நாட்டிலுள்ள அரசசார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அக்குழுவின் தலைவராக சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் ரஜீவ விஜேசிங்க செயற்படுவாரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஏனைய சர்வதேச நிறுவனங்களினால் வடக்கு, கிழக்கு மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்ட நிதியுதவிகள் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளுக்கு செலவிடப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதை அடுத்து இந்தக் குழுவை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் நாடுகளும், அரசசார்பற்ற நிறுவனங்களும், வடக்கு, கிழக்கில் அபிவிருத்திப் பணிகளுக்காக பெருமளவிலான நிதியை பெற்றுக்கொடுத்துள்ளன. கிளிநொச்சி பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோதே இந்த நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிதியுதவிகள் அபிவிருத்திப்பணிகளுக்கு செலவிடப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த விடயங்களை கருத்தில் கொண்டே,இக் கண்காணிப்புக் குழுவை அமைக்க தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழு அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் அதனை அபிவிருத்திப் பணிகளை கண்காணிப்பதுடன், அவற்றின் வினைத்திறன் குறித்து ஆராயும் எனவும் எதிர்காலத்தில் முறைகேடுகள் இடம்பெறாதிருக்க குழுவின் பரிந்துரைகள் உதவும் எனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனைத் தவிர கடந்த காலங்களில் அரசசார்பற்ற நிறுவனங்கள் இலங்கை எவ்வாறு செயற்பட்டன என்பதை கண்டறியும் அதிகாரமும் இந்தக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.