முல்லை தீவிலுள்ள புலிகளின் பிடியிலிருந்து கடந்த 21 நாட்களுக்குள் 2959 பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வருகை தந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். புலிகளின் பிடியிலிருந்து தப்பி வரும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை கொழும்பிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றது. பிரிகேடியர் மேலும் தகவல் தருகையில் :- இவ்வாண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 21ம் திகதி வரையே 2959 பொதுமக்கள் வருகை தந்துள்ளனர். இந்த மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கத்தின் உதவியுடன் பாதுகாப்பு படையினர் செய்து கொடுத்துள்ளனர்.
சுண்டிக்குளம் பிரதேசத்தை நோக்கி 17 பொதுமக்களும், கொக்குத் தொடுவாய் பிரதேசத்தை நோக்கி 17 சிவிலியன்களும் வருகைத் தந்துள்ளனர். இவர்கள் படகுகள் மூலம் வருகை தந்துள்ளதாகவும் பிரிகேடியர் குறிப்பிட்டார்.