புலிகளை அழிக்க முடியுமென கூறிய எமக்கு வாக்களியுங்கள்; ஜே.வி.பி.

wijitha_herath_jvp.jpgசுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் பிரிவினையைக் கோரும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதால் இவர்களுக்கு அளிக்கும் வாக்குகள் பிரிவினைக்கே வழிவகுக்குமென ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. பிரிவினையைக் கோருகின்ற கட்சிகளுடன் கூட்டமைக்காது புதிய ஐக்கிய இலங்கையை உருவாக்க பாடுபடும் தமக்கே வாக்குகளை அளிக்குமாறு மக்களை அக்கட்சி கோரியுள்ளது.

கொழும்பு தேசிய நூலகத்தில் ஜே.வி.பி. புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அதன் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்; எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் நாட்டில் பிரிவினையை கோருகின்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

அதாவது, சுதந்திரக் கட்சி மலையகத்துக்கு தனி அலகினை கோருகின்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. அண்மைய காலங்களில் பத்திரிகைகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர் யோகராஜன் மலையகத்துக்குத் தனி அலகு கோரியதை நாம் காணலாம். அதேபோல மலையக மக்கள் முன்னணியின் சந்திரசேகரன் கடந்த காலங்களில் பிரபாகரனுடன் கதைத்து வந்ததுடன் ஈழம் குறித்தும் பாராளுமன்றத்தில் பேசியுள்ளார். இவர்கள் கோரும் தனி அலகுக்கு பொலிஸ், காணி அதிகாரம் வேண்டுமென கோருகின்றனர். இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைக்கு வாக்களிப்பது பிரிவினைக்கு அளிக்கும் வாக்காக அமையும்.

இதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியும் முஸ்லிம்களுக்கு தனி அலகு கேட்கின்ற முஸ்லிம் காங்கிரஸுடன் கூட்டமைத்துள்ளது. இந்நிலையில் பிரிவினையைக் கோருகின்ற கட்சிகளுடன் கூட்டமைக்காது தேர்தலில் போட்டியிடுகின்ற, பிரிவினைக்கு எதிராக செயற்படுகின்ற ஒரேயொரு கட்சியான ஜே.வி.பி.க்கே மக்கள் வாக்களிக்க வேண்டும். ஜே.வி.பி. நாட்டில் பிரிவினைக்கு எதிராக செயற்பட்டது. வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பை எதிர்த்து நீதிமன்றம் சென்று அதனை இல்லாமல் செய்தோம். அதுபோல் கடல்கோள் நிவாரண கட்டமைப்பு தொடர்பில் புலிகளுடன் செய்துகொண்ட உடன்பாட்டுக்கு எதிராக நீதிமன்றம் சென்று அதனை இடைநிறுத்தினோம். 2002 இல் புலிகளுடன் செய்துகொண்ட பொய்யான சமாதானத்தை நாம் எடுத்துரைத்ததுடன் அதனை இல்லாமல் செய்தோம். புலிகளை அழிக்க முடியாதது பொய். அதனை செய்ய முடியும் எனக் கூறி அதற்காக முழு ஆதரவினையும் அளித்தோம். இவ்வாறு நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற பேதமின்றி புதிய ஐக்கிய இலங்கையை உருவாக்கும் ஜே.வி.பி.க்கு வாக்களிப்பதற்கு தேசப்பற்றாளர்கள் எம்முடன் ஒன்றிணைய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *