இலங் கையில் தமிழர்கள் மீதான போருக்கு இராணுவ உபகரணங்களையும் ஆலோசனையையும் வழங்கி மனிதப் பேரவலத்திற்குத் துணைபோகும் இந்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து மலேசியாவில் கவனயீர்ப்பு கண்டனப் பேரணி தமிழ் அமைப்புகளால் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டுள்ளது. இதில் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். பினாங் மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி, பாராளுமன்ற உறுப்பினர்கள் மனோகரன் மாரிமுத்து, கோவிந்சிங் கர்பால் சிங், மாணிக்கவாசகம் ஆகியோர் இப்பேரணியில் கலந்துகொண்டனர். அத்துடன் மலேசிய பொது அமைப்புகள், பல்லின மக்களும் இப்பேரணியில் கலந்துகொண்டனர். இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்படுகிற வேளையில் அதனைத் தடுத்து நிறுத்தாமல் இந்திய அரசு மௌனமாய் இருப்பது ஏன்?
ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கும் இந்தப் போருக்கு இந்திய அரசு துணைபோவது ஏன்?
இப்போரில் இந்திய அரசின் நிலைப்பாடு என்ன?
இலங்கை அரசு மேற்கொண்டுவரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த இந்தியா உடனே ஆவன செய்யவேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள் போய் சேர்வதை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கோரி இந்தியத் தூதரகத்திற்கு முன்பாக இக்கண்டனப் பேரணி நடைபெற்றது.
இந்திய அரசே இலங்கைத் தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்திவரும் இனப்போருக்கு துணைபோகாதே என்பதான கருத்துகளைத் தாங்கிய பதாதைகளையும் படங்களையும் தாங்கியவாறு முழக்கங்களை எழுப்பியபடி தமிழர்கள் திரண்டிருந்தனர்.
கண்டனப் பேரணியின் முடிவில் மலேசியாவிற்கான இந்தியத் தூதர் அசோக் கந்தா பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் கண்டன மனுவை பெற்றுக்கொண்டார். மனு இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்படும் எனவும் உறுதியளித்தார். சில பொது கருத்துரைகளுக்குப் பின் கண்டனப் பேரணி நிறைவு பெற்றது.