திருட்டுத் தனமாக இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்டுள்ள எட்டு கோடி ரூபா பெறுமதியான 88 இலட்சம் சிகரெட்டுகள் அழிக்கப்படும் என சுங்க அத்தியட்சகர் ஏ. டி. வளவகே தெரிவித்தார்.
40 அடி நீளமான கொள்கலனில் போலி ஆவணங்களுடன் வந்த இச் சிகரெட்டுகளை வரவழைத்தவர் யார் எனத் தெரியவில்லை எனவும் இவர் மேலும் தெரிவித்தார். இக் கொள்கலனில் சீனாவில் தயாரிக்கப்பட்ட கோல்ட்லீஃப், பென்சன் அண்ட் ஹெட்ஜஸ், ஜெர்மனிய தயாரிப்பான கோல்ட் சீல் ஆகிய சிகரெட் பக்கட்டுகள் காணப்பட்டன. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சிலோன் டுபாக்கோ நிறுவன அதிகாரி ஒருவர், சமீபத்தில் 206 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் துபாய்க்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து கொழும்புக்கு அனுப்பிவைக்கப் படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஒரு ரூபா 20 சதம் பெறுமதியான ஒவ்வொரு சிகரெட்டும் 16 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட விலைக்கு சில்லறையாக விற்பனை செய்யப்படுகிறது என்றும் இவர் மேலும் தெரிவித்தார்.