தெற்கில் தேர்தல் நடைபெறவிருப்பதால் அதில் வெற்றிபெறும் நோக்கில், வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவவெனக் கூறி ஆசிரியர்களிடமிருந்து பலவந்தமாக நிதி திரட்டப்படுவதுடன், அப்படி பணம் வழங்காதவர்கள் மீது புலி முத்திரை குத்தப்படுவதாகவும் ஜே.வி.பி. யின் கொழும்பு மாவட்ட எம்.பி. யான சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நாட்டின் பொருளாதார நிலைமை பற்றிய சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பேசும்போதே ஹந்துநெத்தி எம்.பி. இந்த தகவலை வெளியிட்டார். அவர் அங்கு மேலும் பேசுகையில்;
வடக்கில் இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு உதவி செய்வதற்கு எமது உணவில் ஒரு பங்கை அவர்களுக்கு வழங்கு வதற்கு நாம் தயாராக இருக்கிறோம். ஆனால் அதை சுயமாக செய்ய வேண்டும். அதை விடுத்து மக்களிடம் பலவந்தப்படுத்தி பெறக் கூடாது.
ஆனால், இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கவென அண்மையில் இலங்கை மின்சார சபையின் பொது கணக்கிலிருந்து 144 இலட்சம் ரூபா மீளப் பெறப்பட்டு புறக்கோட்டையில் பொருட்களும் வாங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த பொருட்களை பொதி செய்ய பையொன்று 50 ரூபா வீதம் 50 ஆயிரம் பைகள் வாங்கப்பட்டிருக்கின்றன. இவற்றுக்கு மட்டும் 25 இலட்சம் ரூபா செலவிடப்பட்டிருக்கிறது.
ஆனால், இந்த தொகை பணம் மின்சாரசபை ஊழியர்களது சம்மதத்துடன் பெறப்படவில்லை. எனினும் இந்தப் பொருட்கள் மின்சார சபை ஊழியர்களது அன்பளிப்பென கூறி வழங்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் ஊழியர்களின் சம்மதத்துடன் நலன்புரி கணக்கிலிருந்தே இதற்கான பணம் எடுக்கப்பட்டிருக்கவேண்டும். எனினும் இதற்கான தொகை சட்ட விரோதமாக பொதுக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், தெற்கில் தேர்தல் நடைபெறவிருப்பதால் அதில் வெற்றி பெற இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவவென ஆசிரியர்களிடமிருந்து பலவந்தமாக நிதி திரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சம்பளத்தில் ஒரு தொகையை இதற்கு வழங்குமாறு கடிதம் மூலமோ அல்லது நேரடியாகவோ ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது. அப்படி வழங்காதவர்களுக்கு புலி முத்திரை குத்தப்படுகிறது’ என்றார்.