2009

2009

அகதிகள் தங்கியுள்ள பாடசாலைகளை இயங்க வைப்பதற்கு மாற்று ஏற்பாடுகள்

school-2.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா வரும் மக்கள் தங்கவைக்கப்படும் பாடசாலைகளின் மாணவர்களுடைய கல்வி நடவடிக்கைகளுக்காக மாற்று ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் மேற்படி பாடசாலைகளில் அனைத்து வகுப்புகளும் பிற்பகல் 1.30 மணிமுதல் மாலை 530 மணிவரை நடைபெறவேண்டுமென வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி வீ.ஆர்.ஏ. ஒஸ்வோல்ட் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளார். பூந்தோட்டம், நெளுக்குளம், தாண்டிக்குளம், பிரமண்டு, காமினி, செட்டிகுளம் மகாவித்தியாலயங்களிலும் இந்துக் கல்லூரியிலும் வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வரும் மக்கள் தங்கவைக்க இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பாடசாலை மாணவர்களின் நாளாந்தக் கல்வி நடவடிக்கைகள் மாற்றுப்பாடசாலைகளில் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளதாகவும் கல்விப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மாற்ற முறை பாடசாலை ஒழுங்கு விபரம்; பூந்தோட்டம் ம. வி மாணவர்கள் தரம் 1 முதல் 5 வரை தம்பனைச் சோலை கேதீஸ்வர வித்தியாலயம், தரம் 6 முதல் 10 வரை அண்ணா நகர் பரமேஸ்வரா வித்தியாசாலை தரம் 11 முதல் 13 வரை வவுனியா மதீனா வித்தியாலயம். நெளுக்குளம் மவி மாணவர்கள். தரம் 1 முதல் 5 வரை கூமாங்குளம் சித்திவிநாயகர் மவி, தரம் 6 முதல் 11 வரை முஸ்லிம் மவி. தரம் 12 முதல் 13 வரை விபுலானந்தா கல்லூரி. தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயம் 1 முதல் 11 வரையிலான மாணவர்கள் சைவபிரகாச வித்தியாசாலை. பூவசரன்குளம் ம.வி மாணவர்களை பழைய பாடசாலை கட்டிடத்தில் நடத்துவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

இந்துக்கல்லூரி மாணவர்கள் தரம் 1 முதல் 5 வரை சமளங்குளம் அ.த.க.பா, தரம் 6 முதல் 13 வரை வெளிக்குளம் கனிஷ்ட உபா காமினி ம.வி மாணவர்கள் பாடசாலையின் ஒரு பகுதியில் நடத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. செட்டிக்குளம் ம.வி பரீசீலனையில் உள்ளது. வகுப்புகள் 1.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை நடைபெறவேண்டும் கடமைக்கு ஆசிரியர்களை செல்வதற்கு ஏதுவான பணிப்புரைகளும் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்கு அனுதாபம் – ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து.

jaya.jpgஇலங் கைத் தமிழர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:

கடந்த ஆறு மாத கால மாக இலங்கையில் வாழும் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு வருவதை தமிழக மக்கள் நன்கு அறிவர்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்காகவும், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளையும், உயிர்களையும் பாதுகாப்பதற்காகவும் மத்திய அரசால் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அ.தி.மு.க. முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கைத் தமிழர்கள் செத்து மடிந்து கொண்டிருக்கின்ற இந்த சோதனையான தருணத்தில், இந்த ஆண்டு எனது பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என நான் முடிவு செய்துள்ளேன்.

எனவே, கழக உடன் பிறப்புகள் எனது பிறந்த நாளன்று என்னை சந்திப்பதை தவிர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட தேர்தல் கடமையில் 14 ஆயிரம் பொலிஸார்

ranjith-gunasekara.jpgஎதிர் வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள இரு மாகாண சபைகளுக்கான தேர்தலில் சட்டம், ஒழுங்கினை நிலைநாட்டுவதற்காக 14 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர அறிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான வன்முறைகள் மேலும் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பிரசாரப்போட்டியில் களமிறங்கியுள்ளன. கடந்த மாகாணசபைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது தேர்தல் வன்முறை தொடர்பான முறைப்பாடுகள் குறைவாகக் காணப்படுகின்றபோதும், தற்சமயம் தேர்தல் வன்முறைகள் திடீரென அதிகரித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்துக்கு இதுவரை 71 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் 41 சம்பவங்கள் மிக மோசமானவையாகும். தேசிய தேர்தல் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கு இதுவரை 96 முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், 27 முறைப்பாடுகள் துப்பாக்கிப்பிரயோகம் மற்றும் கட்சி அலுவலகங்களை அழிப்பதுடன் தொடர்புபட்ட மிகவும் மோசமான சம்பவங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன.  இதேசமயம், மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் வடமேல் மாகாணத்தில் புத்தளம், குருநாகல் மாவட்டங்களிலும் சுதந்திரமான தேர்தலை கண்காணிப்பதற்கான மக்கள் அமைப்பு (பவ்ரல்) தேர்தல் முறைகேடுகளை கண்காணிக்கவென 3,000 ஊழியர்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இதுவரை தமக்கு தேர்தல் வன்முறை தொடர்பாக 46 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பவ்ரல் அமைப்பு அறிவித்துள்ளது.

இதேவேளை, மற்றுமொரு சுதந்திரமான தேர்தலைக் கண்காணிப்பதற்கான அமைப்பு இதுவரை தமக்கு தேர்தல் வன்முறை தொடர்பாக 61 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதனிடையே, தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸநாயக்க ஐந்து மாவட்டங்களிலும் உள்ள உதவித்தேர்தல் ஆணையாளர்களுக்கு தேர்தலை சீராக நடாத்துவதற்கான இறுதி அறுவுறுத்தல்களை  வழங்கியுள்ளார்.

இலங்கையரசுக்கு இந்தியா உதவுவதை கண்டித்து மலேசியாவில் இந்திய தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்

malasiya.jpgஇலங் கையில் தமிழர்கள் மீதான போருக்கு இராணுவ உபகரணங்களையும் ஆலோசனையையும் வழங்கி மனிதப் பேரவலத்திற்குத் துணைபோகும் இந்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து மலேசியாவில் கவனயீர்ப்பு கண்டனப் பேரணி தமிழ் அமைப்புகளால்  வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டுள்ளது. இதில்  அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். பினாங் மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி, பாராளுமன்ற உறுப்பினர்கள் மனோகரன் மாரிமுத்து, கோவிந்சிங் கர்பால் சிங், மாணிக்கவாசகம் ஆகியோர் இப்பேரணியில் கலந்துகொண்டனர். அத்துடன் மலேசிய பொது அமைப்புகள், பல்லின மக்களும் இப்பேரணியில் கலந்துகொண்டனர். இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்படுகிற வேளையில் அதனைத் தடுத்து நிறுத்தாமல் இந்திய அரசு மௌனமாய் இருப்பது ஏன்?

ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கும் இந்தப் போருக்கு இந்திய அரசு துணைபோவது ஏன்?

இப்போரில் இந்திய அரசின் நிலைப்பாடு என்ன?

இலங்கை அரசு மேற்கொண்டுவரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த இந்தியா உடனே ஆவன செய்யவேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள் போய் சேர்வதை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கோரி இந்தியத் தூதரகத்திற்கு முன்பாக இக்கண்டனப் பேரணி நடைபெற்றது.

இந்திய அரசே இலங்கைத் தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்திவரும் இனப்போருக்கு துணைபோகாதே என்பதான கருத்துகளைத் தாங்கிய பதாதைகளையும் படங்களையும் தாங்கியவாறு முழக்கங்களை எழுப்பியபடி தமிழர்கள் திரண்டிருந்தனர்.

கண்டனப் பேரணியின் முடிவில் மலேசியாவிற்கான இந்தியத் தூதர் அசோக் கந்தா பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் கண்டன மனுவை பெற்றுக்கொண்டார். மனு இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்படும் எனவும் உறுதியளித்தார். சில பொது கருத்துரைகளுக்குப் பின் கண்டனப் பேரணி நிறைவு பெற்றது.

பாதுகாப்பு குறித்து சர்வதேச தொண்டர் அமைப்புகள் ஆராய்வு – சந்திப்பில் ஐ.நா. விசேட தூதுவரும் பங்கேற்பு

இலங்கையிலுள்ள சர்வதேச தொண்டர் அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பாக  வெள்ளிக்கிழமை கொழும்பில் அந்த நிறுவனங்கள் கூடி ஆராய்ந்துள்ளன.

இலங்கை வந்துள்ள ஐ.நா. செயலாளரின் விசேட பிரதிநிதியான சாம்ராட் சாமுவேலும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் சகல அரச சார்பற்ற நிறுவனங்களினதும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கொழும்பு தலைமையகம் மீது வெள்ளிக் கிழமை பிற்பகல் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் கடந்தவாரம் சர்வதேச தொண்டர் அமைப்புகளுக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விடுத்த எச்சரிக்கைகளை அடுத்தே இந்த அவசர கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. இதன்போது, எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதற்குரிய பாதுகாப்பு உத்தரவாதத்தை இலங்கை அரசிடம் பெறுவது தொடர்பாகவும் சந்திப்பின்போது ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மலேசியாவில் தண்டனையில் இருந்து தப்பிய இரட்டையர்கள்

drugs.jpgமலேசியாவில் ஒரே மாதிரியான உருவ அமைப்பைக் கொண்ட இரட்டையர்களில் எவர் குற்றவாளி என்பதை நீதிமன்றம் ஒன்று கண்டுபிடிக்க முடியாது போனதால், போதை மருந்து கடத்திய குற்றவாளி ஒருவர் தூக்குக் கயிற்றில் இருந்து தப்பியுள்ளார்.

இந்த வழக்கு முன்னெப்போதும் இல்லாத வகையைச் சேர்ந்தது என்று கூறிய மலேசிய நீதிபதி ஒருவர், அதனால், தன்னால், தவறான நபரை தூக்குமேடைக்கு அனுப்ப முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

2003 ஆம் ஆண்டில் ஒரு வீட்டிலும், காரிலும் போதை மருந்தை பதுக்கி வைத்திருந்த ஒருவரை மலேசிய பொலிஸார் கைது செய்தனர். ஆனால், சில நிமிடங்களுக்குப் பிறகு, அதே இடத்துக்கு வந்த அவரைப் போன்று உருவ ஒற்றுமை கொண்ட அவரது இரட்டைச் சகோதரரையும் பொலிஸார் கைது செய்தனர்.

இருவரில் எவர் முதலில் கைது செய்யப்பட்ட குற்றவாளி என்று அரச தரப்பு சட்டவாதிகள் நிரூபிக்கத் தவறிவிட்டார்கள் என்று நீதிமன்றத்தில் நீதிபதி அறிவித்தபோது, இரட்டையர்கள் இருவருமே அங்கு அழுதனர்.

இதுவரை 13ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வந்துள்ளனர்

civilians.jpgகட்டுப் பாடற்ற பிரதேசத்திலிருந்து வவுனியாவின் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு இதுவரையில் 13 ஆயிரம் பொது மக்கள் வந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்

வன்னிப்பகுதி மக்களுக்கு உணவுப்பொருட்களை அனுப்புவதில் சிரமம் – ஐ.நா

food.jpgஐ.நா. மன்ற உலக உணவுத் திட்டத்தின் மூலமாக வன்னிப் பகுதிக்கு அனுப்பப்பட்டுவந்த உணவுப் பொருட்களை தற்போது அனுப்பமுடியவில்லை.
இதனால் வன்னியில் உள்ள மக்கள் உணவு நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள் என்று உலக உணவுத் திட்டம் அறிவித்திருந்தது.

இது தொடர்பாக உலக உணவுத் திட்டத்தின் இலங்கை செயற்பாடுகளுக்கான துணை இயக்குநர் அஸேப் அஸ்ரத் கூறும்போது, உணவுப் பொருட்களை வன்னிக்கு அனுப்புவதற்கான எல்லா ஆயத்தப் பணிகளையும் தாங்கள் செய்திருப்பதாகவும், ஆனால் பாதுகாப்பு சூழல் தொடர்பான அனுமதியை அதிகாரிகள் கொடுக்காததால் தாங்கள் உணவுப் பொருட்களை அனுப்ப முடியாமல் இருப்பதாக கூறினார்.

இது தொடர்பாக இலங்கை அரசின் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறும்போது, வன்னிப்பகுதிகளில் அரசாங்க அதிபர்கள் இப்போது இல்லை என்றும், உலக உணவு திட்டத்தினர் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு வரையிலுமே உணவினை கொண்டு செல்ல தயாராக இருப்பதாகவும், ஆதலால் தற்போது உணவுப்பொருட்களை மேற்கொண்டு வன்னிப்பகுதிக்கு எடுத்துச் செல்வதில் அரசாங்கம் தற்போது ஒரு இக்கட்டான நிலையை எதிர்கொண்டிருப்பதாகவும், எனினும் மக்களுக்கு உணவுப்பொருட்களை எடுத்து செல்வது குறித்து ஆலோசனைகளை நடத்தி வருவதாக அவர் கூறினார்.

மனிதாபிமான நிலைவரத்தை கண்டறிய இலங்கைக்கு ஐ.நா.குழு -அனுப்பிவைப்பது தொடர்பாக பான் கி மூன் பரிசீலனை

banki-moon.jpgஇலங் கையில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நிலைவரம் தொடர்பாக ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருக்கும் ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கிமூன் மனிதாபிமான நிலைமையை மதிப்பீடு செய்வதற்காக குழுவொன்றை அனுப்பி வைப்பது தொடர்பாக தான் பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். தெற்காசிய விஜயத்தின் ஓரங்கமாக இந்தியாவுக்கு கடந்த வியாழக்கிழமை பான்கிமூன் விஜயம் மேற்கொண்டிருந்தார். அங்கு வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி உட்பட இந்தியத்தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பான்கி மூன், இலங்கை விவகாரம் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளார்.

புதுடில்லியில் அசோக் ஹோட்டலில் பான்கிமூன் தங்கியிருந்தபோது சென்னையிலிருந்து வெளியாகும் “இந்து’ பத்திரிகை ஆசிரியர் என்.ராம் பான்கி மூனை பேட்டிகண்டுள்ளார். அப்பேட்டியின்போது மும்பைத்தாக்குதல்கள், இந்திய பாகிஸ்தான் உறவுகள், ஆப்கானிஸ்தான், இலங்கை, காஸா, ஈரான் பிரச்சினைகள், காலநிலைமாற்றம் என்பன தொடர்பாக “இந்து’ ஆசிரியர் ராம் எழுப்பிய கேள்விகளுக்கு பான் கி மூன் பதிலளித்திருக்கிறார். இலங்கை தொடர்பாக ராம் எழுப்பிய கேள்வியும் பான்கிமூன் அளித்த பதிலும் இங்கு தரப்படுகிறது.

எமது சொந்த இடத்துக்கு (பத்திரிகை பிரசுரிக்கப்படும் தலைமையகம்) சமீபமாக உள்ள இலங்கையில் 31 நாடுகளால் பயங்கரவாதப்பட்டியலில் உள்ளடக்கப்பட்ட இயக்கமானது 1 இலட்சத்து 20 ஆயிரம் மக்கள் தொகையுடன் குறுகிய நிலப்பரப்புக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக நீங்கள் அறிந்தது என்ன? இவை தொடர்பாக தங்களுக்கு பல அறிக்கைகள் கிடைத்திருக்குமே? என்று ராம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த பான் கி மூன் தெரிவித்ததாவது;

இலங்கை நிலைவரம் கரிசனைக்குரியதாகும், இது தொடர்பாக அண்மையில் இலங்கைத் தலைவர்களுடன் நான் ஆராய்ந்துள்ளேன். இன்று கூட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நான் பேசவுள்ளேன். (இலங்கை ஜனாதிபதியும் பான் கி மூனும் தெலைபேசியில் உரையாடியுள்ளனர்) யாவற்றிலும் முதலாவதாக இந்த நிலைவரத்தை மதிப்பிட்டு மனிதாபிமான நிலைவரம் தொடர்பாக எனது கவலையை வெளிப்படுத்தியுள்ளேன். குறிப்பாக பொதுமக்கள் இழப்புகள் குறித்து எனது கரிசனையை தெரிவித்திருக்கிறேன். பத்து நாட்களுக்கு முன்னர், நான் பயணமாவதற்கு முன்னராக நியூயோர்க்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விசேட தூதுவர் என்னை சந்தித்தார். அச்சமயம் இந்த விடயம் குறித்து கலந்துரையாடினோம். எமது விஷேட தூதுவர் ஊடாக பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்படக்கூடாது என்றும் அதனை உறுதிப்படுத்துமாறும் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கும் அவரின் அரசாங்கத்திற்கும் நான் தெரியப்படுத்தியுள்ளேன். அத்துடன், ஐ.நா.பணியாளர்கள் மற்றும் நிவாரணப்பணியாளர்களின் பாதுகாப்பு முழு அளவில் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்றும் கேட்டுள்ளேன். இதனை உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி எனக்கு உறுதிமொழி வழங்கியிருக்கிறார் அங்கு மிகவும் பாரதூரமான மனிதாபிமான அக்கறைக்குரிய விடயங்கள் உள்ளன. அவற்றை மதிப்பீடு செய்ய குழுவொன்றை அனுப்பிவைப்பது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறேன். என்று பான்கிமூன் கூறியுள்ளார்.

இனப்படுகொலையை தடுக்கக் கோரி மலேசியாவில் ஈழத்தமிழர் தீக்குளித்து தற்கொலை

0802-raja.jpgஇலங் கையில் போர் நிறுத்தத்தை கொண்டு வர அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா முன்வர வேண்டும், முயற்சி எடுக்க வேண்டும், ஈழத் தமிழர்களைக் காக்க வேண்டும் என்று கோரி மலேசியாவில் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார். ஈழத்தைச் சேர்ந்தவர் ராஜா. 27 வயதாகும். இவர் கடந்த 3 வருடங்களாக மலேசியாவில் வசித்து வந்தார். வெள்ளிக்கிழமை அவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜலான் தமன் தெருவில் உள்ள முனீஸ்வரர் கோவிலுக்கு அருகே இந்த  சம்பவம் நடந்துள்ளது. உடல் மீது பற்றி எரிந்த நெருப்புடன் அலறியபடி ராஜா ஓடியதைப் பார்த்த ஒரு டாக்சி டிரைவர் கையில் தண்ணீருடன் அவரை நோக்கி ஓடினார். ஆனால் அதற்குள் ராஜா கருகி உயிரிழந்து விட்டார். விரைந்து வந்த போலீஸார் அவரது உடலை மீட்டனர். அவரது உடலுக்கு அருகே டைரி, ஒரு பர்ஸ், தீப்பெட்டி, பை ஆகியவை மீட்கப்பட்டன.

இந்த முனீஸ்வரர் கோவிலுக்குத்தான் தினசரி இரவு வருவார் ராஜா. அங்கு வாய் விட்டு சத்தமாக, இலங்கை ராணுவத்திடமிருந்து ஈழத் தமிழர்களை காப்பாற்று என மனமுருக வேண்டுவாராம். தீக்குளித்து உயிர் நீத்த ராஜா எழுதி வைத்துள்ள ஒரு கடிதத்தையும் மலேசிய போலீஸார் மீட்டுள்ளனர்.

அதில் ராஜா கூறியிருப்பதாவது …

எனது பெயர் ராஜா. 1982ம் ஆண்டு மே 27ம் தேதி நான் பிறந்தேன். 2006ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி வேலை தேடி மலேசியாவுக்கு வந்தன். எனக்கு நல்ல வேலையும் கிடைத்தது. பிறகு ஏன் நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.? இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். உடனடியாக அங்கு அமைதிப் பேச்சுக்கள் தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த செயலில் நான் ஈடுபட்டேன்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உடனடியாக இலங்கைக்குப் போக வேண்டும். அவருடன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி, நார்வே அமைதித் தூதர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரும் அவருடன் செல்ல வேண்டும். எனது டைரியை வைகோவிடம் ஒப்படைத்து விடுங்கள். அவரால்தான் எனது இறுதி விருப்பங்களை நிறைவேற்ற முடியும் என்று கூறியுள்ளார் ராஜா.

ராஜாவின் தீக்குளிப்பு சம்பவம் மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.