இனவாதிகளின் எதிர்ப்பால் இறக்குவானை இந்து கலாசார மண்டபமும் திறக்கப்படவில்லை

hinduism.jpgஇறக்குவானை நகரில் நேற்று வெள்ளிக்கிழமை “சித்திரா பௌர்ணமி’ தினத்தில் இந்து கலாசார மண்டபம் திறக்கப்படவிருந்த போதும் இனவாதிகளின் கடும் எதிர்ப்பால் அதுவும் திறக்கப்படவில்லை.

இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 28 ஆம் திகதி முதல் இம்மாதம் 10 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்ட நிலையில், அந்த உற்சவம் இப்பகுதி பெரும்பான்மையினத்தவர்களின் எதிர்ப்புக் காரணமாக இடைநிறுத்தப்பட்டது. “வெசாக் தினம்’ என்பதனால் அதனை நிறுத்துமாறு பெரும்பான்மையினத்தவர்கள் மிரட்டல் விடுத்திருந்தனர். வெசாக்தினம், சித்திரா பௌர்ணமி தினமாகும். இத்தினம் இந்துக்களுக்கு மிக முக்கியமான நாள் என்பதனால் அதனை வழமை போல் கொண்டாட வேண்டுமென இந்துக்கள் கோரிக்கை விடுத்தனர். எனினும் வெசாக் தினத்தில் தேர்த்திருவிழா, வருடாந்த உற்சவம் நடைபெற்றால் பாரிய பின் விளைவு ஏற்படுமென பெரும்பான்மையினத்தவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆலய நிர்வாகிகளைத் தனது அமைச்சுக்கு அழைத்து கலந்துரையாடி அவர்களின் வேண்டுகோளுக்கமைய சித்திரா பௌர்ணமியில் (வெசாக் தினத்தில்) கோயிலில் விசேட பூஜை நடத்துவதுடன் இறக்குவானையில் அமைக்கப்பட்ட இந்து கலாசார மண்டபம் திறந்து வைக்கத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கலாசார மண்டபமும் திறக்கப்படக்கூடாதெனப் பெரும்பான்மையினரால் மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் அமைச்சர் ஜோன் செனவிரட்ன ஆகியோர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்த அமைச்சர்கள் கலந்துரையாடிய பின்னர் ஒரு முடிவுக்கு வந்து இந்து மற்றும் பௌத்த அமைப்பினரை ஒரே நேரத்தில் சந்திப்பதென முடிவு செய்யப்பட்டு வியாழக்கிழமை இறக்குவானை கஸ்தூரி மண்டபத்தில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மகிபால ஹேரத், மாகாண அமைச்சர் ரஞ்சித் டி சொய்சா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.டி.இராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்ட கலந்துரையாடலில் இந்து அமைப்புகளும் கோயில் நிர்வாகத்தினரும் கலந்துகொண்டனர். இதன்போது சகலரின் கருத்துகளையும் செவிமடுத்த அமைச்சர்கள் கலாசார மண்டப திறப்புவிழாவை பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.

நாட்டில் சமாதானம் ஏற்படும் இவ்வேளையில் சிறு சிறு விடயங்களுக்காக குழப்பங்கள் ஏற்பட அனுமதிக்க முடியாதெனத் தெரிவித்த அமைச்சர்கள் தமது குறுகிய சுயநலப்போக்கினைத் தவிர்த்துக் கொள்ளுமாறு இரு தரப்பினரையும் கேட்டுக்கொண்டனர்.

இதன்மூலம் காலாகாலமாக நடைபெற்று வந்த வருடாந்த உற்சவத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன் கலாசார மண்டபத் திறப்புக்கும் அனுமதி கிடைக்கவில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • illangayan
    illangayan

    பொறுத்திருந்து பாருங்கோ. என்ன நடக்கும் எண்டு. உப்படித்தானே 56இல ஆரம்பித்தவை இப்ப பயங்கரவாத்தை அழிப்பதாகக் கூறிக்கொண்டு என்ன நடக்குது எண்டு எங்களுக்குத் தெரியாதா? சண்டை முடியுமாம் சமாதானம் வருமாம். ஆற்ற காதிலை பூவைக்கப்போகினும் எண்டு பாப்பம். கோயில் திருவிழாவையும் மண்டபம் திறப்பதையும் பிந்திப்போட்டவை ஏன் வெசாக்கையும் பிந்திப்போட்டிருக்கலாம் தானே? தமிழன் இரண்டாந்தரம் என்பதை சொல்லாமல் சொல்லிப்போட்டு போட்டினும் பாருங்கோ.

    Reply
  • Rohan
    Rohan

    பொய் பச்சைப் பொய்.

    ராஜபக்சவின் ராம ராச்சியத்தில் தமிழருக்கு இப்படி ஒரு அநியாய்ம் நடக்கும் என்ற பொய்யுரையை ஏற்க் முடியாது.

    Reply