எதிர் வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள இரு மாகாண சபைகளுக்கான தேர்தலில் சட்டம், ஒழுங்கினை நிலைநாட்டுவதற்காக 14 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர அறிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான வன்முறைகள் மேலும் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பிரசாரப்போட்டியில் களமிறங்கியுள்ளன. கடந்த மாகாணசபைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது தேர்தல் வன்முறை தொடர்பான முறைப்பாடுகள் குறைவாகக் காணப்படுகின்றபோதும், தற்சமயம் தேர்தல் வன்முறைகள் திடீரென அதிகரித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்துக்கு இதுவரை 71 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் 41 சம்பவங்கள் மிக மோசமானவையாகும். தேசிய தேர்தல் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கு இதுவரை 96 முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், 27 முறைப்பாடுகள் துப்பாக்கிப்பிரயோகம் மற்றும் கட்சி அலுவலகங்களை அழிப்பதுடன் தொடர்புபட்ட மிகவும் மோசமான சம்பவங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேசமயம், மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் வடமேல் மாகாணத்தில் புத்தளம், குருநாகல் மாவட்டங்களிலும் சுதந்திரமான தேர்தலை கண்காணிப்பதற்கான மக்கள் அமைப்பு (பவ்ரல்) தேர்தல் முறைகேடுகளை கண்காணிக்கவென 3,000 ஊழியர்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இதுவரை தமக்கு தேர்தல் வன்முறை தொடர்பாக 46 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பவ்ரல் அமைப்பு அறிவித்துள்ளது.
இதேவேளை, மற்றுமொரு சுதந்திரமான தேர்தலைக் கண்காணிப்பதற்கான அமைப்பு இதுவரை தமக்கு தேர்தல் வன்முறை தொடர்பாக 61 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதனிடையே, தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸநாயக்க ஐந்து மாவட்டங்களிலும் உள்ள உதவித்தேர்தல் ஆணையாளர்களுக்கு தேர்தலை சீராக நடாத்துவதற்கான இறுதி அறுவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.