January

January

புலிகளின் முக்கிய இலக்குகளில் நேற்று விமானத் தாக்குதல்

mi24-1912.jpgபுலிகளின் இனங்காணப்பட்ட முக்கிய இலக்குகள் மீது இலங்கை விமானப் படையினர் நேற்றுக்காலை முதல் மாலை வரை 9 தடவைகள் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இவ்விமானத் தாக்குதல்களின்போது புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்கள் அடிக்கடி கூடும் முக்கிய இடங்கள் இரண்டும், இரண்டு பீரங்கி நிலைகள் மீதும் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விமானப் படைக்குச் சொந்தமான எம்.ஐ – 24 மற்றும் ஜெட் ரக விமானங்களை பயன்படுத்தியே புலிகளின் இனங் காணப்பட்ட இந்த இலக்குகள் மீது ஒன்பது தடவைகள் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். முல்லைத்தீவு நோக்கி தரை வழியாக முன்னேறிவரும் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே நேற்றுக்காலை முதல் மாலை வரை மேற்படி பகுதிகளில் எட்டு தடவைகள் விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

முல்லைத்தீவு நகருக்கு தெற்கே அமைந்துள்ள புலிகள் சந்திக்கும் முக்கிய இரகசிய இடமொன்றை இலக்குவைத்து நேற்றுக்காலை 9.10, 9.20, 11.30 மற்றும் மாலை 3.35 ஆகிய வேளைகளிலேயே விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதேவேளை முல்லைத்தீவுக்கு அருகிலுள்ள புலிகள் சந்திக்கும் இன்னுமொரு முக்கிய இரகசிய இடம் மீதும் காலை 10.15 மணி, நண்பகல் 12.10, 1.45 மாலை 3.15 ஆகிய நேரங்களில் ஜெட் விமானங்கள் மூலம் தாக்குதல்களை மேற்கொண்டன.

அதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் யாழ்ப்பாணம், சுண்டிக்குளம் களப்புக்கு அருகில் இனங்காணப்பட்ட புலிகளின் இரண்டு பீரங்கி நிலைகளையும் விமானப் படையினரின் ஜெட் விமானங்கள் தாக்கியழித்தன. விமானப் படையின் உளவுப் பிரிவினர் இலக்குகளை நன்கு இனங்கண்டதன் பின்னரே தாக்குதலை நடத்தியிருப்பதாக கூறிய ஊடக மத்திய நிலைய அதிகாரி மேற்கொள்ளப்பட்ட ஒன்பது தாக்குதல்களும் வெற்றியளித்திருப்பதனை விமான ஓட்டிகள் உறுதி செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இன்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பொங்கல் விழாவில் கலைப்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு கௌரவிப்பு

pongal-02.jpgஅண் மையில் வெளியான 2008 க.பொ.த.உயர்தரப்பரீட்சையில் கலைப்பிரிவில் தேசிய மட்டத்தில் முதலாவதாக வந்து சாதனை நிலைநாட்டிய கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி செய்னுலாப்தீன் பாஹிமா இன்று புதன்கிழமை காலை திருகோணமலையில் கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சு நடத்தவிருக்கும் பொங்கல் நிகழ்வில் பாராட்டிக் கௌரவிக்கப்படவுள்ளார்.

இன்றைய தினம் கடந்த வருடத்தில் வெளியான க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதலாவதாக வந்து சாதனை புரிந்த காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி மாணவி எஸ்.ஷாலினியும் பாராட்டப்பட்டு கௌரவிக்கப் படவிருப்பதாகக் தெரிவிக்கப்படுகின்றது. இளம் புத்தாக்குநர் கழகங்களுக்கு இடையே கிழக்கு மாகாண மட்டம், தேசிய மட்டம் ஆகியவற்றில் நடத்தப்பட்ட புத்தாக்கக் கண்டுபிடிப்புக்களில் மாகாண மற்றும் தேசியநிலையில் சிறந்தவை எனத் தெரிவு செய்யப்பட்ட புத்தாக்கங்களை கண்டுபிடித்த மாணவரும் இப்பொங்கல் நிகழ்வில் கௌரவிக்கப்படவிருப்பதாகத் தெரிகிறது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் விமலவீரா திஸநாயக்க கலந்துகொள்வார். மாகாணக் கல்வி அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில், கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன

ஐ.தே.க.வில் இருந்த காலப் பகுதியின் பாவங்களை போக்கவே ஜனாதிபதியை நாடி வந்துள்ளேன் – எஸ்.பியின் சகோதரர்

ballot-box.jpgஐக்கிய தேசியக் கட்சியில் சில காலம் நான் தொடர்புபட்டிருந்ததால் எனக்கு ஏற்பட்ட அந்தப் பாவத்தை சம நிலைப்படுத்துவதற்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாடினேன். நுவரெலியா மாவட்டத்தில் ஐ. ம. சு. கூட்டமைப்பு சார்பில் மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் எனக்கு நிச்சயமாக வெற்றிகிடைக்கும் என மத்திய மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் எஸ். பி. திஸாநாயக்காவின் (ஐ. தே. க.) சகோதரரான முன்னாள் மத்திய மாகாண சபையின் சுகாதார அமைச்சர் சாலிய திஸாநாயக்க தெரிவித்தார்.

ஹங்குரன்கெத்தையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்பொழுதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  இக் கூட்டத்தில் சாலிய திஸாநாயக்க தொடர்ந்தும் கூறியதாவது :- மத்திய மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் எனது மூத்த சகோதரரான எஸ். பி. திஸாநாயக்க 15ஆம் திகதி ஐ. தே. கட்சியில் இருந்தும் விலகி மீண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து செயல்படவேண்டி ஏற்படும். நான் ஐ. தே. கட்சியில் இருந்த காலப் பகுதியில் எனக்குக் கிடைக்கப்பெற்ற அனைத்து வரப்பிரசாதங்களை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு நாட்டை சீரான வழியில் கட்டியெழுப்பத் துணிந்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்தேன்.

அந்தக் கட்சியில் இருந்த காலப் பகுதியில் என்னை சூழ்ந்து கொண்ட பாவங்களுக்கு மன்னிப்பைத் தேடும் வகையிலும் அதனைச் சமநிலைப்படுத்துவதற்குமாக ஜனாதிபதியுடன் எனது இரு சகோதரளுடன் இணைந்துகொண்டேன். இவ்வாறு இணைந்ததெல்லாம்  இப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்களின் மேம்பாட்டுக்காகவே ஆகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

காஸா மீது முழு அளவிலான தாக்குதல்கள் ஆரம்பம்; இஸ்ரேலின் ரிசேர்வ் படையினரும் களத்தில்

gaza_war02.jpgகாஸாப் பள்ளத்தாக்கிலுள்ள ஹமாஸ் போராளிகளுக்கெதிரான நடவடிக்கைகளில் ரிசேர்வ் இராணுவத்தினரையும் ஈடுபடுத்தியுள்ள இஸ்ரேல் அங்கு முழு அளவிலான தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. ஹமாஸ் ஆயுதக் கடத்தல்களை மேற்கொள்வதாகக் கருதப்படும் காஸா எகிப்து எல்லையிலுள்ள சுரங்கப் பாதையை தாக்கியழிப்பதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேலியப் படைகள் ஆரம்பித்துள்ளன.

போர்நிறுத்தத்திற்கான சர்வதேச அழைப்புக்களை நிராகரித்து 17 ஆவது நாளாகவும் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதலில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 900 ஐ எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுக்களை நடத்திய இஸ்ரேலியப் பிரதமர் எஃகுட் ஒல்மேர்ட், பாதுகாப்பு அமைச்சர் எஃகுட் பராக் மற்றும் வெளியுறவு அமைச்சர் லிவ்னி ரிஸிபி ஆகியோர் ஹமாஸ் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்துவதற்கு தீர்மானித்திருப்பதாக அந்நாட்டு வானொலிச் சேவையொன்று தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தும் ஹமாஸின் திறனை முற்றுமுழுதாக அழிப்பதென சபதமெடுத்துள்ள இஸ்ரேலிய தலைவர்கள் காஸாவில் தரைவழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தும் பொருட்டு ரிசேர்வ் இராணுவத்தினரை நடவடிக்கைகளில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளனர். இந்நடவடிக்கை இஸ்ரேலிய இராணுவத்திற்கு பலத்த சேதங்களை உருவாக்குமெனக் கருதப்படுவதுடன் தப்பித்து செல்ல வழியின்றி சிறிய பரப்பளவைக் கொண்ட காஸாப் கரையோரப் பகுதியில் சிக்கியிருக்கும் 15 இலட்சம் பாலஸ்தீனர்களுக்கும் இந் நடவடிக்கை கடும் சேதங்களை உருவாக்குமென அஞ்சப்படுகிறது.

காஸாவின் தென்பகுதியில் ரிசேர்வ் இராணுவத்தினர் குவிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 15 கிலோமீற்றர் நீளமான எகிப்துடனான சுரங்கப் பாதையை தகர்ப்பதற்காக அங்கு தொடர் விமானத் தாக்குதல்களை நடத்திவரும் இஸ்ரேல் அதனை குண்டுவைத்து தகர்க்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் தமது தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டமைக்கான இலக்கை அடைவதற்கு தாம் தீர்மானித்திருப்பதாகத் தெரிவித்துள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அதே நேரத்தில் இராஜதந்திர முயற்சிகள் தொடர்பிலும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இத் தாக்குதல்களில் இதுவரை 890 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன் 3,600 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக காஸா மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, 10 படையினர் உட்பட 13 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவிக்கின்றது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 40 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. காஸாவின் பிரதான மருத்துவமனை இடிந்து விழும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் அடிப்படை மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவர்களின் பற்றாக்குறை நிலவுவதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் டோர்ச் லைற்றின் உதவியுடனேயே சில சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளதுடன் ஷெல் தாக்குதல்களினால் 12 அம்புலன்ஸ் பணியாளர்களும் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி தலைமையில் கண்டியில் பொங்கல் விழா

pongal-02.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மாபெரும் பொங்கல் விழா நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானால் முன்னெடுக்கப்படும் ‘பிரஜா சக்தி’ அமைப்பின் விரிவான ஏற்பாட்டில் நடைபெறும் இவ்விழாவில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் சமூக, சமய அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்கள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகள் இவ்விழாவில் முக்கிய இடத்தை வகிக்கும். பொங்கல் விழா நிகழ்வுகளை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் நேரடி அஞ்சல் செய்யவுள்ளது.

சமாதானமும், செளபாக்கியமும், நம்பிக்கையும் நிலைத்து நிற்கட்டும் ஜனாதிபதி பொங்கல் வாழ்த்து

உலகெங்கிலும் பரந்துவாழும் தமது இந்து சகோதரர்களோடு சேர்ந்து தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் இலங்கை வாழ் இந்துக்களுக்கு இவ் வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் என ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தனது வாழ்த்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது, தை மாதத்தின் முதல் தினத்தில் வருகின்ற தைப்பொங்கல், மரபுகளையும், கிரியைகளையும் இந்துக்கள் தொடர்ந்தும் அனுஷ்டித்துவருகின்றனர்.  இரு விதங்களில் புனிதமாகக் கருதப்படுகின்ற இத்தினம் சிறந்த அறுவடையை எதிர்பார்த்தும் விவசாயிகள் தமது கடின உழைப்புக்குப் பின்னர் பெற்ற அறுவடைக்காகவும் அதை அளித்த சூரியனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் கொண்டாடப்படுகின்ற ஒரு பண்டிகையாகும்.

தைப்பொங்கல் பண்டிகையானது இந்துக்கள் தமது பாரம்பரிய கலாசார மரபுரிமைகளை அனுஷ்டித்து அவற் றுக்கு தம்மை அர்ப்பணித்து, அவற்றைப் புதுப்பித்து எமது நாட்டின் ஏனைய மக்களைப் போல எதிர்காலம் குறித்த சாதகமான எதிர்பார்ப்புகளை வைக்கின்றனர். இது எமது சமூகத்தின் பன்மைத்துவத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.

இத்தைப்பொங்கல் தினத்தில் எனது எண்ணங்கள் எல்லாம் தங்களை விடுவிப்பதற்காக போராடுகின்றோம் என உரிமை கோருபவர்களாலேயே தொடர்ச்சியாக சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் பற்றியதாகும்.  இவ்விசேட தினத்தில் இலங்கைவாழ் இந்துக்களினதும் என்னுடையதும் சகோதர, சகோதரிகளான தமிழ் மக்கள் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து உண்மையாக விடுவிக் கப்பட்டு இலங்கையின் வடக்கே சுதந்திரமும் ஜனநாயக மும் மீளக் கட்டியெழுப்பப்படும் நாள் மிகத் தூரத்தில் இல்லை என்பதை இலங்கைவாழ் இந்துக்களுக்கு உறுதிபடத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இலங்கைவாழ் அனைத்து இந்துக்களுக்கும் நான் மகிழ்ச்சிகரமான தைப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு மலரும் வருடத்தில் எம்மிடையே சமாதானமும் செளபாக்கியமும் நல்ல நம்பிக்கையும் புரிந்துணர்வும் நிலைக்கட்டும் என்ற அவர்களது பிரார்த்தனைகளில் நானும் இணைந்து கொள்கிறேன். 

அரசியல் ரீதியான வெற்றிகள் இராணுவ வெற்றிக்கு அத்திபாரமாக அமைந்துள்ளது – வீரவன்ச எம்.பி.

vimalveera.jpgஅரசியல் ரீதியான வெற்றிகள் இராணுவ வெற்றிக்கு அத்திரபாரங்களாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) யின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் தெரிவித்துள்ளார். கண்டி தபால் காரியாலய கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்ற முன்னணியின் மகாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

“ரணில் விக்கிரமசிங்கவின் சமாதன உடன்படிக்கை காரணமாகவே யுத்தத்தில் வெற்றிபெறுவதற்கு காலதாமதமாகியது. நாம் இதனைத் தடுத்து நிறுத்துவதற்காகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டோம். உண்மையாகவே, ரணில் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக வாசித்துப் பார்க்காமலேயே கையொப்பமிட்டுள்ளார் என்றே எண்ணவேண்டியுள்ளது.

எமது இராணுவத்தினர் யுத்தத்தில் வெற்றிபெறுவார்கள் என நீண்ட காலமாகவே நாம் கூறிவந்தோம். அதுவே தற்போது நிறைவேறியுள்ளது.  2009 ஆம் ஆண்டு இராணுவத்திற்கு வெற்றிகரமான ஆண்டாகும். நாம் இந்த பூமிக்கு முழுமையான ஆதரவாளர்களாகவே திகழ வேண்டுகின்றோம்’ என்றார்.

வன்னியில் கடந்த 3 மாதப் போரில் மூவாயிரம் படையினர் உயிரிழப்பு -அமைச்சர் கெஹலிய

SL_Army_in_Killinochieவன்னியில் கடந்த மூன்று மாதப் போரில் மூவாயிரம் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக அரசின் பாதுகாப்பு விவகாரப்பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளதாக “சண்டே ஐலன்ட்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக அந்தப் பத்திரிகைக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இருந்து கடந்த மூன்று மாத காலப்பகுதியில் 3 ஆயிரம் படையினர் வன்னி களமுனைகளில் கொல்லப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் 15 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டதாக எதிர்க்கட்சியினர் தெரிவிப்பது தவறானது.  விடுதலைப்புலிகள் முல்லைத்தீவுப் பகுதியில் மட்டுமே தற்போது நிலைகொன்டுள்ளனர். அவர்கள் வசம் 2 ஆயிரம் பேரே உள்ளனர். எனவே அவர்களை நாம் இலகுவில் வெற்றி காண்போம் என்றார்.

எஞ்சியிருக்கும் புலிகள் ஒன்றுசேர்ந்து கெரில்லா பணியிலான தாக்குதலை சிறப்பாக முன்னெடுக்க முடியுமா என அவரிடம் கேட்கப்பட்ட போது, அது சாத்தியமற்றது. இடையிடையே சிறு சிறு சேதங்களை மட்டுமே ஏற்படுத்த முடியுமே தவிர பெரும் சேதங்கள் எதனையும் அவர்களால் ஏற்படுத்த முடியாதென்றும் அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்தார்.

படையிலிருந்து தப்பியோடிய 2,500 பேர் சிறையில் தடுத்துவைப்பு.

justice.jpgஇரா ணுவத்திலிருந்து தப்பியோடி பிடிபட்டவர்களில் 2,500 பேர் தற்போது சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 4,000 பேர் இராணுவ நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வஜிர விஜயகுணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்; படைகளிலிருந்து தப்பியோடி பின்னர் கைது செய்யப்படுவோர் இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர் . இவர்களுக்கான சிறைத் தண்டனை, மூன்று மாதத்திலிருந்து ஒரு வருடமாயிருக்கும், தற்போது இவ்வாறு 2,500 பேர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். விரைவில் மேலும் 4,000 பேர் இராணுவ நீதிமன்றில் நிறுத்தப்பட்டு அவர்களுக்கும் தண்டனை வழங்கப்படவுள்ளது.

இராணுவத்திலிருந்து தப்பியோடிய ஆயிரக்கணக்கானோர் மீண்டும் படைகளில் இணைவதற்காக அவர்களுக்கு பல தடவைகள் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. எனினும் குறிப்பிட்ட அளவினரே பொது மன்னிப்பை பெற்று மீண்டும் படைகளில் இணைந்து கொண்டனர். சுமார் 3,000 பேர் இந்த பொதுமன்னிப்புக் காலத்தின் ஊடாக மீண்டும் படையணிகளில் இணைந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையின் கெளரவ தூதுவர்களுக்கான கருத்தரங்கு

presidentmahinda.jpgவெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையின் கெளரவத் தூதுவர்களுக்கு (வெளிநாட்டுப் பிரஜைகள்) இந்நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைமை தொடர்பாகத் தெளிவுபடுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதனடிப்படையில் மூன்று நாட்கள் கருத்தரங்கொன்று எதிர்வரும் 19ம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவிருக்கிறது. வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையின் கெளரவத் தூதுவர்கள் கலந்துகொள்ளும் இக்கருத்தரங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்குரார்ப்பணம் செய்துவைக்க விருக்கிறார்.

இக்கருத்தரங்கின்போது இலங்கையின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைமை என்பன தொடர்பாக தெளிவுபடுத்தப்படுமென வெளிவிவகார அமைச்சு அதிகாரியொருவர் தெரிவித்தார். இக்கருத்தரங்கில் பங்குபற்றும் கெளரவத் தூதுவர்கள் திருகோணமலைக்கு நேரில் விஜயம் செய்யவிருக்கிறார்கள். இவர்கள் திருமலை மாவட்ட செயலாளர் கிழக்கு மாகாண முதலமைச்சர், கிழக்கு மாகாண ஆளுநர் உட்பட முக்கியஸ்தர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏ-9 பாதை திறப்பு மூலம் யாழ். குடா மக்கள் புத்துயிர் பெறுகின்றனர் – யாழ். ஆயர்

jaffna_thomas.jpgஏ-9  பாதை திறக்கப்பட்டது குறித்து தான் பெரு மகிழ்ச்சியடைவதாக யாழ். ஆயர் வண. தோமஸ் செளந்தரநாயகம் தெரிவித்துள்ளார். ஏ-9 பாதை திறப்பானது வடக்கிற்கும், தெற்கிற்குமிடையில் மிகவும் புரிந்துணர்வை ஏற்படுத்துமெனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், ஏ-9 பாதை மூடப்பட்டிருந்ததன் மூலம் யாழ். குடாநாட்டு மக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வந்தார்கள். பாதை திறக்கப்பட்டு விட்டதென்ற செய்தி கேட்டதும் பெருமகிழ்ச்சியடைந்தேன். குடாநாட்டில் பொருட்களின் விலைகள் வெகுவாக உயர்ந்திருக்கின்றன. இதற்கு போக்குவரத்து பிரதான காரணமாக அமைந்தது. பாதை திறக்கப்பட்டிருப்பதன் மூலம் யாழ். மக்கள் புத்துயிர் பெறுகிறார்கள் எனவும் அவர் கூறினார்.