2009

2009

நிவாரணக் கிராமங்களில் அரச வைத்திய முகாம்

idps200_1.jpgவடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் மக்களின் நலன் கருதி அரசாங்கம் தினமும் வைத்திய சிகிச்சை முகாம்களை நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. செட்டிக்குளம் பிரதேசத்திலுள்ள கதிர்காமர் நிவாரணக் கிராமத்தின் 1ஆம், 2ஆம், 3ஆம், 4ஆம் மற்றும் 5ஆம் வலயங்களிலுள்ள நலன்புரி நிலையங்களிலும் இந்த வைத்திய சிகிச்சை முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவும் வகையில் பெரும் எண்ணிக்கையிலான வைத்தியர்கள் இந்த வைத்திய சிகிச்சை முகாமில் கலந்துகொண்டு காயமடைந்தோருக்கும் நோயாளிகளுக்கும் சிகிச்சையளித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்திய மருத்துவர் குழு இன்று இலங்கை வருகை

indian-madi.jpgஇலங்கையில் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவும் பொருட்டு இந்திய மருத்துவர் குழுவொன்று இன்று இலங்கை வந்துள்ளது.

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு 8 மருத்துவர் உட்பட 27 பேர் அடங்கிய குழு 25 தொன் நிவாரண பொருட்களுடன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது புல்மோட்டை பகுதியில் 110 படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட இந்திய மருத்துவ முகாமை வவுனியாவுக்கு மாற்றுமாறு இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதாகவும் பிரிகேடியர் பி.சச்டேவா ஊடகவியலாளர்களுக்குத் தெரிவித்தார்.

பாலம் விமானத்தளத்திலிருந்து இன்று காலை விங் கொமாண்டர் எச்.பி.குமார் தலைமையில் இந்திய விமானப் படையின் ஐஎல் 76 ரக விமானத்தில் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் அவை இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் 180 நாட்களில் மீள்குடியமர்த்தப்படுவர்: இலங்கை – இந்தியா கூட்டறிக்கை

indo-lanka.jpg வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 280,000 பேரில் பெரும்பாலானவர்கள் ஆறு மாதங்களுக்குள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என இலங்கையும்,  இந்தியாவும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சந்திப்பின் பின்னரே இந்த கூட்டறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 25 வருடங்களாகத் தொடர்ந்துவந்த தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக ஜனாதிபதி அவர்களிடம் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இரண்டு தரப்பினரும், இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் மீள்குடியேற்றம் பற்றிக் கலந்துரையாடினர்.

கூடிய விரைவில் நலன்புரி நிலையங்களை இல்லாமல் செய்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். 180 நாள் வேலைத்திட்டத்திற்கமைய இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலான மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என இலங்கையும், இந்தியாவும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள், பொதுமக்களுக்கான உட்கட்டுமானங்கள், வீடுகள் நிர்மானம் போன்றவற்றுக்குத் தமது உதவிகளை வழங்கும் என இந்தியா உறுதியளித்துள்ளது.

தீவிரவாதம் முற்றாக ஒழிக்கப்படும்வரை மக்களை முகாம்களுக்குள் தடுத்துவைக்கவேண்டிய தேவை இருந்ததாகவும்,  இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களில் சர்வதேச தரம் பேணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் இலங்கை அரசாங்கம்,  இந்தியத் தூதுவர்களிடம் கூறியுள்ளது.

அதேநேரம்,  22 வருடங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்துக்கு அமைய அதிகாரப்பகிர்வுத் திட்டமொன்றை முன்வைக்க இலங்கை அரசாங்கம் தயாராகவுள்ளது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள தமிழ் தரப்பினர் உட்பட அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தாம் தயாரென்பதை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இறுதிச் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்த இணை அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்துமுடிந்த போர் வெற்றியானதல்ல : ஜெயலலிதா

jayalaitha.jpgஇலங்கையில் நடந்த போரில் இரு தரப்பினருக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தியா-இலங்கை நாடுகளுக்கு இடையேயான தொப்புள் கொடி உறவில், இலங்கைப் பிரச்சினைக்காக, முன்னாள் பாரதப் பிரதமரையும், ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களையும் இந்தியாவும் இழந்திருக்கிறது. இந்தப்போரின் முடிவு யாருக்கும் வெற்றியை அளிக்கவில்லை” என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின்போது தனி ஈழம் அமைத்துக் கொடுத்தே தீருவேன் என்று முழங்கி வந்த ஜெயலலிதா, தனது அறிக்கையில், தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும், பிற பிரிவினருக்கும் சம உரிமைகள் வழங்க வேண்டும் என்று மட்டும் கூறிக் கொண்டு நிறுத்தி விட்டார். தனி ஈழம் குறித்த தனது நிலை குறித்து அவர் இந்த அறிக்கையில் எதையும் கண்டு கொள்ளவில்லை.

இராணுவத்தளபதி கிளிநொச்சி விஜயம்

fonseka-000.jpgஇராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார்.விடுதலை புலிகளிடம் இருந்து நாட்டை மீட்டமைக்கான கொண்டாட்டங்கள் இன்று கிளிநொச்சியில் இடம்பெறுகின்றன.

இந்நிகழ்வில் நாட்டை மீட்பதற்கான இறுதிக்கட்ட போரில் பங்கு வகித்த இராணுவ வீரர்கள் மத்தியில் இராணுவத்தளபதி உரையாற்றினார்

இடம்பெயர்ந்தோருக்கு வைத்திய சேவை வழங்க முன்வாருங்கள். வைத்தியர்களிடம் சுகாதார அமைச்சு வேண்டுகோள்

Vanni_IDP_Camp வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் வவுனியா மெனிக்பாம் பிரதேசத்திலுள்ள நிவாரணக் கிராமங்களில் ஒரு வாரத்துக்கும் மேல் தங்கியிருந்து அங்குள்ளோருக்கு வைத்திய சேவைகளை வழங்க முன்வருமாறு சுகாதார அமைச்சின் அனர்த்த நிவாரணப் பிரிவு சகல வைத்தியர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை சுகாதார அமைச்சின் அனர்த்த நிவாரணப் பிரிவு வைத்தியர்களான துஷார ரணசிங்க மற்றும் ஈஷ்வர கொடிகார ஆகியோருடன் 0112684003, 0602056993 எனும் தொலைபேசி இலக்கங்களினூடாகத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐ.நா. செயலாளா; இன்று இலங்கை விஜயம்

bankeemoon.jpgஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று  இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். ஐ.நா. செயலாளர் இன்று நள்ளிரவு 11.25 மணிக்கு கட்டுநாயக்க சர்வவேதச விமான நிலையத்தில் வந்திறங்கவுள்ளார் என வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்துக் கலந்துரையாட ஐ.நா. செயலாளர் நாளை அங்கு செல்லவுள்ளார் என்றும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார். இதேவேளை,  பயங்கரவாதப் பிடியிலிருந்து நாடு முழுமையாக விடுவிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கும்; முதலாவது சர்வதேசப் பிரதிநிதி ஐ.நா. செயலாளராவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கனகரத்தினத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: இரா.சம்பந்தன் தகவல்

kanagaratnam.jpgவன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்து ஓமந்தைப் பகுதியில் உள்ள இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினத்தின் பாதுகாப்புக்காக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.

பிரபாகரனின் மரண சான்றிதழை வழங்குவதற்கு இலங்கை உறுதி:இந்திய பாதுகாப்பு ஆலோசகர்

narayanana.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் உத்தியோகபூர்வமான மரணச் சான்றிதழை வழங்குவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது என்று இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஞாயிறு நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பிரபாகரனின் அடையாளம் தொடர்பாக பலவிதமான சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கிளப்பப்படுகின்றன. இது தொடர்பில் இந்திய அரசாங்கம் மரபணுச் சோதனைக்கு அன்றேல் அதிலும் தெளிவான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளதா? என இந்திய பெண் ஊடகவியலாளர் ஒருவர் வினவியதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில், “இலங்கை அரசாங்கமானது பகிரங்கமான உறுதிமொழியை வழங்குகின்ற நிலையில் நாம் அதனை ஏற்போம். இருந்தும் நாம் இலங்கை அரசாங்கத்தின் மரணச் சான்றிதழுக்காக காத்திருப்போம். அதன் மூலமாக ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை மூடிவிட முடியும். இதற்கு மேலாக எம்மால் எதையும் செய்யமுடியாது. இந்த விடயம் தொடர்பாக அதிகாரிகளுடனான பேச்சுகளின் போதும் நாம் வினவியிருந்தோம். இலங்கை ஜனாதிபதியின் பிரசன்னத்தின் முன்பாக கூட நாம் இதனைக் குறித்து கேள்வியெழுப்பி இருந்தோம். இதன்போது பிரபாகரன் தொடர்பான உத்தியோகபூர்வமான மரணச் சான்றிதழை வழங்குவதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்” என்றார்.

மன்மோகன் 2வது முறையாக பிரதமராக இன்று பதவியேற்கிறார்

manmohan_soniya.jpgபிரதமராக 2வது முறையாக இன்று மன்மோகன் சிங் பதவியேற்கிறார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். இன்று மாலை 6.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்த நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்த பதவியேற்பு விழா ஒரு மணி நேரம் தள்ளி வைக்கப்பட்டு நடைபெறுகிறது.

2வது முறையாக மன்மோகன் சிங் பிரதமராக பதவியேற்கவுள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்பார்கள். 63 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதித்துறை அமைச்சராக பிரணாப் முகர்ஜி , உள்துறைக்கு ப.சிதம்பரம், பாதுகாப்புக்கு ஏ.கே.அந்தோணி, வெளியுறவுத்துறைக்கு கமல்நாத், மனித வளத்துறைக்கு கபில் சிபல், சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு குலாம் நபி ஆசாத் நியமிக்கப்படக் கூடும்.