ஐ.நா. பிரதி செயலாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்ஸ் நேற்று வவுனியா கதிர்காமர் நிவாரணக் கிராமத்திற்கு விஜயம் செய்து நிலைமைகளைப் பார்வையிட்டார். அவருடன், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோரும் சென்றிருந்தனர்.
ஐ.நா. பிரதிச் செயலாளர் நாயகம் மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் கதிர்காமர் நிவாரண கிராமத்திலிருக்கும் மக்களுடன் நேரடியாக உரையாடினர். வவுனியா மாவட்ட செயலக மண்டபத்தில் காலை 11 மணிக்கு நடைபெற்ற சிரேஷ்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட உயர்மட்ட கலந்துரையாடலிலும் பங்குகொண்ட இவர்கள், பலவிடயங்கள் குறித்து ஆராய்ந்தனர். குறிப்பாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா வந்துள்ள மக்களுடைய சேமநலன்களை மேம்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது. மக்களுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்குமாறு ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அத்துடன் இடம்பெயர்ந்த மக்களுக்கு அதிகாரிகள் ஆற்றும் சேவையினையும் அவர் பாராட்டினார். கதிர்காம கிராமத்தில் தங்கியுள்ள மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து இக்குழுவினர் மக்களிடம் கேட்டறிந்துகொண்டனர். அதேவேளை இளைஞர்களினதும், யுவதிகளினதும், சுயதொழில் முயற்சிகளுக்காக தொழில்பயிற்சி நிலையமொன்றும் இங்கு திறந்து வைக்கப்பட்டது. தையல், கணனி, மேசன், தச்சு உட்பட இன்னும் பல பயிற்சிகள் இங்கு வழங்கப்படவுள்ளன.
கதிர்காம கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பாடசாலை மற்றும் வங்கிகள், கூட்டுறவு சபை மருத்துவ நிலையம், மனநல ஆலோசனை நிலையம் என்பவைகளையும் இக்குழுவினர் பார்வையிட்டனர். உயர் கல்வி நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்களுக்கான விஞ்ஞான ஆய்வுகூட வசதியினை உடன் பெற்றுக் கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு, அமைச்சர் றிஷாட் பதியுதீன் பணிப்புரை வழங்கினார்.
மக்களுக்கும், பாதுகாப்புத் தரப்புக்கும், அதிகாரிகளுக்குமிடையில் மிகவும் நெருக்கமான சூழ்நிலை இக்கிராமத்தில் காணப்படுவதால் மக்கள் தமது தேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் பஷில் ராஜபக்ஷ அங்கு குறிப்பிட்டார். அதனையடுத்து இக்குழுவினர் மக்களுக்கு கைலாகு கொடுத்தனர்.