புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமானால் அம்மக்கள் வன்னியிலிருந்து சுதந்திரமாக வெளியேற இடமளிக்க வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் பகிரங்க கோரிக்கை விடுத்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதனை பிரபாகரனுக்கு எடுத்துக்கூறவேண்டுமெனவும் குறிப்பிட்ட அமைச்சர் இதன் மூலம் தமிழ் மக்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்த வரலாற்றுத் தவறுக்குப் பிராயச்சித்தம் தேடிக்கொள்ளட்டும் எனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்னாள் அமைச்சர் அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் அனுதாபப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:
தனிமனிதப் படுகொலைகள் மூலம் எந்த இலக்கையும் அடைய முடியாது என்பதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் படுகொலை ஒரு சிறந்த உதாரணம். ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் ஐக்கிய இலங்கைக்கான கனவு இன்று நனவாகியுள்ளது. ஜெயராஜின் படுகொலை மூலம் அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் ஆட்டங்காணச் செய்யலாமென கனவு கண்ட புலிகள் இன்று தாமே ஆட்டங்கண்டுள்ளனர்.
இன்று தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் சகல அவலங்களுக்கும் புலிகள் மட்டுமன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் ஒரு காரணம். ஆனால் இன்று பிரபாகரனின் பங்கர் வாசலுக்குக் கூட போக முடியாத நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஏற்பட்டுள்ளது. எமது மக்களை உயிரோடு பாதுகாக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தமிழ் சிங்களம் ஆகிய இரு மொழிகளையும் தமது இரு விழிகளாகக் கொண்டவர். இந்த நாட்டின் சமாதானத்திற்காகச் செயற்பட்டவர் அவர்.
இன்று புலிகள் சகல மக்களுக்குமான எதிரிகளாகியுள்ளதை முழு உலகமும் உணர்ந்துள்ளது. அரசியல் தலைவர்கள் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தி வந்த இலக்கையும் அடைய முடியாது. புலிகளை சகல மக்களும் எதிரிகளாகப் பார்ப்பது அவர்களின் தனி மனிதப்படுகொலைகளே எனவும் அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்தார்.