2009

2009

புலிகளை அழிக்க முடியுமென கூறிய எமக்கு வாக்களியுங்கள்; ஜே.வி.பி.

wijitha_herath_jvp.jpgசுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் பிரிவினையைக் கோரும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதால் இவர்களுக்கு அளிக்கும் வாக்குகள் பிரிவினைக்கே வழிவகுக்குமென ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. பிரிவினையைக் கோருகின்ற கட்சிகளுடன் கூட்டமைக்காது புதிய ஐக்கிய இலங்கையை உருவாக்க பாடுபடும் தமக்கே வாக்குகளை அளிக்குமாறு மக்களை அக்கட்சி கோரியுள்ளது.

கொழும்பு தேசிய நூலகத்தில் ஜே.வி.பி. புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அதன் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்; எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் நாட்டில் பிரிவினையை கோருகின்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

அதாவது, சுதந்திரக் கட்சி மலையகத்துக்கு தனி அலகினை கோருகின்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. அண்மைய காலங்களில் பத்திரிகைகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர் யோகராஜன் மலையகத்துக்குத் தனி அலகு கோரியதை நாம் காணலாம். அதேபோல மலையக மக்கள் முன்னணியின் சந்திரசேகரன் கடந்த காலங்களில் பிரபாகரனுடன் கதைத்து வந்ததுடன் ஈழம் குறித்தும் பாராளுமன்றத்தில் பேசியுள்ளார். இவர்கள் கோரும் தனி அலகுக்கு பொலிஸ், காணி அதிகாரம் வேண்டுமென கோருகின்றனர். இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைக்கு வாக்களிப்பது பிரிவினைக்கு அளிக்கும் வாக்காக அமையும்.

இதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியும் முஸ்லிம்களுக்கு தனி அலகு கேட்கின்ற முஸ்லிம் காங்கிரஸுடன் கூட்டமைத்துள்ளது. இந்நிலையில் பிரிவினையைக் கோருகின்ற கட்சிகளுடன் கூட்டமைக்காது தேர்தலில் போட்டியிடுகின்ற, பிரிவினைக்கு எதிராக செயற்படுகின்ற ஒரேயொரு கட்சியான ஜே.வி.பி.க்கே மக்கள் வாக்களிக்க வேண்டும். ஜே.வி.பி. நாட்டில் பிரிவினைக்கு எதிராக செயற்பட்டது. வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பை எதிர்த்து நீதிமன்றம் சென்று அதனை இல்லாமல் செய்தோம். அதுபோல் கடல்கோள் நிவாரண கட்டமைப்பு தொடர்பில் புலிகளுடன் செய்துகொண்ட உடன்பாட்டுக்கு எதிராக நீதிமன்றம் சென்று அதனை இடைநிறுத்தினோம். 2002 இல் புலிகளுடன் செய்துகொண்ட பொய்யான சமாதானத்தை நாம் எடுத்துரைத்ததுடன் அதனை இல்லாமல் செய்தோம். புலிகளை அழிக்க முடியாதது பொய். அதனை செய்ய முடியும் எனக் கூறி அதற்காக முழு ஆதரவினையும் அளித்தோம். இவ்வாறு நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற பேதமின்றி புதிய ஐக்கிய இலங்கையை உருவாக்கும் ஜே.வி.பி.க்கு வாக்களிப்பதற்கு தேசப்பற்றாளர்கள் எம்முடன் ஒன்றிணைய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

வாஷிங்டனில் இன்று தமிழர்கள் கூட்டமைப்பின் சார்பில் பேரணி

file-photo.jpgஇலங்கையில் நடந்து வரும் இனப்படுகொலைக்கு இந்தியா ஆதரவு தரக்கூடாது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இன்று மாலை பேரணி நடத்தப்படவுள்ளது. இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் கூட்டமைப்பின் சார்பில் இந்தப் பேரணி நடைபெறுகிறது.

இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு, வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பு இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இலங்கையில் தமிழர்கள் நடத்தி வரும் சுதந்திரப் போராட்டத்தை, மகாத்மா காந்தியடிகளின் வழியில் இந்திய அரசு அணுக வேண்டும், ஆதரிக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்படவுள்ளது. இலங்கை அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலைக்கு இந்தியா துணை போகக் கூடாது என்றும் வலியுறுத்தப்படவுள்ளது. அமெரிக்கா முழுவதிலும் வசிக்கும் தமிழர்கள் நூற்றுக்கணக்கில் இதில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேரணியில் கலந்து கொள்ளவுள்ளவர்கள் மகாத்மா காந்தியடிகள் போல உடை தரித்து, காலித் தட்டுடன் உண்ணாவிரதமும் மேற்கொள்ளவுள்ளனர். ஈழத் தமிழர்கள் இந்தியாவின் நண்பர்கள், தொப்புள் கொடி உறவுடையவர்கள். அவர்களைப் படுகொலை செய்து வரும் சம்பவங்களை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கைக்கு எவ்வித உதவியையும் இந்தியா தரக் கூடாது. தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்கவுள்ளவர்கள் வலியுறுத்தவுள்ளனர். இலங்கையில் போர் நிறுத்தத்தை உடனடியாக அமல்படுத்துமாறு இந்தியா, இலங்கையை கட்டாயப்படுத்த வேண்டும். இதன் மூலம் அப்பிராந்தியத்தில் அமைதி திரும்பும். சுமூகப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்குமாறு இலங்கைக்கு இந்தியா அறிவுரை கூற வேண்டும் எனவும் வலியுறுத்தப்படவுள்ளது.

சட்டக்கல்லூரி அனுமதிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

lawcollage.gifஇலங்கை சட்டக்கல்லூரி 2010 ஆம் ஆண்டில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் 2000 ஆம் ஆண்டும் அதற்கு பின்னரும் ஒரே அமர்வில் மூன்று பாடங்களில் சித்தியடைந்த (பழைய பாடத்திட்டமாயின் 4 பாடங்கள்) சட்ட கல்விப் பேரவையினால் அங்கீகரிக்கப்பட்ட பாடங்களுடன் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில மொழியிலும் தமிழ் அல்லது சிங்கள மொழியிலும் திறமைச் சித்தி பெற்றவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரி விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் பெப்ரவரி 27 ஆம் திகதிவரை அலுவலக நேரத்தில் சட்டக்கல்லூரியில் பெற்று, பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை அத் திகதிக்கு முன்னர் அதிபர், இலங்கை சட்டக் கல்லூரி, கொழும்பு12 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். விண்ணப்பதாரிகள் 2009 ஜுன் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள அனுமதிப் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் 21 நாட்களில் 2959 பேர் வருகை

wanni.jpgமுல்லை தீவிலுள்ள புலிகளின் பிடியிலிருந்து கடந்த 21 நாட்களுக்குள் 2959 பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வருகை தந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். புலிகளின் பிடியிலிருந்து தப்பி வரும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை கொழும்பிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றது. பிரிகேடியர் மேலும் தகவல் தருகையில் :- இவ்வாண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 21ம் திகதி வரையே 2959 பொதுமக்கள் வருகை தந்துள்ளனர். இந்த மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கத்தின் உதவியுடன் பாதுகாப்பு படையினர் செய்து கொடுத்துள்ளனர்.

சுண்டிக்குளம் பிரதேசத்தை நோக்கி 17 பொதுமக்களும், கொக்குத் தொடுவாய் பிரதேசத்தை நோக்கி 17 சிவிலியன்களும் வருகைத் தந்துள்ளனர். இவர்கள் படகுகள் மூலம் வருகை தந்துள்ளதாகவும் பிரிகேடியர் குறிப்பிட்டார்.

நவம்பரின் பின் 5,600 கோடி ரூபா புதிய நாணயத்தாள் வெளியீடு

parliment_inside.jpgகடந்த நவம்பர் மாதம் தொடக்கம் இதுவரை (ஜனவரி வரை) அரசாங்கம் 56 பில்லியன் (5,600 கோடி) ரூபா பெறுமதியான புதிய நாணயத் தாள்களை அச்சிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கபீர் ஹாசிம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதின்கிழமை நடைபெற்ற நாட்டின் நிதி நிலைவரங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே கபீர் ஹாசிம் இந்தத் தகவலை வெளியிட்டார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்; புதிய நாணயத் தாள்களை அச்சிடுவதன் மூலம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித்நிவாட் கப்ராலுக்கு நாட்டின் ஒரு நெருக்கடியைப் போக்கிக் கொள்ள முடியாது. வியட்நாம் யுத்த களத்தில் ஏற்பட்ட செலவுகளினால் அமெரிக்காவும் நாணயத் தாள்களை அச்சிட ஆரம்பித்ததன் விளைவாக அங்கு பெரும் பணவீக்கம் ஏற்பட்டது. இதனால், அமெரிக்காவுக்கு கையிருப்பிலிருந்த தங்கங்களை விற்கவேண்டி ஏற்பட்டது. நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை காண்பதற்கில்லை. எமது ஆட்சிக் காலத்தில் நாம் 29.9 சதவீதமாக பணவீக்கத்தை கொண்டு செல்லவில்லை. அப்பாவி மக்களின் பணத்தை சுரண்டி அவர்களின் வயிற்றில் அடிக்கவில்லை.

அரசாங்கத்தினால் கடந்த நவம்பர் மாதம் தொடக்கம் இதுவரை 56 பில்லியன் (5,600 கோடி) ரூபா பெறுமதியான நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் தொடக்கம் அரசாங்கம் தொடர்ந்தும் நாணயத்தாள்களை அச்சிட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது, கடந்த செப்டெம்பர் மாதம் முதல் இதுவரை அரசாங்கம் திறைசேரி உண்டியல்களிலிருந்தும் 148 பில்லியன் (14,800 கோடி) ரூபாவைப் பெற்றுள்ளது. இதுவும் உரிய முறையில் பெறப்படவில்லை. அரசாங்கம் கட்டுப்பாடின்றி புதிய நாணயத் தாள்களை அச்சிட்டு வருவதால் இலங்கையின் நாணயப் பெறுமதியும் வீழ்ச்சியடைந்து வருகிறது. அரசாங்கத்தின் தவறான நிதி கையாளுகையினால் நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சிகளை சந்தித்து வருகிறது என்றார்.

17 ஆவது திருத்த அமுலாக்கம் முழுமையான பொறுப்பு எனக்கு தரப்படவில்லை – சபாநாயகர் லொக்கு பண்டார

speaker.jpgஅரசியல் யாப்பின் 17 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் முழுப் பொறுப்பும் தனக்கு வழங்கப்படவில்லையென சபாநாயகர் டபிள்யூ ஜே.எம்.லொக்கு பண்டார பாராளுமன்றில் கூறினார். 17 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ஐ.தே.க. எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி.கூறுகையில், அரசியல் யாப்பின் 17 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பு சபாநாயகருக்கு உள்ளது.

17 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தற்போது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் முன்னேற்றம் என்னவென கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த சபாநாயகர், 17 ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்படவில்லை. அப்படியானதொரு பொறுப்பு 17 ஆவது திருத்தச் சட்டத்தில் இல்லை. இது தொடர்பான பொறுப்பு என்னிடம் தான் உள்ளதெனக் கூறி இந்த சபையையும் நாட்டு மக்களையும் பிழையாக வழிநடத்த வேண்டாம். தேவையானால் 17 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை தொடர்பாக நான் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு உங்களுக்கு தெரிவிக்க முடியும். இது தொடர்பான மேலதிக விளக்கம் தேவையானால் நீங்கள் தனிப்பட்ட முறையில் என்னை சந்தியுங்கள். நான் தெளிவுபடுத்த தயாராகவுள்ளேன் என்றார்.

புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கும் வரை படையினரின் நடவடிக்கை தொடரும் – அனுர யாப்பா

yappa.jpgபுலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்கும்வரை படையினரின் தற்போதைய மனிதாபிமான நடவடிக்கை நிறுத்தப்பட மாட்டாதென்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா நேற்றுத் தெரிவித்தார். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதும் கிழக்கைப் போன்று வடக்கிலும் மாகாண சபை நிர்வாகம் ஸ்தாபிக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் அரசியல் தீர்வு யோசனைகள் கிடைக்கப் பெறும் வரை, வடக்கிலும், கிழக்கிலும் மாகாணசபை நிர்வாகம் அமுல் படுத்தப்படுமென்றும் அமைச்சர் யாப்பா தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டை நேற்று பாராளுமன்றக் கட்டிடத்தில் அமைச்சர் யாப்பா நடத்தினார். இதில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த அமைச்சர் ‘இறுதி அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்படும் வரை மாகாண சபை வலுப்படுத்தப்படும்’ என்று தெரிவித்ததுடன், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கத் தயாரில்லை எனவும் கூறினார்.

படையினரின் மனிதாபிமான நடவடிக்கைக்கான காலவரையறையை இராணுவத்தினரே தீர்மானிப்பார்கள். அதனை வேறு எவராவது காலவரையறையை நிர்ணயித்தால் அது படையினருக்குச் செய்யும் துரோகமாகும். இனப் பிரச்சினைத் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உண்மையான நிலைப்பாடு எமக்குத் தெரியாது. அவர்களின் தற்போதைய நிலைப்பாடு அழுத்தங்கள் காரணமாக விருக்கலாம். எனவே, ஐ. தே. க.வும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒதுங்கியிருந்தாலும், சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஊடாக ஒரு நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கோ, பொதுமக்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாதவாறு படையினர் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். எமது இராணுவத்தினர் ஒழுக்கநெறிகளை மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடிப்பவர்கள் அவர்களுக்கு டாக்டர்களோ, பொறியியலாளர்களோ அல்லது பயங்கரவாதிகளோ உபதேசம் கூற வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கிழக்கில் பஸ்சேவையை விஸ்தரிக்க நடவடிக்கை

bus.jpgகிழக்கு மாகாணத்தில் போக்குவரத்து சேவையினை மேலும் விஸ்தரிக்கும் வகையில் 26 பஸ்களை அரசாங்கம் வழங்கியுள்ளன. திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இந்த பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக மிகவும் மோசமான நிலையில் பின்தங்கிக் காணப்பட்ட கிழக்கு மாகாணத்தின் போக்குவரத்துச் சேவை தற்போது விஸ்தரிக்கப்பட்டு வருகின்றது.

மக்களுக்கு இன்னும் சிறப்பான சேவையினைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே புதிய பஸ்கள் வழங்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி என்.கே.ஏ.டபிள்யூ. குணவர்தன தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு விமானமும் இலங்கை வான்பரப்பில் அத்துமீறி ஊடுருவவில்லை -விமானப் படை பேச்சாளர்

air.jpgஎந்த ஒரு விமானமும் இலங்கையின் வான் பரப்பில் அத்துமீறி ஊடுருவவில்லை என விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். கடந்த செவ்வாய்கிழமை விமானங்கள் எதுவும் அத்துமீறி ஊடுருவவில்லை என்பது உறுதி செய்யப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இது தொடர்பாக சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை நடைபெற்றது. விமானப் படைப் பேச்சாளர் மேலும் தகவல் தருகையில், கடந்த 20ம் திகதி விமானப் படைக்குச் சொந்தமான விமானத்தை தவிர வேறு எந்த ஒரு விமானமும் இருந்ததற்கான எது வித தடயங்களும் ராடர்களில் பதிவாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஸ்வமடு வான்பரப்பில் 2100 அடி உயரத்தில் இரவு 8.00 மணியளவில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த எமது விமானம் ஆகாயத்தில் சிவப்பு நிற ஒளிக்கீற்றை அவதானித்தது. அதேபோன்று 8.50 மணியளவில் சுண்டிக்குளம் பிரதேசத்தில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதும் அதே சிவப்பு நிற ஒளிக்கீற்று தென்பட்டுள்ளது. அதேசமயம் கடற்படையினரும் இதனை அவதானித்துள்ளனர். ஓமந்தை, பலாலி ஆகிய பிரதேசத்திலும் கீழ் வானத்தில் இந்த ஒளிக்கீற்று தென்பட்டுள்ளது. இது செய்மதியிலிருந்து கசியும் ஒளியென்பது எமது ராடர்களின் பதிவுகளிலிருந்தும் ஆய்வுகளிலிருந்தும் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னரும் இது போன்ற ஒளி, வான் பரப்பில் அவதானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வவுனியா ஆஸ்பத்திரி டாக்டர்கள், பணியாளர் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை ரத்து

surgery.jpgவவுனியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் டாக்டர்கள் உட்பட அனைத்துப் பணியாளர்களதும் விடுமுறைகளும் மறு அறிவித்தல் வரை ரத்துச் செய்யப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் அலுவலகத்திலிருந்து புதன்கிழமை காலை இதற்கான எழுத்து மூல உத்தரவு வவுனியா ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கமைய, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வவுனியா ஆஸ்பத்திரி பணியாளர்கள் அனைவரதும் விடுமுறைகள் ரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் கடும் சமர் நடைபெற்று வருகையில் அங்கு இடம்பெற்றுவரும் கடும் ஷெல் தாக்குதலாலும் விமானத்தாக்குதலாலும் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டும் பலர் படுகாயமடைந்தும் வருகின்றனர். எனினும், படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 80 க்கும் மேற்பட்டவர்கள் அவசர சிகிச்சைக்காக வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படவேண்டியிருந்தும் வவுனியாவுக்கான பாதை மூடப்பட்டுள்ளதால் அவர்களை கொண்டு வர முடியாதுள்ளது. இவர்களை வவுனியாவுக்கு கொண்டு வருவதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றபோதும் இதுவரை அது சாத்திப்படவில்லை. இந்த நிலையிலேயே வவுனியா ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்கள், தாதியர்கள் உட்பட 450 க்கும் மேற்பட்ட ஊழியர்களதும் விடுமுறை மறு அறிவித்தல் வரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.