பதிவு இடம்பெறுமென தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனையிட்டு அனைவரது கவனமும் இந்தக் கிராமத்தின் மீது திரும்பியுள்ளது. நாயக்கர்சேனை பாடசாலையில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் நேரகாலத்தோடு சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 14ம் திகதி வடமேல் மாகாண சபைக்கான தேர்தல் நடந்தது. இதன்போது புத்தளம் மாவட்டத்தில் மேற்படி தமிழ் வித்தியாலய வாக்குச் சாவடியில் மோசடிகள் இடம்பெற்றிருப்பது நிரூபிக்கப்பட்டதையடுத்து இந்தச் சாவடியின் வாக்குகளை தேர்தல்கள் ஆணையாளர் ரத்துச் செய்திருந்தார். இதனையொட்டியே இவ்வாக்குச் சாவடியில் இன்று வாக்குப்பதிவு இடம்பெறுகிறது.

இன்று நடைபெறும் இந்தகுட்டித் தேர்தலையிட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயக் கிராமமான நாயக்கர் சேனையில் 1195 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வாக்குகள் இரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக புத்தளம் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் இதுவரையும் வெளியிடப்படவில்லை. இரத்துச் செய்யப்பட்ட நாயக்கர்சேனை சாவடியைத் தவிர்த்து கிடைக்கப்பெற்ற உத்தியோகப் பற்றற்ற முடிவுகளின்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 11 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 5 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது. நாயக்கர் சேனை முடிவுகள் அறிவிக்கப்பட்டால் இந்த முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவுக்கு முன்னர் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களின் விபரங்களும் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.