இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டு வைத்திய நிபுணர்கள் அனைவரும் இலங்கை மருத்துவ சபையில் தற்காலிக அனுமதி பெற்றுள்ளனர். அத்துடன் இவர்கள் இலங்கைக்குள் வரும் முன்னர் அவர்களது தகுதி, தரம் போன்ற விபரங்கள் ஆராயப்பட்டதன் பின்னரே வீசா வழங்கப்பட்டது என சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இவர்களின் தகுதி, தரம் பற்றி ஆராய்ந்துள்ர்களா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மேலும் கூறுகையில்:- வெளிநாட்டிலிருந்து வைத்திய நிபுணர்களை அனுப்பு வதற்கு ஆயத்தமானபோது, சத்திரசிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்தூட்டல் நிபுணர்கள் மட்டுமே அனுப்புமாறு நாங்கள் கோரிக்கை விடுத்தோம். மருத்துவ பணியாளர்கள் அனுப்பத் தேவையில்லை என்பதையும் கூறினோம். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கென 500 தாதியர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். 268 டாக்டர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் டாக்டர்கள் அனுப்பப்படவுள்ளனர்.
உடனடி தேவைக்கென தென்பகுதி ஆஸ்பத்திரிகளிலி ருந்து 500 கட்டில்கள் அனுப்பப்பட்டன. மேலும் 25 அம்பியூலன்ஸ் வண்டிகளும் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எமக்கிருக்கும் ஒரே பிரச்சினை அங்கு செல்லும் வைத்தியர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் தங்குமிட வசதிகள் வழங்குவதே. இதற்கென தொண்டு நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
நேற்று பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஜே. வி. பி. பாராளுமன்ற உறுப்பினர் ரணவிருபத்திரன கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் நிமல் மேற்கண்டவாறு பதிலளித்தார். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கு சிகிச்சையளிக்க இந்தியா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து வைத்தியர்கள் வந்துள்ளனர். இவர்கள் உண்மையில் வைத்தியர்கள் தானா? என கேள்வி எழுப்பினார்.