2009

2009

இந்தியாவின் மேற்குக் கரையூடாக நுழைய விடுதலைப்புலிகள் முயற்சிக்கலாம்: தீவிர கண்காணிப்பு.

indiannavyship.jpg இந்தியாவின் மேற்குக் கரை ஊடாக இந்தியாவுக்குள் நுழைவதற்கு புலிகள் முயற் சிப்பதாக இந்தியக் கடற்படையின் தென்பிராந்திய கடற்படைக் கொமடோர் வைஸ் அட் மிரல் எஸ். கே.டம்லே தெரிவித்துள்ளார். அதனால் மேற்குக் கடற்பிராந்தியத்தில் கடும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.

இந்திய மேற்குக்கரையின் சகல பகுதிகள் ஊடாகவும் இந்தியாவுக்குள் ஊடுருவ இலங்கையர்களும் விடுதலைப்புலிகளும் முயற்சித்து வருகிறார்கள் என்று பொலிஸ் மற்றும் ஏனைய பாதுகாப்பு முகவர்கள் கடற்படையினருக்குத் தெரியப்படுத்தியிருந்தனர் எப்படி இருந்தாலும் இந்தப் பிரச்சனை இன்று உருவானதல்ல. இந்தியாவுக்குள் ஊடுருவும் சாத்தியங்கள் எப்போதும் இருந்து வருகின்றன.

சட்டவிரோதமாக நுழையும் எந்த ஒரு முயற்சியையும் முறியடிக்கும் விதத்தில் நாங்கள் உயர் எச்சரிக்கையுடன் உள்ளோம். இந்தியக் கடற்பரப்பில் புலிகளின் எந்தவொரு கப்பலையும் நாங்கள் இதுவரை சந்திக்கவில்லை  என்றும் அந்த சிரேஷ்ட கடற்படை அதிகாரி  மேலும் கூறினார்.

இலங்கைக் கடற்படையினர் தங்களது நாட்டின் பாதுகாப்பிற்காக தாங்களாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் தென்பிராந்திய கடற்படைக்கும் இலங்கைக் கடற்படைக்கும் இடையில் நேரடியான இடைத் தொடர்புகள் எதுவும் இல்லை என்றும் எஸ்.கே.டம்லே மேலும் சொன்னார். பனாஜியில் இந்தியக் கடற்படையின் “மண்டோவி” என்ற கப்பலின் வெள்ளோட்டம் நடைபெற்றது. அதன்பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே வைஷ்அட்மிரல் டம்லே மேற்கண்டவாறு கூறினார்.

இனவாதிகளின் எதிர்ப்பால் இறக்குவானை இந்து கலாசார மண்டபமும் திறக்கப்படவில்லை

hinduism.jpgஇறக்குவானை நகரில் நேற்று வெள்ளிக்கிழமை “சித்திரா பௌர்ணமி’ தினத்தில் இந்து கலாசார மண்டபம் திறக்கப்படவிருந்த போதும் இனவாதிகளின் கடும் எதிர்ப்பால் அதுவும் திறக்கப்படவில்லை.

இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 28 ஆம் திகதி முதல் இம்மாதம் 10 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்ட நிலையில், அந்த உற்சவம் இப்பகுதி பெரும்பான்மையினத்தவர்களின் எதிர்ப்புக் காரணமாக இடைநிறுத்தப்பட்டது. “வெசாக் தினம்’ என்பதனால் அதனை நிறுத்துமாறு பெரும்பான்மையினத்தவர்கள் மிரட்டல் விடுத்திருந்தனர். வெசாக்தினம், சித்திரா பௌர்ணமி தினமாகும். இத்தினம் இந்துக்களுக்கு மிக முக்கியமான நாள் என்பதனால் அதனை வழமை போல் கொண்டாட வேண்டுமென இந்துக்கள் கோரிக்கை விடுத்தனர். எனினும் வெசாக் தினத்தில் தேர்த்திருவிழா, வருடாந்த உற்சவம் நடைபெற்றால் பாரிய பின் விளைவு ஏற்படுமென பெரும்பான்மையினத்தவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆலய நிர்வாகிகளைத் தனது அமைச்சுக்கு அழைத்து கலந்துரையாடி அவர்களின் வேண்டுகோளுக்கமைய சித்திரா பௌர்ணமியில் (வெசாக் தினத்தில்) கோயிலில் விசேட பூஜை நடத்துவதுடன் இறக்குவானையில் அமைக்கப்பட்ட இந்து கலாசார மண்டபம் திறந்து வைக்கத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கலாசார மண்டபமும் திறக்கப்படக்கூடாதெனப் பெரும்பான்மையினரால் மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் அமைச்சர் ஜோன் செனவிரட்ன ஆகியோர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்த அமைச்சர்கள் கலந்துரையாடிய பின்னர் ஒரு முடிவுக்கு வந்து இந்து மற்றும் பௌத்த அமைப்பினரை ஒரே நேரத்தில் சந்திப்பதென முடிவு செய்யப்பட்டு வியாழக்கிழமை இறக்குவானை கஸ்தூரி மண்டபத்தில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மகிபால ஹேரத், மாகாண அமைச்சர் ரஞ்சித் டி சொய்சா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.டி.இராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்ட கலந்துரையாடலில் இந்து அமைப்புகளும் கோயில் நிர்வாகத்தினரும் கலந்துகொண்டனர். இதன்போது சகலரின் கருத்துகளையும் செவிமடுத்த அமைச்சர்கள் கலாசார மண்டப திறப்புவிழாவை பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.

நாட்டில் சமாதானம் ஏற்படும் இவ்வேளையில் சிறு சிறு விடயங்களுக்காக குழப்பங்கள் ஏற்பட அனுமதிக்க முடியாதெனத் தெரிவித்த அமைச்சர்கள் தமது குறுகிய சுயநலப்போக்கினைத் தவிர்த்துக் கொள்ளுமாறு இரு தரப்பினரையும் கேட்டுக்கொண்டனர்.

இதன்மூலம் காலாகாலமாக நடைபெற்று வந்த வருடாந்த உற்சவத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன் கலாசார மண்டபத் திறப்புக்கும் அனுமதி கிடைக்கவில்லை.

இலங்கையின் வடக்கில் இருந்து 2 லட்சம் பேர் இடம்பெயர்வு – ஐ.நா

_mullai_1.jpgஇலங்கை யின் வடக்கே மோதல் பிரதேசங்களில் இருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு இதுவரையில் சுமார் 2 இலட்சம் பேர் இடம்யெபர்ந்து வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஐநா மன்றத்தின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பு அலுவலகம் இவர்களில் 1741 பேர் காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளர்கள் எனவும் கூறியிருக்கின்றது.

வவுனியா மனிக்பாம் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கென அவசரகாலத்தில் பயன்படுத்தப்படும் 300 கூடாரங்கள் ஐநா மன்றத்தின் அகதிகளுக்கான நிறுவனத்தினரால் வழங்கப்பட்டுள்ளதாகவும் எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற பிரான்ஸ் நாட்டு மருத்துவ உதவி நிறுவனம் இந்தப் பகுதியில் சுகாதார அமைச்சின் அனுமதியோடு வெளிக்கள மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் ஐநா மன்றத்தின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பு அலுவலகம் தெரிவித்திருக்கின்றது.

இந்திய நிவாரணங்கள் வவுனியா அரச அதிபரிடம் உத்தியோகபூர்வ கையளிப்பு

chals_.jpgஇந்திய அரசினால் இடம்பெயர்ந்த மக்களுக்கென அனுப்பி வைக்கப்பட்ட ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் இந்திய அதிகாரிகளால் வவுனியாவில் கையளிக்கப்பட்டன. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி. எம். எஸ். சாள்ஸ் செட்டிக்குளத்தில் வைத்து இதனைப் பெற்றுக் கொண்டார்.

ஏழுலொறிகளில் எடுத்தி வரப்பட்ட இந்த நிவாரணப் பொருட்களில் உணவு வகைகள், உடுபுடவைகள், சமையல் பாத்திரங்கள் அடங்கியிருந்ததென அதிகாரிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கக்கூடிய வகையில் நிவாரணப் பொருட்கள் பொதி செய்யப்பட் டிருந்தன.

இலங்கைக்கு இந்திய இராணுவம் செல்வது எளிதல்ல – இந்திய பிரதமர்

karunanithi-apalo-hos1.jpgஇலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கு இராணுவத்தை அனுப்புவது என்பது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் சென்னையில் செய்தியாளர்கள் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்றும், சுயாதீனம் கொண்ட நாட்டில் தலையிடுவதில் வரையறைகள் உள்ளன என்றும் அவர் கூறினார். அத்தோடு இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ வேண்டும் என்று இந்தியாவில் உள்ள அனைவருமே விரும்புவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஒரு தேடப்பட்டு வரும் குற்றவாளி என்றும், ஆனால் தற்போது அதுவல்ல பிரச்சனை என்றும், இலங்கை தமிழர்கள் எல்லா நலனும் பெற்று நன்றாக வாழ வேண்டும் என்பது தான் இப்போது முக்கியமான விஷயம் என்றும் பிரதமர் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது கூறினார்.

அத்தோடு, இலங்கை பிரச்சனைக்கு அரசியல் தீர்வே சரி என்பதை இலங்கை மக்களும், அரசும் உணர வேண்டும் என்றும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டார்.

வடக்கு அகதிகளுக்கு உதவவென ஆசிரியர்களிடம் பலவந்தமாக நிதி சேகரிப்பு

parliament-of-sri-lanka.jpgதெற்கில் தேர்தல் நடைபெறவிருப்பதால் அதில் வெற்றிபெறும் நோக்கில், வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவவெனக் கூறி ஆசிரியர்களிடமிருந்து பலவந்தமாக நிதி திரட்டப்படுவதுடன், அப்படி பணம் வழங்காதவர்கள் மீது புலி முத்திரை குத்தப்படுவதாகவும் ஜே.வி.பி. யின் கொழும்பு மாவட்ட எம்.பி. யான சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நாட்டின் பொருளாதார நிலைமை பற்றிய சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பேசும்போதே ஹந்துநெத்தி எம்.பி. இந்த தகவலை வெளியிட்டார். அவர் அங்கு மேலும் பேசுகையில்;

வடக்கில் இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு உதவி செய்வதற்கு எமது உணவில் ஒரு பங்கை அவர்களுக்கு வழங்கு வதற்கு நாம் தயாராக இருக்கிறோம். ஆனால் அதை சுயமாக செய்ய வேண்டும். அதை விடுத்து மக்களிடம் பலவந்தப்படுத்தி பெறக் கூடாது.

ஆனால், இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கவென அண்மையில் இலங்கை மின்சார சபையின் பொது கணக்கிலிருந்து 144 இலட்சம் ரூபா மீளப் பெறப்பட்டு புறக்கோட்டையில் பொருட்களும் வாங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த பொருட்களை பொதி செய்ய பையொன்று 50 ரூபா வீதம் 50 ஆயிரம் பைகள் வாங்கப்பட்டிருக்கின்றன. இவற்றுக்கு மட்டும் 25 இலட்சம் ரூபா செலவிடப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்த தொகை பணம் மின்சாரசபை ஊழியர்களது சம்மதத்துடன் பெறப்படவில்லை. எனினும் இந்தப் பொருட்கள் மின்சார சபை ஊழியர்களது அன்பளிப்பென கூறி வழங்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் ஊழியர்களின் சம்மதத்துடன் நலன்புரி கணக்கிலிருந்தே இதற்கான பணம் எடுக்கப்பட்டிருக்கவேண்டும். எனினும் இதற்கான தொகை சட்ட விரோதமாக பொதுக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், தெற்கில் தேர்தல் நடைபெறவிருப்பதால் அதில் வெற்றி பெற இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவவென ஆசிரியர்களிடமிருந்து பலவந்தமாக நிதி திரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சம்பளத்தில் ஒரு தொகையை இதற்கு வழங்குமாறு கடிதம் மூலமோ அல்லது நேரடியாகவோ ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது. அப்படி வழங்காதவர்களுக்கு புலி முத்திரை குத்தப்படுகிறது’ என்றார்.

வேறு கூட்டணி பற்றி சிந்திக்க மாட்டேன்: ஜெயலலிதா பேட்டி

j-j-j.jpgவட சென்னை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வியாசர்பாடியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.

இந்த கூட்டத்திற்கு பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

ராகுல்காந்தி டெல்லியில் கூறும்போது காங்கிரஸ் கட்சியுடன் ஒத்த கருத்துள்ள கட்சி அ.தி.மு.க. என்று கூறியிருக்கிறாரே?

அப்படி சொல்லவில்லை என்று அவர்களின் கட்சி தலைமை அறிவித்து இருக்கிறதே?

தேர்தலுக்கு பிறகு கூட்டணி தொடர்பாக காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி தலைவர்களிடம் பேசுவீர்களா?

நாங்கள் 3-வது அணியில் இருக்கிறோம். 3-வது அணியில் இருக்கும் போது வேறு ஒரு கூட்டணி பற்றி சிந்திக்கும் ஆள் நான் இல்லை. அப்படி பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இப்போது என் கவனம் முழுவதும் தேர்தலில் 40-க்கு 40 இடங்கள் பெறுவதிலே தான் இருக்கிறது.

மன்னாரில் மீள்குடியேற்ற இரண்டாம் கட்ட வேலைகள் திங்கள் முதல் ஆரம்பம்

new_welfare.pngயுத்தம் காரணமாக மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தும் இரண்டாம் கட்ட நடவடிக்கை எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் மீள்குடியேற்ற 1 ஆம் கட்ட நடவடிக்கை மன்னார் முசலி கிராமத்தில் நடைபெற்றது. இடம்பெயர்ந்து வந்த மக்களை மீளக் குடியேற்றும் அரசின் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.

இடம்பெயர்ந்த சகல மக்களும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்பட வேண்டும் என்பதே அரசின் திட்டமாகும். இதேபோல வன்னிப்பகுதிகளில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களும் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள்.

அதற்கு முன்னர் அவர்களின் இருப்பிடங்களில் கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றப்பட வேண்டும். அந்தப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அது முடிவடைந்து கண்ணிவெடிகள் அகற்றப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அந்த மக்களின் மீள்குடியேற்றப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

புலிகளின் அனுபவத்திலிருந்து பாடம் கற்ற மக்கள் விடுதலை இராணுவம்

nilakannikal.jpgஇலங் கையில் விடுதலைப் புலிகளின் அனுபவத்தின் மூலம் தாங்கள் பாடம் கற்றுள்ளதாக இந்தியாவின் பயங்கரவாதக் குழுக்களின் பட்டியலில் உள்ள அமைப்பான மக்கள் விடுதலை இராணுவம் தெரிவித்துள்ளது. எமது இலக்கை வென்றெடுக்க இராணுவ பலம் மட்டும் போதாது. ஆதலால் எமது போராட்டத்தை நாம் முழு அளவில் சர்வதேச மயப்படுத்தவுள்ளோம். அத்துடன் இந்தியமக்களின் ஆதரவையும் திரட்டி வருகின்றோம் என்று மக்கள் விடுதலை இராணுவத்தின் உப தலைவர் மனோகர் மயூன்நுகோபா நிருபர்களிடம் தெரிவித்ததாக “ரெலிகிராப்’ பத்திரிகை நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மக்கள் விடுதலை இராணுவத்தின் அரசியல் பிரிவான புரட்சிகர மக்கள் முன்னணியின் பயிற்சிக்கட்டளை தலைமையகத்தில் வியாழக்கிழமை இக் கருத்தை மனோகர் மயூன் கூறியுள்ளார். மணிப்பூர் மியன்மார் எல்லையில் இத்தலைமையகம் அமைந்துள்ளது.

மோதலுக்கு தீர்வு காண அரசியல் பேச்சு வார்த்தையின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்ட மனோகர் மயூன், அதேசமயம் நிகழ்ச்சி நிரலானது “இறைமை’யாக இருக்காவிடின் மக்கள் விடுதலை இராணுவம் புரட்சிகரமான மக்கள் முன்னணி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாது என்று உறுதியாகக் கூறியுள்ளார். மணிப்பூரில் தனிநாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் 1978 செப்டெம்பரில் மக்கள் விடுதலை இராணுவம் உருவாக்கப்பட்டது.

வெசாக் தின உணவு உட்கொண்டோர் திடீர் சுகயீனமுற்று ஆஸ்பத்திரியில் அனுமதி

vesak.jpgமாத்தறை வெஹறஹேன விகாரையில் இடம் பெற்ற வெசாக் தான நிகழ்வில் மதிய உணவை உட்கொண்ட ஒன்பது பொலிஸ் கான்ஸ்டபிள்களும், சில அரசு ஊழியர்களும் திடீர் வயிற்று வலி, வயிற்றோட்டம் ஏற்பட்டு மாத்தறை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரசின் தேசிய வெசாக் தின நிகழ்வுகள் இந்த விகாரையில் கடந்த புதன்கிழமை 6 ஆம் திகதி ஆரம்பமானது தெரிந்ததே. இந் நிகழ்வின் போது வழங்கப்பட்ட மதிய உணவை உட்கொண்ட பின்பே இவ்வாறு பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்