கடந்த நவம்பர் மாதம் தொடக்கம் இதுவரை (ஜனவரி வரை) அரசாங்கம் 56 பில்லியன் (5,600 கோடி) ரூபா பெறுமதியான புதிய நாணயத் தாள்களை அச்சிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கபீர் ஹாசிம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதின்கிழமை நடைபெற்ற நாட்டின் நிதி நிலைவரங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே கபீர் ஹாசிம் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்; புதிய நாணயத் தாள்களை அச்சிடுவதன் மூலம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித்நிவாட் கப்ராலுக்கு நாட்டின் ஒரு நெருக்கடியைப் போக்கிக் கொள்ள முடியாது. வியட்நாம் யுத்த களத்தில் ஏற்பட்ட செலவுகளினால் அமெரிக்காவும் நாணயத் தாள்களை அச்சிட ஆரம்பித்ததன் விளைவாக அங்கு பெரும் பணவீக்கம் ஏற்பட்டது. இதனால், அமெரிக்காவுக்கு கையிருப்பிலிருந்த தங்கங்களை விற்கவேண்டி ஏற்பட்டது. நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை காண்பதற்கில்லை. எமது ஆட்சிக் காலத்தில் நாம் 29.9 சதவீதமாக பணவீக்கத்தை கொண்டு செல்லவில்லை. அப்பாவி மக்களின் பணத்தை சுரண்டி அவர்களின் வயிற்றில் அடிக்கவில்லை.
அரசாங்கத்தினால் கடந்த நவம்பர் மாதம் தொடக்கம் இதுவரை 56 பில்லியன் (5,600 கோடி) ரூபா பெறுமதியான நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் தொடக்கம் அரசாங்கம் தொடர்ந்தும் நாணயத்தாள்களை அச்சிட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது, கடந்த செப்டெம்பர் மாதம் முதல் இதுவரை அரசாங்கம் திறைசேரி உண்டியல்களிலிருந்தும் 148 பில்லியன் (14,800 கோடி) ரூபாவைப் பெற்றுள்ளது. இதுவும் உரிய முறையில் பெறப்படவில்லை. அரசாங்கம் கட்டுப்பாடின்றி புதிய நாணயத் தாள்களை அச்சிட்டு வருவதால் இலங்கையின் நாணயப் பெறுமதியும் வீழ்ச்சியடைந்து வருகிறது. அரசாங்கத்தின் தவறான நிதி கையாளுகையினால் நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சிகளை சந்தித்து வருகிறது என்றார்.