முல் லைத்தீவு வடகிழக்கு கடலில் புலிகளின் இரண்டு படகுகளை கடற்படையினர் நேற்றுக் காலை தாக்கியழித்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார். இந்த சம்பவத்தில் ஆறு புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் இரண்டு படகுகளும் கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கடற்படையின் அதிவேக தாக்குதல் படகான டோராவை பயன்படுத்தி நேற்றுக்காலை 6.30 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவத்தின் பின்னர் படையினர் கடற்பரப்பில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட ஆறு புலிகளில் இருவரின் சடலங்களை கண்டெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு கடற்பரப்பிற்கு வெளியில் செல்ல முற்பட்ட இரண்டு படகுகளும் முல்லைத்தீவுக்கு வடகிழக்கே 10 கடல் மைல் தொலைவில் வரும்வரை காத்திருந்த பாதுகாப்புப் படையினர் அந்த படகுகளை இலக்குவைத்து கடுமையாக தாக்குதல்களை நடத்தியுள்ளனர். புலிகள் எந்த விதத்திலும் தப்பிச் செல்ல முடியாத வகையிலும் அவர்கள் தாக்குதல்களை மேற்கொள்ள முடியாத நிலையிலும் கடற்படையினர் கடற்பரப்பில் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கொமாண்டர் தஸநாயக்க மேலும் தெரிவித்தார்.