யுத்தம் காரணமாக மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தும் இரண்டாம் கட்ட நடவடிக்கை எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் மீள்குடியேற்ற 1 ஆம் கட்ட நடவடிக்கை மன்னார் முசலி கிராமத்தில் நடைபெற்றது. இடம்பெயர்ந்து வந்த மக்களை மீளக் குடியேற்றும் அரசின் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.
இடம்பெயர்ந்த சகல மக்களும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்பட வேண்டும் என்பதே அரசின் திட்டமாகும். இதேபோல வன்னிப்பகுதிகளில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களும் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள்.
அதற்கு முன்னர் அவர்களின் இருப்பிடங்களில் கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றப்பட வேண்டும். அந்தப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அது முடிவடைந்து கண்ணிவெடிகள் அகற்றப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அந்த மக்களின் மீள்குடியேற்றப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.