17 ஆவது திருத்த அமுலாக்கம் முழுமையான பொறுப்பு எனக்கு தரப்படவில்லை – சபாநாயகர் லொக்கு பண்டார

speaker.jpgஅரசியல் யாப்பின் 17 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் முழுப் பொறுப்பும் தனக்கு வழங்கப்படவில்லையென சபாநாயகர் டபிள்யூ ஜே.எம்.லொக்கு பண்டார பாராளுமன்றில் கூறினார். 17 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ஐ.தே.க. எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி.கூறுகையில், அரசியல் யாப்பின் 17 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பு சபாநாயகருக்கு உள்ளது.

17 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தற்போது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் முன்னேற்றம் என்னவென கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த சபாநாயகர், 17 ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்படவில்லை. அப்படியானதொரு பொறுப்பு 17 ஆவது திருத்தச் சட்டத்தில் இல்லை. இது தொடர்பான பொறுப்பு என்னிடம் தான் உள்ளதெனக் கூறி இந்த சபையையும் நாட்டு மக்களையும் பிழையாக வழிநடத்த வேண்டாம். தேவையானால் 17 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை தொடர்பாக நான் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு உங்களுக்கு தெரிவிக்க முடியும். இது தொடர்பான மேலதிக விளக்கம் தேவையானால் நீங்கள் தனிப்பட்ட முறையில் என்னை சந்தியுங்கள். நான் தெளிவுபடுத்த தயாராகவுள்ளேன் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *