இலங்கையின் உள்விவகாரங்களில் இறைமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எந்தவொரு வெளிநாட்டின் தலையீடு களும் அழுத்தங்களும் இல்லை. மாறாக நாம் முன்னெடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நிரல்களுக்கு அவை பூரண ஒத்துழைப்பையும் ஆதரவையுமே வழங்குகின்றன என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். ஜே. என். பி. பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நேற்று பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை சமர்ப்பித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசும் போதே அமைச்சர் போகொல்லாகம மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் :- புலிகள் இயக்கம் தொடர்பில், நோர்வே அரசின் நிலைப்பாடு மாற்றமடைந்திருக் கிறது.
நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டதன் பின்னர், நிலை மையைப் புரிந்துகொண்டு நோர்வேயின் நிலைப்பாடு மாறியுள்ளது. நோர்வேயிலுள்ள எமது தூதரகம், புலிகளின் பயங்கரவாத வலையமைப்பினரால் தாக்கப்பட்ட உடனடியாகவே கண்டனத்தைத் தெரிவித்திருந்தோம்.
தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களை நாட்டுக்குத் திருப்பியனுப்புமாறு கேட்டுக் கொண்டிருந்தோம். இது விடயமாக நோர்வே அரசு வருத்தம் தெரிவித்திருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்துப் 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.
தூதரகம் தாக்கப்பட்டதற்கு நட்டஈடு வழங்குவதாக நோர்வே கூறியது. ஆனால், நாம் அதனை ஏற்கவில்லை. எமது சொந்தக் செலவில் திருத்திக்கொள்வதாகக் கூறினோம். இந்தச் சம்பவத்திற்குப் பின்னர், புலிகள் தொடர்பான நிலைப்பாட்டை நோர்வே மாற்றிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டதன் எதிரொலி மற்றும் வெளிநாடுகளில் மேற்கொள்ளப் படும் புலி ஆதரவு ஆர்ப்பாட்டங்களைக் கண்டித்தும் இலங்கைக்கு வெளிநாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன என்றும் ஜே. என். பீ. தலைவர் விமல் வீரவன்ச சபை ஒத்திவேளை பிரேரணையொன்றை முன்வைத்தார். இந்தப் பிரேரணையை வழிமொழிந்த ஐ. தே. க. எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல நோர்வேயில் தூதரகம் தாக்கப்பட்டதைத் தமது கட்சி வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறினார்.
‘பாதுகாப்பு வலயத்தில் எவ்வளவு பொதுமக்கள் இருந்தாலும் எமக்கு பொறு ப்பு இருக்கிறது. எனவே, புலிகளுக்குச் சார்பாகக் கோஷமெழுப்புவோருக்கு உண்மையைச் சொல்லுங்கள். புலிகளை இனிப் பயங்கரவாதப் பாதையில் ஒதுக்கி வைத்து விட்டு மக்களின் நலன்களைக் கவனிப்போம் என அமைச்சர் பதிலளித்தார்.
மேற்படி சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் ஐ. தே. க. எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. கே. என். ஸ்ரீகாந்தா ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.