2009

2009

இடம்பெயர்ந்து வரும் வவுனியா மக்களின் நலன்பேண நான்கு விசேட செயலணிகள்

risard.jpgவிடுவிக்கப்படாத வன்னிப் பிரதேசத்திலிருந்து வவுனியாவுக்கு வந்துசேரும் மக்களுக்கு உணவு, குடிநீர், கல்வி மற்றும் சுகாதார வசதிகளைக் கிரமமான முறையில் பெற்றுக்கொடுக்கவென நான்கு விசேட செயலணிகள் அமைக்கப்படவிருப்பதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்றுத் தெரிவித்தார். அடுத்துவரும் சில தினங்களுக்குள் விடுவிக்கப்படாத வன்னிப் பிரதேசத்திலிருந்து சுமார் ஒரு இலட்சம் பேர் வந்து சேர்வர் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

விடுவிக்கப்படாத வன்னிப் பிரதேசத்திலிருந்து வவுனியாவுக்கு வந்துசேரும் மக்களுக்கு உணவு, குடிநீர், கல்வி மற்றும் சுகாதார வசதிகளை எவ்விதமான குறைபாடுகளுமின்றி சிறந்த முறையில் பெற்றுக் கொடுக்க இச்செயலணிகள் பெரிதும் உதவும் எனவும் அவர் கூறினார். இதுவரை வவுனியா மெனிக்பாம் பகுதியில் சுமார் 12 ஆயிரம் பேரை தங்க வைத்துள்ளதாகவும் இவர்களுக்குத் தேவையான சகல வசதிகளும் பெற்றுக் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வன்னியில் இருந்துவரும் மக்களுக்குத் தேவையான சகல வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமைத்த உணவுகள், தங்குமிட வசதி, சுகாதார வசதி என்பன வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிட்டு ள்ளதாக கூறிய அவர் வன்னியில் இருந்துவரும் மக்களை தங்க வைக்க ஆயிரம் ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இவர்களுக்கு உதவி வழங்க ஐ.நா. மற்றும் ஐ.நா.வுடன் தொடர்புடைய தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன முன்வந்துள்ளன. இது குறித்து அவர்களுடன் பேச்சு நடத்தினேன் எனவும் அமைச்சர் தெரிவித்தார். தற்காலிக கூடாரங்கள், நீர் வசதி, மலசல கூட வசதி என்பன அளிக்க ஐ.நா. தொண்டு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.

வவுனியா வரும் மக்களுக்கு சுகாதார வசதி, கல்வி, குடிநீர், மலசல கூட வசதி மற்றும் உணவு வசதிகள் அளிப் பதற்கென 4 செயலணிகளை நிறுவ திட்டமிட்டுள்ளதாக கூறிய அமைச்சர், அது குறித்து இன்று (9) வவுனியா செயலகத்தில் உயர்மட்ட கூட்டமொன்று நடத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த செயலணிகளினூடாக குறித்த வசதிகள் வழங்குவது குறித்து தனித்தனியாக நட வடிக்கை எடுக்கப்படவுள்ளது. வன்னியில் இருந்துவரும் மக்களை கவனிப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார். உணவுகள், மருந்துகள் என்பவற்றை கையிருப்பில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு வட கிழக்கு கடலில் புலிகளின் இரு படகுகள் தாக்கியழிப்பு

_bort.jpgமுல் லைத்தீவு வடகிழக்கு கடலில் புலிகளின் இரண்டு படகுகளை கடற்படையினர் நேற்றுக் காலை தாக்கியழித்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார். இந்த சம்பவத்தில் ஆறு புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் இரண்டு படகுகளும் கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடற்படையின் அதிவேக தாக்குதல் படகான டோராவை பயன்படுத்தி நேற்றுக்காலை 6.30 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவத்தின் பின்னர் படையினர் கடற்பரப்பில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட ஆறு புலிகளில் இருவரின் சடலங்களை கண்டெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு கடற்பரப்பிற்கு வெளியில் செல்ல முற்பட்ட இரண்டு படகுகளும் முல்லைத்தீவுக்கு வடகிழக்கே 10 கடல் மைல் தொலைவில் வரும்வரை காத்திருந்த பாதுகாப்புப் படையினர் அந்த படகுகளை இலக்குவைத்து கடுமையாக தாக்குதல்களை நடத்தியுள்ளனர். புலிகள் எந்த விதத்திலும் தப்பிச் செல்ல முடியாத வகையிலும் அவர்கள் தாக்குதல்களை மேற்கொள்ள முடியாத நிலையிலும் கடற்படையினர் கடற்பரப்பில் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கொமாண்டர் தஸநாயக்க மேலும் தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் இன்று

இந்த ஆண்டின் முதலா வது சந்திர கிரகணம் இன்று (9ம் திகதி) தோன்றுகின்ற போதிலும், அதனை இலங் கை உட்பட உலகின் பெரும் பாலான நாடுகளில் பார்க்க முடியாது என்று கொழும்பு பல்கலைக்கழக பெளதீகவி யல் துறை சிரேஷ்ட விரிவு ரையாளரும், வானியல் குறித்த நவீன தொழில்நுட்பத்திற் கான ஆதர் சி கிளார்க் நிலைய ஆலோசகருமான கலாநிதி சந்தன ஜயரட்ன நேற்று தெரிவித்தார்.

பூமியின் இருள் பகுதிக்குள் சந்திரன் பிரவேசிப்பதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இன்று மாலை 6.07 மணிக்கு ஆரம்பமாகும் சந்திர கிரகணம் இரவு 10.10 மணி வரை இருக்கும் எனவும் அவர் கூறினார். இம்முறை சந்திரன் சாதாரண இருள் பகுதியால் பயணிப்பதால் தான் சந்திர கிரகணத்தை பார்க்க முடியாத நிலை ஏற்படுகின்றது. என்றாலும் இக்காலப் பகுதியில் சந்திரன் மங்கலாகத் தென்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வருடம் நான்கு சந்திர கிரகணங்கள் தோன்றவிருக்கின்றன. அவற்றில் முதலாவது சந்திர கிரகணமே இன்று தோன்றவிருக்கிறது. எதிர்வரும் ஜுலை மாதம் 7ம் திகதியும், ஆகஸ்ட் மாதம் 6ம் திகதியும், டிசம்பர் மாதம் 31ம் திகதியும் என்றபடி இச்சந்திர கிரகணங்கள் தோன்றும் என்றும் அவர் கூறினார்.

புலிகளின் பிடியிலுள்ள மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்பிவைப்பதில் அரசு விஷேட கவனம்

food.jpgமுல் லைத்தீவு மாவட்டத்தில் புலிகள் இயக்கத்தின் பிடியிலுள்ள மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை துரிதமாக அனுப்பி வைப்பது குறித்து அரசாங்கம் விஷேட கவனம் செலுத்தி இருப்பதாக அமைச்சர் ரிஸாட் பதியுதீன் நேற்றுத் தெரிவித்தார்.

இது விடயமாக பாதுகாப்பு தரப்பினர் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பு காரணங்களினால் கடந்த சில தினங்களாக மீட்கப்படாத பகுதிகளுக்கு உணவுப் பொருட்களை அனுப்பி வைப்பதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், துரிதமாக அங்கு உணவு அனுப்புவது குறித்து அரசாங்கம் விஷேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது,

ஜனவரி 29 ஆம் திகதி 810 டொன் உணவுப் பொருட்கள் வன்னிக்கு அனுப்பப்பட்டது. அதன் பின்னர் அப்பகுதிக்கு உணவு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டன. அப்பகுதிக்கு துரிதமாக உணவுப் பொருட்கள் அனுப்புவது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் பேசி வருகிறோம். இது குறித்து ஐ.நா. தொண்டு நிறுவனங்கள், உலக உணவுத் திட்டம் என்பவற்றுடனும் பேசி வருகிறோம் என்றார்.

வடக்கு அகதிகளுக்கு காத்தான்குடி மக்கள் வழங்கிய உதவி தமிழ்முஸ்லிம் நல்லுறவுக்கு சிறந்த எடுத்துக்காட்டு – கிழக்கு முதலமைச்சர்

muslim-aid.jpgகிழக்கு மாகாணத்தில் தமிழ்முஸ்லிம் இன நல்லுறவுக்கு மட்டக்களப்புகாத்தான்குடி முஸ்லிம்களால் வடபுல அகதிகளுக்கு பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கியமை ஓர் நல்ல எடுத்துக்காட்டாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் காத்தான்குடி பிரதேச மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு சம்மேளனத் தலைவர் எம்.எம்.சுபைர் தலைமையிலும் மட்டக்களப்பு நகர ஜாமிஉஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயலிலும் , இஸ்லாமிய வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பும் இணைந்து நடத்திய வடபுல அகதிகளுக்கு பொருட்கள் கையளிப்பு நிகழ்வும் இதே தினம் மாலை 4.30 மணிக்கு பள்ளிவாயலில் வர்த்தக சங்கத் தலைவர் கே.எம். கலீல் தலைமையிலும் இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ;

உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்வதற்காகவும் அல்லது பிறரை வாழவைப்பதற்காகவுமே பிறக்கின்றான். இந்த ரீதியில் கிழக்குமாகாணசபையை மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்ததையடுத்து கிழக்கு மக்கள் ஓரளவு நிம்மதியுடன் வாழ்ந்தபோதும் வட பகுதியில் பாதிப்புக்குள்ளான எமது உறவுகளுக்கு எம்மால் முடிந்தவரை உதவ வேண்டுமென்ற கோரிக்கையினை எமது மாகாணசபையின் தீர்மானத்திற்கேற்ப முன்வைத்தேன். இதற்காக மாவட்டத்தில் அனைத்து பிரதேசங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தபோதும் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் பெருமளவிலான பொருட்கள் சேகரிக்கப்பட்டு வழங்கி இருக்கின்றமை இம்மாவட்டத்தில் விஷமிகளின் திட்டமிட்ட நடவடிக்கையினால் சிதைந்து காணப்பட்ட தமிழ் முஸ்லிம் உறவு ஜனாதிபதி கிழக்கு மாகாணசபையைத் தோற்றுவித்ததன் பிறகு நல்ல முன்னேற்றத்தை பெற்றுள்ளதை வெளிக்காட்டுகின்றது.

கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்ட பின், நான் மட்டுமல்ல மக்களும் பலத்த எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தார்கள். இருந்தும் 13 ஆவது சரத்து முழுமையாக அமுல்படுத்தப்படாமல் இருந்த நிலையிலும் சமூக மனித உறவுகளை கடந்த 8 மாத காலத்துக்குள் இறுக்கமாக முன்னெடுத்துச் செல்வது எமக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். இனங்களுக்கிடையே நல்லுறவை வளர்ப்பதன் மூலமே மாவட்டத்தின், மாகாணத்தின்,பிரதேசத்தின் , கிராமத்தின் அபிவிருத்தியினையும் முன்னெடுத்துச் செல்ல முடியுமென்றார்.

இந்நிகழ்வுகளில் நகரசபை தலைவர் யூ.எல்.எம்.முபீன், மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன் , முதலமைச்சரின் இணைப்பு செயலாளர் பூ.பிரஷாந்தன், பிரதி மேயர் எஸ்.ஜோர்ஜ்பிள்ளை, பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், முஸ்லிம் நீதிபதி எம்.எம்.மஹ்ரூப் கரீம் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.

48 மணி நேரத்தில் 10301 சிவிலியன்கள் படையினரிடம் தஞ்சம்

civilians.jpgபுலிகளின் பிடியிலிருந்து கடந்த 48 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் 10,301 சிவிலியன்கள் தப்பி வந்து இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இவர்களில் 5600 சிவிலியன்கள் நேற்று முன்தினம் 4701 சிவிலியன்கள் நேற்றும் வருகை தந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்றைய தினம் மாத்திரம் விசுவமடு பிரதேசத்தை நோக்கி வருகை தந்த 4701 சிவிலியன்களில் மூவர் புலிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் மூன்று சிவிலியன்கள் படுகாயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளால் கொல்லப்பட்ட மூன்று சிவிலியன்களின் சடலங்களை பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு கொண்டுவந்துள்ளதுடன் காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளின் பிடியிலிருந்து தப்பி ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்றுக்காலை வரை 21,621 சிவிலியன்கள் இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

தப்பி வரும் பொதுமக்களை நலன்புரி முகாம்களுக்கு அழைத்துச் செல்லவென போக்குவரத்து அமைச்சின் ஏற்பாட்டில் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 50 பஸ்கள் நேற்றைய தினம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வருவதை புலிகள் பல்வேறு விதத்தில் தடுத்துவருவதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

புலிகள் பணயமாக வைத்து மேற்கொள்ளும் அடக்கு முறைகளையும், அவர்களது பிடியிலுள்ள சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் நாளாந்தம் கொடுத்துவரும் துன்பங்களையும் வெறுத்த சிவிலியன்களின் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக தெரிவித்த அவர் இது மேலும் கணிசமான முறையில் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்தார். புலிகளின் பிடியிலிருந்து தப்பிவர முயற்சிப்பவர்களுக்கு சங்கிலிகளால் புலிகள் அடித்து கடுமையாக துன்புறுத்தியிருப்பதுடன் அவர்களது குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய உணவுப் பொருட்களையும் பெருமளவில் குறைத்தும் கொடுப்பதாக தப்பிவந்த பொதுமக்கள் தெரிவித்ததாக இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இதேவேளை இளம் வயதுடையவர்கள் பலாத்காரப் படுத்தப்படுவதுடன் 45 வயதுக்குட்பட்டவர்கள் கட்டாய பயிற்சி வழங்கப்பட்டு யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். காமினி மகா வித்தியாலயத்தில் 1000 பேரும், தம்பைமடு முகாமில் 2799 சிவிலியன்களும், நெலுங்குளம் முகாமில் 2625 சிவிலியன்களும், மெனிக் பாம் முகாமில் 582 சிவிலியன்களும், செட்டிக்குளம் மத்திய கல்லூரியில் 1763 சிவிலியன்களும், கதிர்காமர் நிவாரண கிராமத்தில் 1351 பொதுமக்களும், ஓமந்தையில் 6000 பொதுமக்களும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சுட்டிக் காட்டினார்.

ரயில்வே அதிகாரிகள் இன்று இரவு முதல் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம்

train.jpgரயில்வே அதிகாரிகள் சங்கத்தினர்  இன்று  இரவு 9 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர். இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம்  இன்று திங்கட்கிழமை இரவு 9 மணி தொடக்கம் சுமார் 48 மணிநோம் இடம்பெறுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நமக்கான கொடுப்பனவு மற்றும் பதவியுயர்வு என்பவற்றை வழங்குமாறு கோரியே இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

புலிகளின் ட்ரக் வண்டி மீது படையினர் தாக்குதல் -புதுக்குடியிருப்பில் சம்பவம்

udaya_nanayakkara_.jpgகுண்டு துழைக்காத தகடுகள் பொறுத்தப்பட்ட புலிகளின் ட்ரக் வண்டி ஒன்றை இலக்கு வைத்து படையினர் நடத்திய தாக்குதல்களில் அந்த வாகனம் பலத்த சேதங்களுக்குள்ளானதுடன் அதில் இருந்த 34 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு- ஒட்டுச்சுட்டான் வீதியின் ஊடாக முன்னேறிவரும் இராணுவத்தின் 53வது படைப் பிரிவினர் கனரக யுத்த தாங்கிகளை பயன்படுத்தி நேற்று முன்தினம் மாலை இந்த கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பை நோக்கி வேகமாக முன்னேறிவரும் இராணுவத்தினரை இலக்கு வைத்து கடுமையான தாக்குதல்களை மேற்கொள்ளும் பொருட்டே புலிகளின் ட்ரக் வண்டி வேகமாக வந்ததாகவும் இதனை அவதானித்த படையினர் அந்த ட்ரக்கை இலக்கு வைத்து  தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட புலிகளின் 12 பேரின் சடலங்களை நேற்று மாலை வரை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

எதிரணியை யுத்த முனைக்கு அழைத்துச் சென்று உண்மையை வெளிப்படுத்த அரசு முன்வரவேண்டும் – சஜித் பிரேமதாச

Sajitha Premadasaதற்போது நடைபெற்றுவரும் யுத்தத்தில் பெருமளவான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். இந்த யுத்தத்தின் உண்மை நிலையை எதிர்க்கட்சியினராகிய எம்மால் கூட அறிய முடியாமலுள்ளது. எனவே எதிர்க்கட்சியாகிய ஐ.தே.க. வினரையும் ஊடகவியலாளர்களையும் யுத்தமுனைகளுக்கு அழைத்துச் சென்று அரசு உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அத்துடன் தமிழ் மக்களின் தனித்துவத்தை நிலைநாட்டக் கூடிய உறுதியானதும் நிலையானதுமான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமெனவும் அது இந்த நாட்டின் ஏனைய சமூகத்தவர்களைப் பாதிக்காத வகையிலும் நாட்டின் இறைமைக்கும் பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலும் இருக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜட்டவத்தை எலக்கர சந்தியில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

மஹிந்தராஜபக்ஷவின் கள்ளச் சிரிப்பையும் கபட வார்த்தைகளையும் போலி வாக்குறுதிகளையும் அவர் நடத்தும் நாடகங்களையும் நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது. அவர் ஜனாதிபதியாக ஆட்சிபீடமேறியதிலிருந்து இன்றுவரை நடப்பவற்றை கவனத்தில் கொண்டே மக்கள் வாக்களிக்கவேண்டும்.

இந்த நாட்டின் வருமானத்தில் 50 சதவீதம் செல்வந்தர்களை சென்றடைகின்றது. 27 வீதம் அமைச்சர்களாலும் எம்.பி.க்களாலும் வீண்விரயம் செய்யப்படுகின்றது. மிகுதி 23 வீதம் மட்டுமே மக்களை சென்றடைகின்றது. ஜனாதிபதியும் பிரதமரும் மக்களை யுத்த மாயையில் வைத்திருக்க முற்படுகின்றனர்.

யுத்தத்தின்மூலம் பெருமளவான அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். யுத்தத்தின் உண்மையான நிலை என்னவென்பது இந்த நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாகிய எங்களுக்கே தெரியாமல் உள்ளது.

எனவே யுத்தத்தின் உண்மை நிலையை நாம் அறிந்துகொள்ள எதிர்க்கட்சியாகிய ஐ.தே.க.வையும் ஊடகவியலாளர்களையும் அரசு யுத்த முனைகளுக்கு அழைத்துச் செல்லவேண்டும். அதேவேளை, தமிழ் மக்களின் தலைமைத்துவத்தை நிலைநாட்டும் வகையில் தீர்வுத்திட்டத்தை அரசு முன்வைக்கவேண்டும். ஆனால், இந்தத் தீர்வுத்திட்டத்தினால் இந்த நாட்டின் ஏனைய சமூகங்கள் பாதிக்கப்படக்கூடாது. அத்துடன் நாட்டின் இறைமையும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படவேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச ஆட்சிக் காலத்தில் தான் இந்தநாடு பொருளாதாரரீதியில் வளர்ச்சிகண்டது. அதன் பின்னர் வந்த தலைவர்களால் அந்த வளர்ச்சி நிலையை தொடர முடியவில்லை. முறையான தலைமைத்துவம் இருந்தால் மட்டுமே நாடு பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைய முடியும். எனவே மக்கள் உண்மைநிலையை உணர்ந்து ஐ.தே.க.வை மீண்டும் ஆட்சிபீடமேற்ற வேண்டும்.

வன்னியிலுள்ள அப்பாவி மக்களின் நிலை குறித்து பாப்பரசர் உரிய கவனம் செலுத்த வேண்டும் -ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை

batticolo.jpgவன்னியில் தொடரும் மோதல்களுக்கு மத்தியில் சிக்குண்டுள்ள அப்பாவித் தமிழ் மக்களின் நிலை குறித்து இந்தியா, இணைத்தலைமை நாடுகள் உட்பட பிரித்தானியா, அமெரிக்காவும் விஷேடமாக பாப்பரசரும் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று மட்டக்களப்பு திருகோணமலை ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வன்னியில் அப்பாவித் தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வைத்திய வசதிகள் வழங்கப்பட வேண்டும். மக்களின் துயரங்கள் களையப்பட வேண்டும். அதற்காக தற்காலிகமாகவாவது போர் நிறுத்தப்பட வேண்டும் என்று அழுத்தங்கள் கொடுத்தும் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் மக்கள் துயரங்கள் நீண்டு கொண்டே போகின்றன.

இதனால், பொதுமக்கள் மட்டுமல்லாது இலங்கையின் இளம் சந்ததியினர் அழிந்து கொண்டே போகின்றனர். தமிழர், சிங்களவர் உட்பட இந்த நிலை நீண்டு கொண்டு போகுமாக இருந்தால் இலங்கையின் வருங்கால சமுதாயத்திற்கு ஒரு கறை படிந்த சரித்திரத்தை ஏற்படுத்திய பொறுப்பை இன்று இந்த நாட்டை ஆளுகின்ற அரசாங்கம் உட்பட சகலரும் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.

உண்மையை ஏற்க மறுப்பதும் பொறுப்புள்ளவர்கள் பேசுவதை நசுக்குவதும் மனித சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ள முடியாததொன்றாகும்.

ஒரு நாட்டில் அதன் சுதந்திர தினம் மிகவும் முக்கியமான தினம்.அத்தினத்திலேயே வன்னி மக்கள் இரத்தம் சிந்தினார்கள் என்றால் இதைவிட மோசமான விடயம் வேறு எதுவுமாக இருக்க முடியாது. இது நிச்சயமாக கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும். மக்கள் தாங்கள் எங்கு வாழவேண்டும் என்பதனைத் தீர்மானிக்கின்ற பொறுப்பு அவர்களைச் சார்ந்ததே. ஆகவே இவ் விடயத்தில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவது ஒரு பொறுப்பற்ற செயலாகும்.

யுத்தப் பிரதேச தகவலின் படி இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் ஈராயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காயப்பட்டிருப்பதாகவும் அறிகின்றோம். போர் நீடிக்குமானால் இத்தொகை நிச்சயமாகக் கூடும் என்பதில் ஐயமில்லை. ஆகவே இந்நிலை தொடராமல் வன்னித் தமிழ் மக்களின் துயர் நீங்க யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பும் தாமதமின்றி ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

மேலும், கிழக்கு மாகாணத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் போரினால் இடம்பெயர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் தற்காலிக முகாங்களில் வாழ்ந்து வருகிறார்கள். மூதூர், சம்பூர், குடும்பிமலை போன்ற பிரதேசங்களில் இவர்கள் கூடிய விரைவில் மீளக் குடியமர்த்தப்பட்டு உரிய கொடுப்பனவுகளும் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.