2009

2009

சு.க. தேசிய மாநாடு எதிர்வரும் 15ம் திகதி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 15ம் திகதி கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் நடைபெ றும். பிற்பகல் மூன்று மணிக்கு ஆரம்ப மாகும் இந்த மாநாட்டிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்குவார்.

இந்த மாநாட்டில் அரசாங்கத்தின் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கான கொள்கை அறிக்கை வெளியிடப்படுவதோடு, தேர்த ல்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பும் வெளியிடப்படுமென சு. க வட்டாரங்கள் தெரிவித்தன. நாடு முழுவதிலுமிருந்து சு.க. கிளைகளின் பிரதிநிதிகள் சு.க அமைப்பாளர்கள், ஐ.ம.சு.மு.வில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள், பங்குபற்றுவார்கள்.

சு.க.வின் அழைப்பையேற்று பிரிட்டிஷ் கன்சர்வேட்டிக் கட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கு பற்றுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்களெனத் தெரியவருகிறது.

சிறையில் எம்தமிழினம்! : அழகி

IDPs_Cookingஇப்பொழுது புயலுடன் பூகம்பமும் சுனாமியும் சேர்ந்து எமது ஈழத்து மக்களை நிர்க்கதியாக்கி விட்டு சென்று விட்டது. இதிலிருந்து எமது இனத்தை எப்படியும் நாம் காப்பாற்றியாக வேண்டும். முதலில் நல்ல மனிதர்கள், மக்களின் மேல் இரக்கமுடையவர்கள், பண்புடையவர்கள், நன்றியுணர்வுடையவர்கள் முன்வந்து தலைமை ஏற்று இந்த முட்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டுக்கிடக்கும் எமது சமுதாயத்தை காப்பாற்ற வேண்டும். சிங்கள இராணுவமும் இலங்கையின் இனத்துவேசமிக்க, அரசியல் தலைமைகளாலும் எமது இனம் கொஞ்சம் கொஞ்சமாக கொன்றொழிக்கப்பட்டு கொண்டு திட்மிட்டு உருத்தெரியாமல் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏவ்வகையான துரோகங்களை எமது மக்களுக்கு செய்கிறார்கள் என்பதையிட்டு நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

மக்களை பசி பட்டினி போட்டு சிந்திக்கும் ஆற்றலை மழுங்கடிக்கிறார்கள். ஒரு இடத்தில் நிம்மதியாக இருக்க விடாமல் செய்கிறார்கள். குடிப்பதற்கு தண்ணீர் ஒழுங்காக கொடுக்கிறார்கள் இல்லை. இளம் குழந்தைகளுக்கு போதிய உணவு வழங்குவதில்லை. பலரை கைது செய்து விசாரணை இல்லாமல் கொன்றொழித்து கொண்டிருக்கிறார்கள். இளம் பெண்களை இரகசியமாக நடு ராத்திரியில் வலுக்கட்டாயமாக கைது செய்து வல்லுறவுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமக்கு நேரும் கொடுமைகளை பெண்களோ ஏனையவர்களோ வெளிப்படுத்தும் தைரியம் அற்றவர்களாக நாள் தோறும் மனதுள் அடக்கி குமுறிக் கொண்டிருக்கிறார்கள். புலியின் கொடுமைகளுக்குள் முடங்கி வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மக்கள் அதற்கு ஈடான அரசின் அடக்குமுறைகளை முகம் கொடுத்து எதிர்க்க தைரியமற்றவர்களாக ஆக்கப்பட்டு விட்டனர். இவர்களைக் காக்க நாம் ஏதேனும் முயற்சிகள் செய்தோமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

பிரபாகரன் என்ற தனிமனிதன் இலங்கை ராணுவத்தின் இரும்பு பிடியில் சிக்கி தனது மரணத்தை எண்ணிக் கொண்டிருந்த வேளையில் குறிப்பாக லண்டனில் உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள் என பல மாதங்களாக புலம்பெயர் தமிழர்கள் கொதித்தெழுந்து கொண்டிருந்தார்கள். இதற்கு தமிழ் தொலைக்காட்சிகளும் இருபத்தி நாலு மணிநேரமும் துணை நின்றன. இந்த போராட்டங்களில் புலியை தீவிரமாக எதிர்த்த நபர்களும் பங்கு பற்றினார்கள். சுhதாரண குடும்ப பெண்களும் கலந்து கொண்டார்கள். ஆனால் மூன்று லட்சம் மக்கள் சிங்கள அரசினாலும் அதன் ராணுவத்தாலும் மக்களின் சொந்த நிலத்தில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டு மிருகங்கள் போல் முட்கம்பி வேலிக்குள் முடக்கப்பட்ட போது இந்த தருணத்தில் எந்தவொரு உண்ணாவிரதமோ ஆர்ப்பாட்டமோ ஐரோப்பாவில் நிகழவில்லை. மக்களுக்காக போராடுகிறோம் மக்களுக்காக கலந்து கொள்கிறோம் என பதிலிறுத்தவர்கள் மௌனமாகினர். ஏன்? தமிழ் மக்களே இப்போதாவது நீங்கள் எல்லாம் புரிந்து கொண்டீர்களா? இந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் ஏன் செய்தார்கள்? லண்டனில் இரண்டு லட்சம் தமிழர்கள் தாங்கள் பெரிய சாணக்கியர்கள்- நாங்கள் தெருவில் இறங்கினால் நாம் நினைப்பது நடக்கும் தானே என மிகவும் தேர்ந்த அரசியல் உணர்வாளர்களாய் எண்ணிக் கொண்டு தெருக்களில் நின்றார்கள். ஏன் என்பதை இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள்.

எமது மக்கள் மழை, வெயில், பனி என்று பாராது திறந்த வெளி சிறையினில் அடிப்படை வசதிகள் கூட இன்றி அல்லல்படுகிறார்களே. ஆவற்றை மிகவும் இராஜதந்திர நோக்குடன் மிக நுண்ணியமாக செயற்பட்டு தீர்ப்பதற்கு யார் முன்வந்தார்கள்.? ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.? குரங்கில் இருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்று எத்தனையோ யுகங்கள் கடந்து விட்டன. ஏன் இப்போதும் குரங்கின் புத்தியுடன் சுகபோகமாக வாழ்வதற்கு மற்றவர்களின் குருதியை தேடுகிறீர்கள். கூட்டமைப்பு சிறீகாந்தா வன்னியில் யுத்தத்தை நிறுத்த முற்பட்டிருந்தால் அது புலம்பெயந்தவர்களுக்கு அவமானமாகி போயிருக்கும் என பேட்டி கொடுக்கிறார்.

துடிக்கத் துடிக்க மக்கள் கொல்லப்படுவதைக் கண்டு ஒரு கணமேனும் உங்கள் மனங்கள் பதைபதைக்கவில்லை என்றால் யுத்தம் முடிந்து புலியின் பக்கமாகவோ அரசின் பக்கமாகவோ கிடைக்கப் போகிற சொகுசு வாழ்க்கைகாகவா காத்திருந்தீர்கள். கூட்டமைப்பு இதுவரை மக்களின் பெயரால் பெற்ற சம்பளம் எவ்வளவு.? இந்த சம்பளம் அவர்கள் படித்து பட்டம் பெற்று வேலை செய்ததற்காகவா கிடைத்தது? மக்களின் பிரதிநிதிகள் என்ற போர்வையில் தானே சுகபோகம் அனுபவிக்கிறார்கள். இவர்கள் தமது சம்பளத்தின் எத்தனை வீதத்தை இந்த நாதி இழந்த மக்களுக்கு கிள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். தங்கள் எம்பி பதவியை குறிப்பிட்ட காலங்கள் வரையில் தக்கவைத்து விட்டால் அதன்பிறகு வாழ்நாள் முழுதும் கிடைக்கப் போகின்ற அரச சலுகைகளுக்காகவும் தமது குழந்தை குட்டிகளுக்காகவும் வன்னிமக்களின் குருதியில் நீச்சலடித்த வெட்கங் கெட்ட இந்த கூட்டமைப்பு முதலில் அரசியலை விட்டு இனி வெயியேற வேண்டும். பணம் பதவிக்காக ஏன் தமிழினத்தை விற்கிறீர்கள்.

தமிழ் ஈழ மக்களே! இப்பொழுது மிகவும் நொந்து இருக்கிறீர்கள். உங்களுக்கு அறிவுரை கூற முடியாது. ஆனாலும் எச்சரிக்கையாய் சொல்கிறேன். இன்றைக்கு இருபத்தைந்து வருடங்களின் முன்பு இயக்கங்களின் தலைவர்கள் செய்த படுபாதகமான கொடூரங்களை நாம் பிரசுரமாக 1985 ம் ஆண்டு வெளிக் கொண்டு வந்தோம். அன்று நாம் புலிகளாகிய சுக்கிளா, ரவி போன்ற ஈன இரக்கமில்லா கொலைகாரர்களால் அச்சுறுத்தப்பட்டு நாட்டை விட்டு விரட்டப்பட்டோம். ஊண் உறக்கமின்றி, இரவு பகல், நேரம், காலம் என பார்க்காமல் விடுதலைக்காய்  முழு மூச்சாய் நேர்மையாக உழைத்தவர்கள் அனைவரையும் இந்த கொலை வெறியர்கள் அடியோடு சாய்த்து மண்ணோடு மண்ணாக்கி விட்டார்கள்.  கிழக்கு மாகாணத்தின் விடிவெள்ளியாகி விட்ட கருணா செய்த கொடூரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு கணமேனும் கள்ளம் கபடமின்றி சிரிக்க முடியாத இந்த கருணாவை பிரபாகரனை எப்படி வெறுத்து ஒதுக்குகிறீர்களோ அப்படியே வெறுத்து ஒதுக்குங்கள். கருணா செய்த கொலைகளையும், கொள்ளைகளையும், பாலியல் வல்லுறவுகளையும் வெளியே விடுங்கள்.

எம்மையெல்லாம் முள்வேலிக் கம்பிகளுக்குள்ளும், அன்னிய தேசங்களிலும், ஆழ்கடலுக்குள்ளும் தள்ளியது போதாது என்று மீண்டும் எம்மை அழித்து இன்னொரு முள்ளிவாய்க்காலுக்கு தயார்படுத்த வேலை தொடங்கியுள்ளார்கள். நாடு கடந்த தமிழ் ஈழம் வட்டுக் கோட்டை தீர்மானம் என வரிந்து கட்டிக் கொண்டு புறப்படடுள்ள இந்த பேரவைகாரர்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகிறேன்.

யார் இவர்கள்.? ஏப்படி இந்த தமிழர் பேரவையை உருவாக்கினார்கள்.? ஏவ்வளவு மக்கள் இவர்களை தேர்ந்தெடுத்தார்கள்.? என்ன சேவை செய்ததற்காக தேர்ந்தெடுத்தார்கள்.? இவர்களின் பின்னணி என்ன.? இவர்களை மேலும் கேட்கிறேன்.

1)நீங்கள் ஒவ்வொருவரும் யார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.!

2)உங்களின் சமுதாய பின்னணி கடந்த காலம் முழுவதும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதையும் தெரியப்படுத்துங்கள்!.

3)உங்களது பொருளாதார பலம் என்ன. உங்கள் சொந்த உழைப்பில் எவ்வளவு எம் இனத்திற்காக செலவழித்திருக்கிறீர்கள்.!

4)இளமைக் காலத்தில் உங்களது சமுதாயச் செயற்பாடுகள் என்ன என்பதையும் தெரியப்படுத்துங்கள்.

தமிழ் மக்களே! இப்படியே நாம் தொடர்ந்தும் மௌனமாக இருந்தோமானால் மேலும் பல கொடியவர்கள் எமக்கு தலைவனாக தோன்றி மிச்சம் மீதி இருக்கின்ற எம் இனத்தை கூண்டோடு அழித்து விடுவார்கள். மிகவும் எச்சரிக்கையோடு இருங்கள். மனிதன் எப்போதும் போராடிக் கொண்டுதான் இருக்க வேண்டும். ஆனால் சரியான நல்ல வழிமுறைகளைப் பின்பற்றி எமது சமுதாயத்தை மற்றவர்கள் வெறுக்காதபடி போராட வேண்டும்.

உலக தமிழனமே எமது தேசத்தில் இவ்வளவு கொடூரமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கையில் 25 கிலோ மீற்றருக்கு அப்பால் இருக்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளையும் மக்களையும் வேறுபடுத்தி முதலில் நாம் இனம்காண வேண்டும். கோடிக்கணக்கான பணத்தை வைத்துக் கொண்டு, தள்ளாடும் வயதில் இன்னமும் அரசியலில் வெல்வதற்காக எமது மக்களை அடகுவைத்தவர்ளை முதலில் தூக்கி எறியுங்கள்.

எமது போராட்டம் அதற்கான தீர்வுகள் என்பவற்றை நாம்தான் பெற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்களை நம்பி மீண்டும் எனது இன மக்களை இன்னொரு தடவை பீரங்கிக் குண்டுகளுக்கும், செல்லடிகளுக்கும் இரை கொடுக்கும் நிலைக்கு உட்படுத்தாதீர்கள். வன்னி மக்களுக்கு உதவ விரும்பினால் ஒவ்வொருவரும் உங்கள் சொந்தங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஊடாக முயலுங்கள். அதை விடுத்து இங்கு வரும் உண்டியல்காரரிடமும் அரசியலில் நண்பன் யார்? பகைவன் யார்? என்ற அரிச்சுவடியே தெரியாத ஞான சூனியங்களிடமும் ஏமாறாதீர்கள்!

30 வருடங்களின் பின் சுதந்திர சிவில் நிர்வாகம். முல்லைத்தீவு அரசாங்க அதிபர் இமெல்டா கூறுகிறார்

imalda.jpgவன்னியில் முப்பது வருட காலத்திற்குப் பின்னர் முழுமையான சிவில் நிர்வாகத்தை சுதந்திரமாக நடைமுறைப்படுத்தும் சூழல் உருவாகியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார்  தெரிவித்துள்ளார்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்கள் மீள்குடியேற்றம் மேற் கொள்ளப்பட்டுள்ள அதேநேரம் சிவில் நிர்வாகம் எதுவிதமான தலையீடுகளுமின்றி முழுமையாகத் தமது கட்டுப்பாட்டின்கீழ் நடைமுறைப்படுத்தப்படுவதாக அரச அதிபர் தெரிவித்துள்ளார்

இதன் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் ஆணித்தரமான இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்

இதற்கேற்ப இராணுவத்தினருக்குத் தாம் வழிகாட்டல்களை தெரிவித்துள்ளார் வழங்குவதாகக் கூறிய அரச அதிபர் அவர்கள், பாதுகாப்புக் கடமைகளை மாத்திரமே மேற்கொள்வதாகக் கூறியுள்ளார்.

வன்னியில் முன்பு சிவில் நிர்வாகத்தை மேற்கொள்கின்றபோது புலிகள் இடையூறு விளைவித்ததாகக் குறிப்பிட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா புலிகளின் அனுமதிபெற்றே எதனையும் செயற்படுத்த வேண்டுமென வலியுறுத்துவார்கள் என்றும் அவ்வாறு இல்லாவிட்டால், புலி உறுப்பினர்கள் வந்து வீண் தலையீடுகளைச் செய்வார்களென்றும் தெரிவித்துள்ளார்.

30 வருடகாலமாக அரச நிர்வாகத்தைப் புலிகள் சீர்குலைத்தார்களென்றும் தனது நிர்வாக செயற்பாட்டுக்கு நெருக்குவாரங்களை ஏற்படுத்தினார்களென்றும் கூறிய அவர், புலிகள் என்னை அச்சுறுத்தவில்லை. ஏனெனில் அரசாங்கம் வழங்கிய உணவுப் பொருள்களிலேயே அவர்கள் தங்கியிருந்தார்கள். அதேநேரம், மக்கள் என்னோடு இருந்தார்கள். அதனால் புலிகள் என்னை அச்சுறுத்தவில்லை என்று குறிப்பிட்டார். இதேவேளை, யோகபுரம் தமிழ் மகா வித்தியாலயம் நாளைய தினம் மீண்டும் திறக்கப்படுவதாக அரச அதிபர் கூறினார். மல்லாவி மத்திய கல்லூரியை மீளத் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்

முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் 19 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் மக்கள் மீளக்குடியமர்த்தப் பட்டுள்ளனர். நிவாரணக் கிராமங்களிலிருந்து 90% மக்கள் வெளியேறி சொந்த வாழ்விடம் திரும்பியுள்ளனர். அதேபோல் 60% சொந்த இடங்களில் குடியேறியுள்ளதுடன் உறவினர், நண்பர்களின் வீடுகளில் உள்ள மேலும் 40% மக்கள் மீளக் குடியமர உள்ளனர் என்றும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்

மக்கள் மீள்குடியேறிய பகுதிகளில் சுகாதாரத்துறை, கிராம சேவை அலுவலகம், பிரதேச செயலகம், கல்வித்துறை அலுவலகங்கள் தமது பணிகளை ஆரம்பித்துள்ளன. மக்களின் அன்றாடத் தேவைகளை இலகுவில் நிறைவேற்றிக் கொள்ளும்பொரு ட்டு உள்ளகப் போக்குவரத்துச் சேவைகளை நடத்தவும் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அரச அதிபர் கூறியுள்ளார்

இது தொடர்பான விபரங்களை ஜனாதிபதி செயலகத்துக்குப் பெற்றுக்கொடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பஸ் சேவைகளை மேற்கொள்வது பற்றி யாழ்ப்பாணம் சாலைக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். பஸ் சேவைக்கான பாதுகாப்பு அனுமதியைப் பெற்றுக்கொடுக்க வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

துணுக்காய், மாந்தை கிழக்கு கிளிநொச்சி மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் மேற்குப் பகுதி, ஜயபுரம், பூநகரி, முழங்காவில், நாச்சிக்குடா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் 22ஆம் திகதி மீள் குடியேற்றம் ஆரம்பமாகின.

நாடுகடந்த தமிழ்ஈழம் நாட்டுக்கொரு தமிழ்ஈழம்: குலன்

headlss_chickens_competitionஅத்திவாரம் போட்டு கோட்டைகட்டிய பின்னரே கோபுரம் வைப்பார்கள். அத்திவாரங்கள் சரியாக இல்லாமல் கட்டி எழுப்பப்பட்ட கோட்டையால் எட்டித்தட்டியவுடனேயே அத்திவாரமே ஆடி கொட்டுப்பட்டுப் போனது புலிக்கோட்டை. அத்திவாரமாக நின்று கோட்டையைத் தாங்கிக்கொள்ள வேண்டிய மக்கள் சரிவரகட்டி எழுப்பப்படாது போனதாலும், நிலத்தின் பண்பு புரியாமல் சூழல் அறியாமல் சரியான அரசியல் ஆய்வின்றி, ஆயுதத்தில் மட்டும் மனநோய் கொண்டு அவசர அவசரமாகக் கட்டப்பட்டதால்தான் புலிக்கோட்டை அழிந்தது என்பதை இன்னும் உணராமல், இன்றும் புலம்பெயர் தமிழர்கள் சிலர் வட்டுக்கோட்டையையும், தட்டுப்பட்ட புலிக் கோட்டையையும் கொண்டு நாடுகடந்த நாடுகடக்கா தமிழ்ஈழம் எனத்தடி கொடுத்து ஓடுகிறார்கள். செம்மறியாட்டுக் கூட்டம் போல் முன்னுக்குப் போகும் செம்மறி கத்திக் கொண்டு ஓட பின்னால் கத்திக் கொண்டோடி துப்பாக்கிகளால் மந்தைகளாக்கப்பட்ட எம்மக்கள் புலிக்கோட்டை அழிந்த பின்பாவது சுயமூளையில் சிந்திப்பார்களா?

1976ல் வட்டுக்கோட்டையில் அத்திவாரம் போட்டு மகாநாடாய் சுழிபுரத்தில் கோட்டை அமைத்து கூட்டணி கோபுரமானது. அன்று கலசங்களாக இருந்த கூட்டணித் தலைவர்கள் ஒலித்தார்கள். இன்று எம்மக்களை ஒழித்தார்கள். இக்கூட்டணி தொடர்ந்து தானே கோபுரக் கலசமாக இருக்க வேண்டும் என்பதற்காக சொன்னபடி எதையும் செய்யாமல் இருக்க கோட் டையைப் பிடிக்க இளைஞர்கள் படையெடுத்து, ஒன்றை ஒன்று கொன்று தின்று, வட்டுக் கோட்டை புலிக் கோட்டையானது. ஆனால் அது மக்கள் கோட்டையாக அமையவில்லை. இக் கோட்டைக்குக் கொத்தளமாகவும் அத்திவாரமாகவும் அமிழ்ந்து போய் இருந்தவர்கள் அப்பாவி எம்தமிழ்மக்களே.

கடும் காற்றுக்கு கதைசொல்ல முடியாத பிரபாகரன் எனும் தலைமைக் கலசத்துக்கு மட்டும் புலம்பெயர் மக்களால் ஆராதனைகள், அபிசேகங்கள், தோத்திரங்கள். அன்று மண்மீட்பு, என்று மக்களின் மனமீட்பு இன்றிப் புறப்பட்ட போர்வீரர்களும் அடிமண்ணாய் கிடந்த மக்களை கருத்தில் கொள்ளவில்லை, சிரத்தை எடுக்கவில்லை. அப்படி கரிசனைப்பட்டவர்கள் கூடச் சுடுகோல்களால் சுட்டுக் கருக்கப்பட்டார்கள். கருவே அழிந்தபின்பு எப்படிப் பிள்ளைப்பேறு என்பதுதானே முள்ளிவாய்கால் முடிவு. தலைபோனபின்பு அந்த வெற்றிடத்தை நிரப்ப தலைபோனவர்கள் ஓடித்திரிகிறார்கள். இன்னும் மண்ணாயும், மனிதராயும், கோட்டை, கோபுரங்களைத் தாங்கி நின்ற ஈழமக்கள் கருத்தை கவனத்தில் கொள்ளாது கடல்கடந்த கடக்கா ஈழம் என்று உடைந்து போன வட்டுக்கோட்டை எனும் கோட்டையைக் கட்டித் தட்டி எழுப்புவதை விட காலத்துக்கேற்றால்போல் கட்டக்கூடிய ஒரு சிறுகுடிசை ஒன்றையாவது சரியாகக் கட்ட முன்வருவார்களா? சரியாகத்தான் சிந்திப்பார்களா?

ஐரோப்பாவில் நாட்டுக்கு நாடு வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்து அவைகள், பேரவைகள் உருவாகின்றன. இப்பேரவைகள் (பேயவைகள்) அந்நாட்டிலுள்ள மக்களை பிரதிநிதித்துவப் படுத்துமாம், ஜனநாயகமுறையில் தேர்தல் வைப்பார்களாம், எல்லோரும் போய் வோட்டுப் போட வேண்டுமாம். எது ஜனநாயகம்? வோட்டுப் போடுவதுதான் ஜனநாயகமா? இப்படி ஒருதேர்தலை நடத்த நீங்கள் யார்? நாட்டில் அவதியுறும் மக்களைக் கருத்தில் கொள்ளாத இவர்கள் எமது மக்களை எப்படிப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும். எம்மைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு நீங்கள் யார்? இவர்களின் கொள்கை வட்டுக்கோட்டைத் தமிழீழம் தானாம். அப்படியென்றால் நாடுகடந்த தமிழீழம்? இது நாடு கடத்தப்பட்டதா? இது நாடுகடக்காத் தமிழ் ஈழமா?

புலிகள் இருந்தபோது அங்கிருந்தபடியே இங்குள்ள தமிழர்களைக் கட்டுப்படுத்தினார்களாம். இப்போ புலிபோனதும் புலம்பெயர் தமிழர்களுக்குக் கிலிபோய்விட்டதாம். இவர்களைக் கட்டுப்படுத்த ஒரு அமைப்புத் தேவையாம். இதனால்தான் அவைகள் பேரவைகள் கட்டுகிறார்களாம். இது உள்நாட்டு தமிழர்களையும், அரசியலையும் பிரதிநிதிப்படுத்துமாம். இது நாசனல் மற்றையது இன்ரநாசனலாம். இது ஒரு ஜனநாயக அமைப்பு என்று கட்டுபவர்கள் இப்படி ஒரு அமைப்பைக் கட்டுவதா? இல்லையா? என்று எந்தவாக்கெடுப்பும் நடத்தவில்லை. ஐரோப்பிய நாடுகளைப் பற்றியோ அரசியல் அமைப்புகள் சட்டங்கள் பற்றி எந்த அறிவும் இல்லாமல் ஊரிலிருந்தபடி புலம்பெயர் தமிழர்களை புலிகள் கட்டுப்படுத்தினார்கள் என்றால் புலம்பெயர்ந்தவர்கள் புலன் பெயர்ந்தவர்கள் தான். இதை உணர்ந்துதான் தமக்குத்தாமே மகுடம் சூடிக்கொண்டு புதிய அவைகள் துவையல்கள் வெளிவருகின்றன. இனிமேல் நாலுபேர் சேர்ந்து தேர்தல் நடத்தி 3வோட்டு விழுந்தால் 75சதவீத வெற்றி. நாமும் ஒரு அவைதிறந்து புதிய தேர்தல் நடத்துவோமா?

இந்த இருபகுதியினருக்கும் சில தில்லு முல்லுகள் உண்டு. யாரின் கீழ் யார் இயங்குவது என்று பிரச்சனையும் உண்டு. பேரவைகள் (பேராசைகள்) கடைசிகாலங்களில் பிரபாகரன் உயிருடன் இருக்கும் போது அவர்பின்னால் இருந்து சேர்ந்து குழிபறித்து புலம்பெயர் தமிழர்களின் பணங்களை தமதாக்கிய பெருவள்ளல்கள் எனலாம். இதை சிவசேகரமவர்கள் மிக அழகாகவும் தெளிவாகவும் கூறியிருக்கிறார். சுருங்கச் சொல்லின் புலம்பெயர் புண்ணாக்குகளின் புத்திகளைக் கழுவி பணருசிகண்ட பூனைகள் எனலாமே. இது உள்நாடுகளில் தமிழீழ அமைப்பாகவும் (லோக்கல்). மற்றையது நாடுகடந்த தமிழ்ஈழம் உலகரீதியான தமிழீழ அமைப்பாகவும் (இன்ரர்நாசனல்) இயங்குமாம். ஒன்று பிரபாகரனுடையது மற்றையது கேபியினுடையது என்று கூறுவது பொருந்துமோ? ஒன்று புலம்பெயர் தமிழர்களிடன் நேரடடியாகப் பணம் பிடுங்கியவர்கள், நாடுகடந்த தமிழீழத்தார் பிடுங்கியவர்களிடம் பிடுங்கியவர்கள்.

இவர்கள் தனித்தனியே கூட்டங்களை ஒழுங்கு செய்திருந்தார்கள். கூடுதலாக நாடுகடந்த தமிழீழத்தார் பிரபாகரன் உயிருடன் இருந்தபோது அமைப்பு மீறிய செயல்களில் ஈடுபட்டதால் பிரபாகரனால் அமைப்பை விட்டு விரட்டப்பட்டவர்கள் அல்லது நாட்டுக்கு அழைக்க ஒடி ஒழித்தவர்கள் என்கிறார்கள் நோர்வே தமிழர்கள். எது எப்படியோ எல்லோரும் தமிழர்களைத் திண்டவர்கள் தான். நோர்வே சென்றபோது இவர்களின் பின்புலங்களை அறிந்தபோது நோர்வே தமிழர்கள் பல சொன்னது நியாமாகவே தோன்றியது.

எதிர்வரும் 15ம்திகதி (நவம்பர் 15) நோர்வேயில் ஒரு குழு ஜனநாயகம் எனச்சொல்லிக் கொண்டு நோர்வே ஈழத்தமிழர் அவை எனப்பெயரிட்டுக் கொண்ட அமைப்பு நோர்வே தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த குழுஜனநாயகத் தேர்தல் ஒன்றை நடத்துகிறதாம். இதற்கான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு விட்டார்களாம். தமிழ்மக்கள் செறிந்து வாழும் நகரங்களில், மாநகரங்களில் தமிழர்களின் தொகைக்கேற்ப வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்களாம். தலைநகர் ஒஸ்லோவில் தேர்தலுக்கு நிற்பவர்கள் உங்கள் வோட்டுக்கள் எனக்கே, நானுன் ஊரவன் உன்வோட்டு எனக்குத்தான் என்று தொடங்கி விட்டார்களாம். இதன் பிரதிபலன்களாக ஊர்வாதம், குழுவாதம், சாதி, குலம் கோத்திரம் என்று ஒன்றாய் இருக்கும் மக்கள் சிதறிச் சின்னா பின்னமாகிப் போகப்போகிறார்கள். வோட்டுப்போடுவதும் பெரும்பான்மையும்தான் ஜனநாயகம் எனக்கருதினால் இலங்கை அரசாங்கம் சிறு ஆயுதம்தாங்கிய குழுக்களும் தாய்நாட்டில் செய்வது எந்தவிதத்திலும் பிழையாகாது. பெரும்பான்மைச் சிங்களவரின் பிரதிநிதியாக இருப்பவன் தன்னை தலைவனாக்கிய சமூகத்துக்கு நன்மை செய்வதும் தன்னை எதிர்த்தவர்களைப் பழிவாங்குவதும் நியாயமாகிறது. எம்சமூகங்களில் பழிவாங்கல் என்பது உதிரத்தில் ஊறிவிட்ட ஒன்றாக அமைந்ததால் தான் சகோதரப்படுகொலைகள் வகை தொகையின்றி நடந்தன.

இன்றும் கூட தமிழ் தலைவர்கள் இராஜபக்சவுக்கு அவர் மொழியிலேயே உணர்த்த வேண்டியது ஒன்று உள்ளது. இன்று அவர்வகிக்கும் பதவி தமிழ் மக்களாலேயே தரப்பட்டது என்பதையும், அந்த மக்கள்தான் இன்று வன்னியில் கம்பிவேலிக்குள் கன்னம் உரசுகிறார்கள் என்பதையும் சரியான முறையில் எடுத்துச் சொல்ல வேண்டிய நிலையும் நிலைப்பாடும் உள்ளது. கோட்டைக்கு ஆசைப்பட்டு குடிசையே இல்லாது போன நிலையைக் கண்ணால் கண்டும் திருந்த மாட்டேன் என்று அடம்பிடிப்பவர்கள் ஈழத்திலுள்ள கடைசித் தமிழனையும் கொன்று விட்டுத்தான் மீதி என்று எண்ணுகிறார்களோ என்னவோ?

ஐனநாயகம் என்பது தன்னை எதிர்த்து வோட்டுப் போட்டவர்களையும், சமூகத்தையும் பிரதிநிதிப்படுத்துபவனே சரியான ஜனநாயகவாதி. இது எம்நாடுகளில் எங்கே நடக்கிறது. இதையே வெளிநாடுகளில் ஜனநாயம் என்று தேர்தல் நடத்த முன்வருகிறார்கள் புலன்பெயர்ந்த தமிழர்கள். என் கணிப்பீட்டில் கீழத்தேய நாடுகளில் ஜனநாயகம் என்பது பெரும்பான்மைச் சர்வாதிகாரமே. திறமையான பொய் பித்தலாட்டங்களின் கூட்டமே.

நோர்வே ஈழத்தமிழர் அவையால் நடத்தப்படும் தேர்தல் பற்றி என் காதைக் கடித்த செய்திகள்
• தொடங்கிட்டாங்கப்பா தொடங்கிட்டாங்க குடுத்த காசுக்கே கணக்கு காட்டேல்லை வெளிக்கிட்டுட்டாங்கடா காசு சேர்க்க.
• குடுத்த காசை உடன் எடுக்கேலாது. பிடித்து விடுவார்கள் எல்லோ. வியாபாரத்தைத் தொடங்கினால் கணக்குக் காட்டலாம் தானே.
• தலைவர் உயிரோடை இருக்கேக்கை இவை எப்படி தேர்தல் நடத்த முடியும். தலைவர் ஆபிரிக்காவில் இருக்கிறார். வரும்போது வருவார். அப்பதெரியும் இவையின்ரை ஆட்டங்கள்.
• யாரிந்த நாடு கடந்த தமிழ் ஈழத்தார்? பதில் – முந்தி புலியிலை இருந்து கலைச்சு விடப்பட்டவையள், காசடித்துக் கொண்டு ஓடி ஒதுங்கியவை, ஊருக்குக் கூப்பிட்ட போது ஓடி ஒழிச்சவையும், உள்ளுக்கிருதே காட்டிக் கொடுத்தவையும் சேர்ந்து தான் நாடுகடந்த தமிழ்ஈழம் தொடங்கியிருக்கினம். உருத்திரகுமார் இவர்களுடன் தொலைக்காட்சியில் நேரடியாகப் பேசினவராம் கேள்விப்பட்டீர்களோ?
• அப்ப நீங்கள் எதுக்கு சப்போட்? அண்டைக்கும் குளப்பினாங்கப்பா, இப்பவும் குளப்புகிறானுகளப்பா? கண்டறியாத தமிழ்ஈழமும் நீங்களும். இங்சை வந்தனீங்கள் வாழ்ந்து போட்டுப் போங்கோவன்.
• ஊரிலை எல்லாம் வெறுமையாப் போச்சு இஞ்சை இருந்தாவது போராடவேணும் தானே.
• முகிலமும் நெடியவனும் பிரச்சனையோடை ஒழிச்சிட்டாங்கள். இருக்கிற சனத்தைக் கொண்டிழுக்க யாராவது வேணும் தானே எண்டுதான் பேரவை துவங்கியிருக்கினம்.
• அங்கை மக்களாலை போராட ஏலாது நாங்கள் தான் இஞ்சை இருந்து ஏதாவது செய்ய வேணும். (ஏன் தமிழீழம் வாங்கி அனுப்பப் போறியளோ?)
• வெளிநாட்டிலை இருக்கிற தமிழர்களுக்குத் தான் அரசாங்கம் பயப்படுது. நாங்கள் ஒன்று சேருவது முக்கியமெல்லே (இரண்டாய் பிரிந்து நிற்கிறீர்கள் எப்படி ஒன்றாகிறதைப் பற்றிக் கதைக்கிறீர்கள்).
• இரண்டு பகுதியும் வட்டுக்கோட்டையைத்தான் கொண்டு திரியினம். அதை வைச்சு எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறாங்களோ? இதுக்கிள்ளை யார் யாருக்குள்ளை வேலை செய்யுறது எண்டதுதான் பிரச்சனை.
• திரும்பவும் அடிபடப்போறாங்கடா சாமி.
• நாளைக்கு எல்லாத் தமிழர்களும் எங்களுக்குத்தான் வோட்டுப் போட்டவை எண்டு நோர்வே அரசாங்கத்திடம் சுத்தப் போறாங்கடா டோய்.
• புலியின்ர காலத்திலேயே தமிழீழத்தில வீடு வாங்காமல் கொழும்பில வீடு வாங்கினாங்கள். தமிழீழம் கிடைக்காதெண்டு அப்பவே உவங்களுக்குத் தெரியும்தானே? இப்ப புலி செத்தபிறகு நாடுகடந்த தமிழீழம் எண்டுசொல்லி இனி எந்தநாட்டில வீடுவாங்கப் போறாங்களோ தெரியாது.
• தலைவர் போனதாலை எல்லாரும் தாங்கள் தாங்கள் தலைவரா நிக்கிறாங்கள்.
• தலைவர் போனதாலைதான் இந்தத் தலையிடியள் தொடங்கியிருக்கிறாங்கள்.
• அன்னை பூபதி பள்ளிகூடம் என்னமாதிரி அண்ணை? எல்லாரிட்டையும் காசுவாங்கித் தானே கட்டிடம் வாங்கினவங்கள். படிப்பறிவில்லாதவையும் படிப்பிக்கினம். நடிப்பு மட்டும் ஏதோ கிராயுவேட் பண்ணின மாதிரி. கோடிக்க ணக்கிலை வாங்கின வங்கள். உது ஆற்றை பேரிலை கிடக்குது, நடக்குது? வேதாளம் பார்த்த வெங்காயங்கள் யார் கேக்கப் போகிறாங்கள்.
• மற்றவங்களின்ரை காசிலை தின்னப் பழகிட்டாங்கள் விடுவாங்களோ.

இப்படி இன்னும் இன்னும் எத்தனையோ…….!!!!!!!

சர்வதேச நாணய நிதியம் 329.4 மில். அமெ. டொலர் கடன் வழங்கத் தீர்மானம்

images-ims.jpgஇலங் கையின் பொருளாதாரத்தை மீளமைக்கும் பொருட்டு தமது இரண்டாம் கட்ட நிதியுதவியை வழங்க சர்வதேச நாணய நிதியம் தீர்மனித்துள்ளது. இது தொடர்பான அறிவித்தல் நேற்று வாஷிங்டனில் வெளியாகியுள்ளது.

இதன்படி இலங்கைக்கு 329 .4 மில்லியன் டொலர் நிதி உதவி கிடைக்கவுள்ளது. நிலையான இரண்டாம் கட்ட கடன்தொகை ஏற்பாடான 658.8 மில்லியன் டொலரின் கீழேயே இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாக, சர்வதேச நாணய நிதியத்தின் உதவி முகாமைப் பணிப்பாளர், டொகாடோசி காடோ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அண்மைக்கால பொருளாதார வளர்ச்சிப் போக்கு திருப்திகரமாக உள்ளது. அவசியமான மீளமைப்பு திட்டங்கள் உரிய வகையில் பின்பற்றப்பட்டுள்ளன. இதன் அடிப்படையிலேயே இந்த தொகையை வழங்கத் தாம் இணங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று ஈஸ்ட்ஹாமில் ஈழத்து நூல்களின் கண்காட்சி

காற்றுவெளி சஞ்சிகை ஆதரவில் நூல் அறிமுகமும் ஈழத்து தமிழ் நூல்களின் கண்காட்சி இன்று சனிக்கிழமை 7ம் திகதி பிற்பகல் 3 மணிக்கு றினிட்டி சென்ரரில் நடைபெறவுள்ளது.

Trinity Centre
East Avenue
Eastham
London
E12 6SG
(Eastham Tube Stationற்கு அருகாமையில்)

தொடர்புகட்கு: கவிஞர் முல்லை அமுதன்
0208 586 7783

மீள்குடியேற்ற பகுதிகளுக்கு தபால் சேவை விஸ்தரிப்பு

141009post-box.jpgவன்னிப் பிரதேசத்தில் யோகபுரம், துணுக்காய் ஆகிய இடங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தபால் அலுவலகம் செயல்பட தொடங்கும் என வடபிராந்திய பிரதி அஞ்சல் மா அதிபதி வீ. குமரகுருபரன் தெரிவித்தார்.

மீள்குடியேறிய மக்களுக்கு சேவைகள் வழங்கும் நோக்குடன் தபால் சேவைகள் விஸ்தரிக்கப்படுகின்றது. அடுத்த கட்டமாக மாங்குளம், கிளிநொச்சி பிரதேசங்களிலும் தபால் சேவைகள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

வடக்கு வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் நான்கு தபால் அலுவலகங்கள் நவீன முறையில் புதிதாக நிர்மாணிக்கப் படவுள்ளன. இதற்கு 160 மில்லியன் ரூபா தேவைப்படுமென மதிப்பிடப் பட்டுள்ளது.

அவசரகால சட்டம் 78 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

parliament.jpgஅவசர காலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் 78 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக 95 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் கிடைத்தன.

பிதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை சமர்ப் பித்துப் பேசினார். தேசிய கூட்டமைப்பு,  மு.கா. எம்.பிக்கள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.

ஐ.தே.க., ஜே.வி.பியினர் சபையில் இருக்கவில்லை. பாராளுமன்றம் இம் மாதம் 17 இல் மீண்டும் கூடும்.

தெ.மா.சபை உறுப்பினர் நிசாந்த கைது

220909southern_province.jpgதென் மாகாண சபை உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

காலி மஜிஸ்திரேட் நேற்று பிறப்பித்த பிடிவிறாந்து உத்தரவுக்கமைய இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

மாகாண சபைத் தேர்தலின் போது அதிகாரிகளுடன் முறைகேடாக நடந்தாரென்ற குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இலங்கைக்கு கண்ணிவெடி அகற்றும் இயந்திரங்களை வழங்கியுள்ளது ஐ.நா.அகதிகள் நிறுவனம்

0000deminingmachine.jpgஇலங் கையின் வடக்கே முன்னாள் யுத்தப் பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் பயன்படுத்துவதற்காக 5 புதிய இயந்திரங்களை ஐ.நா. அகதிகள் நிறுவனம் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளது.

ஐ.நா. மன்ற நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் வெளியூர் தன்னார்வ நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கம் கண்ணி வெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டுவருகிறது.

ஐ.நா. அகதிகள் நிறுவனம் வழங்கும் புதிய இயந்திரங்கள் இலங்கை அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் என லண்டனிலுள்ள ஐ.நா. அகதிகள் நிறுவனத்தின் அயல் விவகார மூத்த அதிகாரி பீட்டர் க்ரெஸ்லர் தெரிவித்துள்ளார்.