உலகப் பொருளாதார வீழ்ச்சி காரணமாக வேலை இழந்த ஆசிரியர்களின் தொகை இவ்வருடத்தில் 9 கோடியே 70 இலட்சமாக அதிகரிக்கும் சாத்தியமுள்ளதென சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் நேற்று புதன்கிழமை எச்சரித்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கடந்த ஆண்டில் வேலை இழந்த ஆசிரியர்களின் தொகையை விட இவ்வருடம் வேலையிழப்போர் தொகை 7.2 மில்லியன் அதிகமாகும். இதன்படி பிராந்திய ரீதியில் கடந்த ஆண்டில் 4.8 சதவீதமாகவிருந்த வேலையற்றோர் தொகை இவ்வாண்டில் 5.1 சதவீதமாக உயர்வடையவுள்ளது.
அண்மைய வருடங்களில் உலகப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கொன்றை ஆசியா வகிக்கின்ற போதிலும் மொத்த சனத்தொகையில் மூன்றிலொரு பகுதியினர் நாளொன்றிற்கு ஒரு அமெரிக்க டொலருக்கும் குறைவான வருமானத்தையே பெறுகின்றனர்.
ஆசியாவில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இளவயதினரின் அதாவது வேலைதேடும் பருவத்தினரின் சனத்தொகைக்கேற்ப இங்கு 51 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகளை இவ்வருடத்திலும் அடுத்த வருடத்திலும் உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.
இதில் இப்பிராந்தியத்தில் பாரிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளை இந்தியாவில் 20.3 மில்லியன் வேலைவாய்ப்புகளும் சீனாவில் 10.9 மில்லியன் வேலைவாய்ப்புகளும் இந்தோனேசியாவில் 3.6 மில்லியன் வேலைவாய்ப்புகளையும் உருவாக்க வேண்டியுள்ளது.
எனினும், வேகமாக அதிகரித்து வரும் வேலை தேடுவோரின் சனத்தொகைக்குப் போதுமான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்பு மிகக் குறைந்தளவிலேயே காணப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆசியாவின் வெளிநாட்டு வருமானத்தில் செல்வாக்குச் செலுத்தும் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியும் ஆசியர்களுக்கான வேலைவாய்ப்புகளை குறைக்குமென உலக வங்கியின் அறிக்கையை மேற்கோள் காட்டி சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
கிழக்கு ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கு அமெரிக்காவிலிருந்து 44 வீத வெளிநாட்டு வருமானமும் தெற்காசியாவுக்கு 28 வீத வெளிநாட்டு வருமானமும் கிடைப்பதாகவும் இவ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது