2009

2009

வட பகுதி முழுமையாக மீட்கப்பட்டு விரைவில் மக்களிடம் ஒப்படைக்கப்படும் – ஜனாதிபதி

pr-tam-deli.jpgவடபகுதி முழுமையாக மீட்கப்பட்டு விரைவில் அங்குள்ள மக்களிடம் ஒப்படை க்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திலிருந்து மீட்கப்பட்ட பகுதியில் மிதி வெடி மற்றும் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு சிவில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் அம்மக்கள் தமது சொந்த இடங்களில் விரைவாகக் குடியேற நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் நிலைமைகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தையொன்றை நடத்துவதற்கென தமிழ்க் கட்சிகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே ஜனாதிபதியினால் இச்சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததென ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இங்கு கருத்துத் தெரிவித்த தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள்; பிரபாகரனின் பயங்கரவாத நடவடிக்கைகளால் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தனர். அதனைக் கவனத்திற் கொண்ட ஜனாதிபதி, மீட்கப்பட்டுள்ள மக்கள் புலிகளின் நடவடிக்கைகளினால் உள ரீதியான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

அந் நிலையிலிருந்து அவர்களை மீட்கும் வகையில் தமிழ்க்கட்சிப் பிரதிநிதிகள் அப்பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சகோதர மக்களின் பிரச்சினைகளைக் கண்டறிய தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பினை தாம் உணர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு சகல தமிழ்க் கட்சிகளினதும் ஒத்துழைப்பு தமக்குக் கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சர்வதேச ரீதியில் எழும் சவால்களுக்கு இணைந்த பலத்துடன் முகங்கொடுத்த சகோதர மக்களைப் பாதுகாத்து அவர்களை நிரந்தர இடங்களில் மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகளில் இணைந்து செயற்பட வருமாறும் ஜனாதிபதி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அப்பாவி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலேயே சர்வதேச சமூகம் அக்கறை கொள்ள வேண்டுமே தவிர பயங்கரவாதிகளைப் பலப்படுத்துவதிலல்ல எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். கடந்த 30 வருட காலமாக வடக்கு தமிழ் மக்கள் அனுபவித்துவரும் துன்பங்களைத் தாம் அறிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அம்மக்கள் மீளக் குடியமர்த்தப்படும் இடங்களில் அவர்கள் மீண்டும் அவ்வாறான சிக்கல்களுக்கு முகங்கொடுக்க இடமளிக்க மாட்டோமெனவும் தெரிவித்துள்ளார்.

வடக்கில் நகர்ப்பகுதிகள் மட்டுமன்றி கிராமியப் பிரதேசங்களின் வீதி, மின்சாரம், போக்குவரத்து, சுகாதாரம் உட்பட சகல வசதிகளையும் பெற்றுக் கொடுத்து விரைவில் அம்மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார். இந்நடவடிக்கைகளில் தமிழ்க் கட்சிகளின் ஆலோசனைகள் பெறப்பட்டு அதில் கவனம் செலுத்தப்பட்டு எதிர்கால நடவடிக்கைகள் திட்டமிடப்படுமென தெரிவித்த ஜனாதிபதி எச்சந்தர்ப்பதிலும் எக்காரணத்திற்காகவும் பயங்கரவாதிகளுக்கு எத்தகைய ஆதரவும் வழங்கக்கூடாதெனவும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாரில்லை : அரசாங்கம் அறிவிப்பு

sri_sri_ravi_shanka.jpgஇலங்கை யுத்த விவகாரத்தில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என வாழும் கலைப் பயிற்சி நிலையத்தின் ஸ்தாபகத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் விடுத்திருந்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் இலங்கைப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேசத் தயாராக இல்லை என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என உயர் அரசாங்க அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். வாழும் கலைப் பயிற்சி நிறுவனம் மக்கள் மனதில் பிழையான கருத்துக்களை ஏற்படுத்தக் கூடாது என அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

வாழும் கலைப்பயிற்சியின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஒரு தடவை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஒருபோதும் யுத்த நிறுத்தமொன்றுக்கு செல்லத் தயாரில்லை என ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

யுத்த நிறுத்தமொன்றை ஏற்படுத்த மத்தியஸ்தம் வகிக்குமாறு ரவிசங்கரிடம் விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

‘ஐ.நா. செய்மதிப் படங்களும், கருத்துக்களும் பக்கச்சார்பானதும் ஊர்ஜிதமற்றதுமாகும்’ – நீல் பூனே

_sri_lanka_sat_any.gifபாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் சிவிலியன்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டிருந்த ஐ. நா. செய்மதிப்படங்களும், அவை குறித்த கருத்துகளும் பக்கச் சார்பானவையும் ஊர்ஜிதம் செய்யப்பட முடியாதவையெனவும் ஐ. நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியும் மனிதாபிமான இணைப்பாளருமான நீல் பூனே தெரிவித்துள்ளார். அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கு கடந்த 04 ஆம் திகதி நீல் பூனே எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ. நா. செய்மதியினால் வெளியிடப்பட்டிருக்கும் படங்களையும் அதன் விவரணங்களையும் ஊடகங்களுக்கு வெளியிடுவதற்கு தான் அனுமதி வழங்கவில்லையெனவும் அவை ‘ஐ. நா. வின் தேடல்’ என தவறாக அர்த்தம் கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டிருப்பதாகவும் பூனே கூறியுள்ளார். அவரது கருத்துப்படி மேற்படி படங்களும் அதன் விவரணங்களும்  தொழில்நுட்ப ரீதியாக ஏற்பட்ட பிழையினால் இரகசிய குறியீடுகள் பாதுகாக்கப்படாமையினாலேயே பொது மக்களை சென்றடைந்துள்ளன எனவும் பூனே குறிப்பிட்டுள்ளார். பூனே அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது :-

‘பலருக்கும் தகவல் மூலமாகவிருக்கும் செய்மதிப் படங்கள் மூலம் எந்த சந்தர்ப்பத்திலும் ஐ. நாவுக்கான முழு விவரங்களையும் பெற்றுக்கொள்ளலாம். அவை ஐ. நா. செயலாளர் நாயகம் அல்லது சிரேஷ்ட உறுப்பினர்களின் அனுமதியுடனேயே பெறப்படும். இதேவேளை, ஊடகவியலாளர்கள் இதுதொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு யூ. என். ஓசட் வெளியிட்டுள்ள கருத்துக்கள் பக்கச்சார்பானவை.

செய்மதியின் தரவுகள் உண்மையானவையா என உறுதிப்படுத்துவதற்கு அந்நாட்டிலிருந்து வெளியாகும் தரவுகளுடன் அவற்றை ஒப்பீட்டுப் பார்க்க வேண்டும். இந்த விடயத்தில் அவ்வாறு செய்யப்பட்டிருக்கவில்லை. கடந்த வாரம் ஊடகங்களில் வெளியாகியிருந்த மேற்படி படங்களை கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதியன்றே நான் பார்வையிட்டேன்.

யூ. என். ஓசட் இப்படங்களையும் இது தொடர்பான விவரணங்களையும் பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்ள எம்மிடம் அனுமதி கோரியிருந்த போதிலும் அவை ‘ஐ. நா. வின் தேடல்’ என தவறான அர்த்தம் தொனிக்கும் வகையில் அவற்றை வெளியிடுமாறு நான் அனுமதி வழங்கவில்லை. எப்படியாயினும், இரகசிய குறியீடுகளை பாதுகாக்காத வகையில் படங்களும் விவரணங்களும் அனுப்பப்பட்டமையினாலேயே அவை பொதுமக்களை சென்றடைந்துள்ளன என்பதை அறிந்துகொண்டேன்.

இத்தவறு எவ்வாறு நேர்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்துமாறு எனது தலைமையகத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் இடம்பெறாது.

வன்னியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறும் படம் இறுதியாக எமக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி கிடைத்தது.  விரைவில் புதிய படங்கள் கிடைக்குமென நம்புகின்றோம்.  அப்போது தான் அங்கே இன்னும் எத்தனை பேர் எஞ்சியிருந்து சவால்களுக்கு முகம் கொடுக்கிறார்கள் என்பது குறித்து எமக்கு தெரியவரும். அத்தகவல்களை உங்களுக்கும் கிடைக்கும் வகையில் செய்வோம்.

ஹோம்ஸ் கருத்து

யுத்தப் பிரதேசத்தினுள் சிவிலியன்கள் கொல்லப்படுவது அல்லது காயப்படுவது தொடர்பாக சில குறிப்பிட்ட ஊடகங்களில் வெளியிடப்பட்டது நம்பகமானது அல்ல என மனித உரிமைகளுக்கான ஐ. நா. பிரதிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஐ. நா. வட்டாரெங்களை ஆதாரங்காட்டியே ஊடகங்கள் அந்த செய்திகளை வெளியிட்டுள்ளன. இது முற்றிலும் தவறானது.

ஐ. நா. சபையால் இவ்வாறான எந்தவொரு இழப்புக்களின் எண்ணிக்கை குறித்து எவ்வித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. என ஐ. நா. கொழும்பு அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், சிவிலியன்களைப் பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் எடுக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் ஐ.நா. பூரண ஒத்துழைப்பு வழங்கும் எனவும் ஐ.நா. மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடுகள் இல்லை

parliament-of-sri-lanka.jpgஇலங்கையின் உள்விவகாரங்களில் இறைமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எந்தவொரு வெளிநாட்டின் தலையீடு களும் அழுத்தங்களும் இல்லை. மாறாக நாம் முன்னெடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நிரல்களுக்கு அவை பூரண ஒத்துழைப்பையும் ஆதரவையுமே வழங்குகின்றன என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். ஜே. என். பி. பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நேற்று பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை சமர்ப்பித்தார்.  இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசும் போதே அமைச்சர் போகொல்லாகம மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் :- புலிகள் இயக்கம் தொடர்பில், நோர்வே அரசின் நிலைப்பாடு மாற்றமடைந்திருக் கிறது.

நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டதன் பின்னர், நிலை மையைப் புரிந்துகொண்டு நோர்வேயின் நிலைப்பாடு மாறியுள்ளது. நோர்வேயிலுள்ள எமது தூதரகம், புலிகளின் பயங்கரவாத வலையமைப்பினரால் தாக்கப்பட்ட உடனடியாகவே கண்டனத்தைத் தெரிவித்திருந்தோம்.

தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களை நாட்டுக்குத் திருப்பியனுப்புமாறு கேட்டுக் கொண்டிருந்தோம். இது விடயமாக நோர்வே அரசு வருத்தம் தெரிவித்திருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்துப் 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.

தூதரகம் தாக்கப்பட்டதற்கு நட்டஈடு வழங்குவதாக நோர்வே கூறியது. ஆனால், நாம் அதனை ஏற்கவில்லை. எமது சொந்தக் செலவில் திருத்திக்கொள்வதாகக் கூறினோம். இந்தச் சம்பவத்திற்குப் பின்னர், புலிகள் தொடர்பான நிலைப்பாட்டை நோர்வே மாற்றிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டதன் எதிரொலி மற்றும் வெளிநாடுகளில் மேற்கொள்ளப் படும் புலி ஆதரவு ஆர்ப்பாட்டங்களைக் கண்டித்தும் இலங்கைக்கு வெளிநாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன என்றும் ஜே. என். பீ. தலைவர் விமல் வீரவன்ச சபை ஒத்திவேளை பிரேரணையொன்றை முன்வைத்தார்.  இந்தப் பிரேரணையை வழிமொழிந்த ஐ. தே. க. எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல நோர்வேயில் தூதரகம் தாக்கப்பட்டதைத் தமது கட்சி வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறினார்.

‘பாதுகாப்பு வலயத்தில் எவ்வளவு பொதுமக்கள் இருந்தாலும் எமக்கு பொறு ப்பு இருக்கிறது. எனவே, புலிகளுக்குச் சார்பாகக் கோஷமெழுப்புவோருக்கு உண்மையைச் சொல்லுங்கள். புலிகளை இனிப் பயங்கரவாதப் பாதையில் ஒதுக்கி வைத்து விட்டு மக்களின் நலன்களைக் கவனிப்போம் என அமைச்சர் பதிலளித்தார்.

மேற்படி சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் ஐ. தே. க. எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. கே. என். ஸ்ரீகாந்தா ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

வெளிநாட்டு டொக்டர்களின் தரம் தகுதி ஆராய்ந்தே விசா வழங்கப்பட்டது – சபையில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

nimal-siriiii.jpgஇடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டு வைத்திய நிபுணர்கள் அனைவரும் இலங்கை மருத்துவ சபையில் தற்காலிக அனுமதி பெற்றுள்ளனர்.  அத்துடன் இவர்கள் இலங்கைக்குள் வரும் முன்னர் அவர்களது தகுதி, தரம் போன்ற விபரங்கள் ஆராயப்பட்டதன் பின்னரே வீசா வழங்கப்பட்டது என சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இவர்களின் தகுதி, தரம் பற்றி ஆராய்ந்துள்ர்களா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மேலும் கூறுகையில்:- வெளிநாட்டிலிருந்து வைத்திய நிபுணர்களை அனுப்பு வதற்கு ஆயத்தமானபோது, சத்திரசிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்தூட்டல் நிபுணர்கள் மட்டுமே அனுப்புமாறு நாங்கள் கோரிக்கை விடுத்தோம். மருத்துவ பணியாளர்கள் அனுப்பத் தேவையில்லை என்பதையும் கூறினோம். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கென 500 தாதியர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். 268 டாக்டர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் டாக்டர்கள் அனுப்பப்படவுள்ளனர்.

உடனடி தேவைக்கென தென்பகுதி ஆஸ்பத்திரிகளிலி ருந்து 500 கட்டில்கள் அனுப்பப்பட்டன. மேலும் 25 அம்பியூலன்ஸ் வண்டிகளும் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எமக்கிருக்கும் ஒரே பிரச்சினை அங்கு செல்லும் வைத்தியர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் தங்குமிட வசதிகள் வழங்குவதே. இதற்கென தொண்டு நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

நேற்று பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஜே. வி. பி. பாராளுமன்ற உறுப்பினர் ரணவிருபத்திரன கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் நிமல் மேற்கண்டவாறு பதிலளித்தார். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கு சிகிச்சையளிக்க இந்தியா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து வைத்தியர்கள் வந்துள்ளனர். இவர்கள் உண்மையில் வைத்தியர்கள் தானா? என கேள்வி எழுப்பினார்.

A 32 புனரமைப்பு பணி 18ல் ஆரம்பம் – ஒப்பந்தங்கள் நேற்று பரிமாற்றம்

sri-lankan-road.jpgமன்னார் –  பூநகரி ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் ஏ-32 பிரதான வீதியை புனரமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தப் புனரமைப்பு பணிகளில் ஈடுபடவுள்ள 12 உள்நாட்டு ஒப்பந்தக் காரர்களுக்கான ஆவணங்கள் வீதி அபிவிருத்தி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ரி. பி. ஏக்கநாயக்கவினால் நேற்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

பத்தரமுல்லை, செத்சிரிபாயவிலுள்ள நெடுஞ்சாலைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் பிரதியமைச்சர் டபிள்யூ. பீ. ஏக்கநாயக்க, அமைச்சின் செயலாளர் எஸ். அமரசேகர மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் ரஞ்சித் பிரேமசிறி ஆகியோர் கலந்து கொண்டனர். முதற்கட்டமாக 48 கிலோ மீற்றர் நீளமான வீதியே புனரமைக்கப்படவுள்ளது.

இதற்கென சுமார் 1800 மில்லியன் ரூபாய் நிதி தற்போதைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு ஒப்பந்தக்காரர்களின் பங்களிப்புடன் இந்தப் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்திருந்தார்.

இதற்கமைவாகவே அமைச்சரவை அங்கீ காரம் பெறப்பட்ட 12 ஒப்பந்த நிறுவனங்களுக்கு இந்தப் புனரமைப்பு நடவடிக்கைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் ரீ. பி. ஏக்கநாயக்க தெரிவித்தார். சகல ஒப்பந்தக் காரர்களுக்கும் சமமாக வழங்க வேண்டும் என்ற நோக்குடனும் அவர்களது பணிகளின் முன்னேற்றங்களை கண்காணிக்கும் வகையிலும் ஒவ்வொரு ஒப்பந்தக் காரர்களுக்கும் முதற்கட்டத்தில் தலா 4 கிலோ மீற்றர் தூரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் முழுமையான கண்காணிப்பின் கீழ் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. புனரமைப்பின் போது 6.2 மீற்றர் பரப்புக்கு இந்த வீதிகள் புனரமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்தப் பணிகள் உள்நாட்டு நிதிகளை பயன்படுத்தியே முன்னெடுக்கப் படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மாற்று இடங்கள் ஒதுக்கப்பட்ட பின்னரே நடைபாதைக் கடைகள் அகற்றப்பட்டன – அமைச்சர் தினேஷ்

parliament-of-sri-lanka.jpgபுறக்கோட்டை நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த வியாபார நிலையங்கள் அகற்றப்படுமுன்னர் அந்த வர்த்தகர்களுக்காக மாற்று இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்ததாக அரசாங்கத்தின் பிரதம கொரடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று  பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

சட்டவிரேதமாக அமைக்கப்பட்டிருந்த நடைபாதைக் கடைகள் அகற்றப்படு முன்னர் சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. கடைகள் அகற்றப்பட்ட இடத்தில் வேறு எவருக்கும் கடைகள் அமைக்க இடமளிக்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் கூறினார். 

இடம்பெயர்ந்த மக்களுக்கு சிறந்த சுகாதார சேவை வழங்கப்படுகின்றது – பாராளுமன்றத்தில் அமைச்சர் நிமல்

nimal-siriiii.jpgமோதல்கள் காரணமாக வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்காக 268 வைத்தியர்களும் 500 தாதியரும் வடக்குப் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், உள்நாட்டில் பற்றாக்குறையாக உள்ள துறைகளுக்கே வெளிநாடுகளிலிருந்து வைத்தியர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இலங்கை வைத்தியர்கள் சபையில் தற்காலிகப் பதிவை மேற்கொண்டுள்ளார்களா என்பதைக் கண்டறிய அரசாங்கம் கவணம் செலுத்துகின்றது.

அத்துடன் சுகாதார சேவைகளுக்காக வடக்குக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள உபகரணங்கள் உரிய இடங்களுக்குச் சென்றடைந்துள்ளனவா என்பதையும் அரசு உண்ணிப்பாக அவதானித்து வருகின்றது. அறுவை சிகிச்சைக்காக அரசாங்க ஆஸ்பத்திரிகளில் நிலவும் நெருக்கடியை நீக்கும் வகையில் சுகாதார அமைச்சின் செலவில் 30 நோயாளிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளனர்

கொழும்பு சிறுவர் ஆஸ்பத்திரியில் 600 மில்லியன் ரூபா செலவில் அறுவை சிகிச்சை நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

யுத்தம் தொடர்பான கருத்துக்களை என்னுடன் ஆலோசிக்காமல் வெளியிட வேண்டாம் – கட்சி உறுப்பினர்களுக்கு ரணில்

ranil-wickramasinghe.jpgயுத்தம் தொடர்பான கருத்துக்களை ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தனது ஆலோசனையின்றி வெளியிடக் கூடாது என கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.  அத்துடன் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதல் நடத்துமாறு பாலித்த ரங்கே பண்டார கோரவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றபோது கட்சியின் பொருளாளர் டி.எம். சுவாமிநாதன் வன்னி பாதுகாப்பு வலயத்தின் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்துமாறு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்க பண்டார கூறியதாக பத்திரிகைகளில் செய்திகள் பிரசுரமாகியுள்ளமை குறித்து சுட்டிக்காட்டினார்.

இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க பதிலளிக்கையில் யுத்தம் தொடர்பான செய்திகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது தமது ஆலோசனையின்றி அவற்றை உறுப்பினர்கள் வெளியிட கூடாது எனவும் அதேவேளை கடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பாலித்த ரங்கே பண்டார கருத்து வெளியிடுகையில் கனரக ஆயுதங்களைக்கொண்டு பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதல் நடத்துமாறு அவர் கூறவில்லை எனவும் விளக்கியுள்ளார்.

கூட்டமைப்பு எம்.பிகளுக்கு விடுமுறை வழங்குவதை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் – தினேஷ்

parliament-of-sri-lanka.jpgதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பி னர்களுக்கு இனிமேல் விடுமுறை வழங்குவதை மீள்பரி சீலனை செய்ய வேண்டி வருமென்று அரசாங்கத்தின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கூட்டமைப்பு உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கத் திற்கு மூன்று மாத காலம் விடுமுறை வழங்குவதற்கான பிரேரணை நேற்று சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். சிவாஜிலிங்கம் எம்.பியின் சார்பில் சொலமன் சிறில் எம். பி. விடுமுறை விண்ணப்பத்தை சபையின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பித்தார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் தினேஷ், ‘கூட்டமைப்பு எம்.பிக்கள் இங்கு விடுமுறை எடுத்துக்கொண்டு போய், வெளிநாடுகளில் இருந்து நமது நாட்டுக்கு எதிராகவும், சத்திய உரைக்கு எதிராகவும் பிரிவினைவாதத்துக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்து வருகிறார்கள். அரசியலமைப்புக்கு முரணான விதத்தில் செயற்படுவோருக்கு நாம் இன்னமும் விடுமுறையை அங்கீகரிக்க வேண்டுமா? சிந்திக்க வேண்டும். என்று அமைச்சர் கூறினார்.

இதன்போது குறுக்கிட்ட எதிர்க் கட்சி பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரேரா, ‘நீங்கள் இந்த விடயத்தை ஏற்கனவே குறப்பிட்டிருக்க வேண்டும். எதிரணி உறுப்பினரின் பிரச்சினை என்பதால் இதனைக் கூறுகிறேன். அவருக்கு (சிவாஜீக்கு) எதிராக சட்டப்படியான குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லையே! எனவே இப்போதைக்கு விடுமுறையை அங்கீகரிப்போம்’ என்றார். இதற்கு உடன்பட்ட அமைச்சர் தினேஷ், உறுப்பினர்களின் சிறப்பு உரிமையைப் பறிக்குமாறு நான் சொல்லவில்லை.

எதிர்காலத்தில் இதுபற்றிக் கவனம் செலுத்த வேண்டும் என்றுதான் கூறுகிறேன்’ என்றார். அதற்கமைய சிவாஜிலிங்கம் எம்.பிக்கு விடுமுறை வழங்கப்பட்டது. அதேநேரம், கனகரட்ணம் எம்.பியின் விடுமுறை விண்ணப்பத்தை, துரை ரெட்ணசிங்கம் எம்.பி. சமர்ப்பிக்க சபை அங்கீகரித்தது.