இலங்கையின்
61 ஆவது சுதந்திர தினத்தை வெகுவிமரிசையாகக் கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுதந்திரதின ஏற்பாடுகளை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு மேற்கொண்டு வருவதாக அமைச்சின் செயலாளர் பீ.திசாநாயக்கா தெரிவித்திருக்கின்றார்.
61 ஆவது சுதந்திர தினத்தையொட்டி பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், அனைத்து மதவழிபாட்டுத் தலங்களிலும் சமயவைபவங்களும், வழிபாட்டு நிகழ்வுகளையும் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலகங்களுக்கும் அமைச்சு சுற்று நிருபங்களை அனுப்பிவைத்துள்ளது.
இதேவேளை, பெப்ரவரி 3 ஆம் திகதியும் சுதந்திர தினமான 4 ஆம் திகதியும் அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசியக்கொடிபறக்கவிடப்பட வேண்டுமெனவும் கட்டிடங்களில் மின் அலங்காரங்களைச் செய்யுமாறும் அமைச்சின் செயலாளர் திசாநாயக்கா அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பிரதான சுதந்திர தினக் கொண்டாட்ட ஏற்பாடுகள் தொடர்பாக வார இறுதியில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.